கர்ணன் ஏன் சிறந்த ‘கொடை வள்ளல்’ தெரியுமா?
அடுத்தவர்களுக்கு தானம் வழங்குவதற்கு மனம் வேண்டும். அவ்வாறு தானம் அளிப்பதும் மனதிலிருந்து விருப்பத்தோடு செய்ய வேண்டுமே தவிர, கடமைக்காக செய்யக்கூடாது. அதனால்தான் உலகில் எண்ணற்றோர் ஏழைகளுக்கு தானம் வழங்கினாலும், இன்று வரை கர்ணனையே ‘மிகச்சிறந்த கொடை வள்ளல்’ என்று குறிப்பிடுகிறோம். அதைப்பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
ஒரு சமயம் அர்ஜுனன், கிருஷ்ணரிடம், “என்னுடைய அண்ணன் தருமரும் நிறைய தான தர்மங்கள் செய்கிறார். இருப்பினும், ஏன் கர்ணனையே சிறந்த கொடை வள்ளல்? என்று கூறுகிறீர்கள்?” என்று கேட்கிறார். இதற்கு கிருஷ்ணர் சிரித்துக்கொண்டே, “நீ என்னுடன் கிளம்பி வா!” என்று சொல்லி அர்ஜுனனை கூட்டிச் செல்கிறார். இருவரும் அந்தணர் வேடம் பூண்டு தருமரின் மாளிகைக்குச் செல்கிறார்கள்.
தருமர் அவர்கள் இருவரையும் வரவேற்று உள்ளே கூட்டிச் செல்கிறார். அப்போது கிருஷ்ணர், “எங்களுக்கு யாகம் நடத்த உலர்ந்த சந்தனக்கட்டைகள் கொஞ்சம் வேண்டும்” என்று கேட்கிறார். அந்த சமயம் வெளியில் பயங்கரமாக மழைப் பெய்துக் கொண்டிருக்கிறது. இதனால் தருமரால் அவர்களுக்கு உலர்ந்த சந்தனக்கட்டைகளை கொடுக்க முடியவில்லை. அதனால், ‘‘இப்போது என்னால் முடியாது” என்று சொல்லி அனுப்பி விடுகிறார்.
அடுத்து அர்ஜுனனும், கிருஷ்ணரும் கர்ணனுடைய மாளிகைக்கு போகிறார்கள். கர்ணனிடம் சென்று, “எங்களுக்கு உலர்ந்த சந்தனக்கட்டை கொஞ்சம் வேண்டும் யாகம் நடத்துவதற்கு” என்று கேட்கிறார்கள். உடனே கர்ணன் உள்ளே சென்று ஒரு கோடரியை எடுத்து வந்து அந்த மாளிகையின் கதவு, ஜன்னல்களை இடித்து அதிலிருந்த சந்தனக் கட்டைகளை கிருஷ்ணரிடம் கொடுத்து, “இதை வைத்து யாகம் நடத்திக்கொள்ளுங்கள்” என்று கூறுகிறார்.
இப்போது கிருஷ்ணர், அர்ஜுனனைப் பார்த்து சொல்கிறார், “தருமனிடமும் இதுபோல கதவு, ஜன்னலை உடைத்து சந்தனக்கட்டைகளை கொடுக்கச் சொல்லியிருந்தால் கொடுத்திருப்பார். ஆனால், நாம் கேட்காமலேயே நமக்கு செய்ய வேண்டும் என்று கர்ணன் செய்தார். இந்த இடத்தில்தான் தருமரும், கர்ணனும் வேறுபடுகிறார்கள். கர்ணன் விருப்பத்தின் காரணமாக தானம் செய்கிறார். ஆனால், தருமரோ கடமையின் காரணமாக தானம் செய்கிறார். கடமைக்குச் செய்யாமல் தனது விருப்பத்தின் பெயரில் செய்யும் தான தர்மம்தான் என்றைக்குமே நிலைத்திருக்கும். அதனாலேயே கர்ணனை அனைவரும் ‘சிறந்த கொடை வள்ளல்’ என்று அழைக்கிறார்கள்” என்று கிருஷ்ணர் கூறினார்.