பகவான் மகாவிஷ்ணு ஏன் ஹயக்ரீவராக அவதரித்தார் தெரியுமா?

sri hayagrivar
sri hayagrivar
Published on

கவான் மகாவிஷ்ணு மச்ச ரூபம், கூர்ம ரூபம், வராக ரூபம், நரசிம்ம  ரூபம் என பல ரூபங்களில் அவ்வப்போது அவதாரம் செய்து அசுரர்களை வதைத்து தேவர்களைக் காத்தருளினார்.  இதுபோலவே மகாவிஷ்ணு குதிரை முக வடிவம் தாங்கி அவதாரம் செய்து மது, கைடபன் என்ற அசுரர்களை அழித்தார். மகாவிஷ்ணுவின் குதிரை முகமும் மனித உடலும் கொண்ட இந்த ரூபம் ஸ்ரீ ஹயக்ரீவர் என்று அழைக்கப்படுகிறது.  மகாவிஷ்ணு ஏன் ஹயக்ரீவராக அவதாரம் செய்தார் என்பதை இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.

ஒரு சமயம் குதிரை முகத்தைக் கொண்ட மது, கைடபன் என்ற அசுரர்களுக்கு படைக்கும் தொழிலைத் தாங்கள் மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எழ, படைக்கும் கடவுளான பிரம்மாவிடம் இருந்து வேதங்களை அபகரித்துக் கொண்டு சென்றனர். அவ்வாறு அபகரித்துச் சென்ற வேதங்களை பாதாள லோகத்தில் மறைத்து வைத்தனர். இதன் காரணமாக பிரம்மாவின் படைக்கும் தொழில் முற்றிலுமாக நின்று போனது. இதனால் கவலை அடைந்த பிரம்மா, மகாவிஷ்ணுவிடம் முறையிட, அவரும் குதிரை முக அசுரர்களுடன் போரிட குதிரை முக வடிங்கொண்டு அவதரித்தார். இதுவே ஸ்ரீ மகாவிஷ்ணு ஹயக்ரீவராக அவதரித்த காரணமாகும்.

ஒரு ஆவணி மாதம் திருவோண நட்சத்திரத்தில் பௌர்ணமி திதியில் அழகிய நீண்ட நாசியுடனும், இரண்ட பெரிய மிளிரும் காதுகளுடனும், குதிரை முகத்துடனும், சூரிய ஒளிக்கதிர்கள் பிடரிக் கேசங்களாய் அமைய, பூமி நெற்றியாய் அமைய, கங்கை, சரஸ்வதி இரண்டு புருவங்களாய் அமைய, சந்திர, சூரியர்கள் இரண்டு கண்களாய் அமைய, சந்தியா தேவதைகள் நாசித் துவாரங்களாய் அமைய, பித்ரு தேவதைகள் பற்களாய் அமைய, பிரம்ம லோகங்கள் இரண்டும் உதடுகளாய் அமைய காளராத்திரி கழுத்தாய் அமைய திவ்ய தேஜசுடன் ஸ்ரீ ஹயக்ரீவர் அவதாரம் செய்தார். ஸ்ரீ ஹயக்ரீவர் எப்போதும் தூய வெள்ளை நிறத்தில் இருப்பார்.  வேதங்கள், சாஸ்திரங்கள், அறுபத்து நான்கு கலைகள் என அனைத்திற்கும் ஆதாரமானவர்
ஸ்ரீ ஹயக்ரீவர்.

ஸ்ரீ ஹயக்ரீவர் பாதாள லோகம் சென்று மது, கைடப அசுரர்களை வதம் செய்தார்.  பாதாள லோகத்திலிருந்து வேதங்களை மீட்டுக் கொண்டு வந்து பிரம்மனிடம் ஒப்படைத்தார்.  மகாவிஷ்ணு குதிரை முகத்துடனும்  மனித உடலுடனும் ஹயக்ரீவராக அவதரித்து அசுரர்களை வதம் செய்த பின்னரும் ஹயக்ரீவரின் உக்கிரம் தணியாத காரணத்தினால் அவருடைய கோபத்தையும் உக்கிரத்தையும் தணிக்க வேண்டி தாயார் மகாலட்சுமி அவருடைய மடியில் அமர்ந்தார். இதனால் கோபம் தணிந்தது.  இதன் பின்னர் சாந்தமாகக் காட்சியளித்தார். இந்த வடிவத்தினை ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் என்று  வணங்குகிறோம். அசுரர்களால் தங்கள் புனிதத்தன்மை குறைந்துபோனதாக வேதங்கள் வருந்தின. இதனால் தன்னுடைய மூச்சுக் காற்றால் ஹயக்ரீவர் வேதங்களைப் புனிதமாக்கினார். வேதங்களை மீட்டதால் ஞானத்தின் வடிவமாகவும், ஸ்ரீ மகாலட்சுமி தாயாருடன் காட்சி தருவதால் செல்வத்திற்கு அதிபதியாகவும் ஹயக்ரீவர் விளங்குகிறார். மாணவ, மாணவியர்
ஸ்ரீ ஹயக்ரீவரை அனுதினமும் வழிபட்டு வந்தால் கல்வியில் சிறந்து  விளங்கலாம்.

இதையும் படியுங்கள்:
அற்ப ஆயுசு கொண்டவை என நாம் நினைக்கும் ஈசலின் அதிசய வாழ்க்கை முறை தெரியுமா?
sri hayagrivar

கடலூர் மாவட்டம், திருவஹீந்திரபுரம் தேவநாதப்பெருமாள் கோயிலில் ஹயக்ரீவருக்கென ஒரு தனி சன்னிதி அமைந்துள்ளது.

செங்கற்பட்டு நகரத்திற்கு அருகில் செட்டிபுண்ணியம் என்ற ஊரில் உள்ள தேவநாதப்பெருமாள் கோயிலிலும் ஹயக்ரீவர் எழுந்தருளியுள்ளார். சுமார் ஐநூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்த இத்தலத்தில்  குதிரை முகம் கொண்ட ஹயக்ரீவமூர்த்தி நான்கு திருக்கரங்களுடன் சங்கு, சக்கரதாரியாக யோக நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

புதுச்சேரியில் முத்தியால்பேட்டைப் பகுதியில் ஹயக்ரீவருக்கென பிரத்யேகமாக ஒரு தனிக்கோயில் அமைந்துள்ளது.

வாய்ப்பு கிடைக்கும்போது இக்கோயில்களுக்குச் சென்று ஸ்ரீ ஹயக்ரீவரை வணங்கி கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com