கர்ணனை ஏன் ‘தலைச்சிறந்த வீரன்’ என்று பாராட்டினார் ஸ்ரீ கிருஷ்ணர் தெரியுமா?
மகாபாரதத்தில் கர்ணனுக்கும், அர்ஜுனனுக்கும் இடையில் சிறந்த வீரன் யார்? என்ற போட்டி எப்போதுமே ஏற்படுவதுண்டு என்பதை நாம் அனைவருமே அறிவோம். ஆனால், ஒருமுறை ஸ்ரீ கிருஷ்ணரே கர்ணனை சிறந்த வீரன் என்று பாராட்டினார் என்பது தெரியுமா? அதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
குருக்ஷேத்திர போரில் அர்ஜுனனுக்கும், கர்ணனுக்கும் ஆக்ரோஷமாக போர் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இவர்கள் இருவரில் யார் வெற்றி பெறுவார்கள் என்று தெரியாத அளவிற்கு போர் நடந்துக் கொண்டிருக்கிறது. அர்ஜுனன் ஒரு பயங்கரமான அஸ்திரத்தை கர்ணனின் தேரைப் பார்த்து எய்கிறான். இதனால், கர்ணனின் தேர் 100 அடி தூரம் பின்னே தள்ளிச் சென்று நிற்கிறது. இருப்பினும், கர்ணன் மனம் தளராது தன்னுடைய தேரை முன்னே கொண்டு வந்து நிறுத்தி அர்ஜுனனை நோக்கி ஒரு அஸ்திரத்தை எய்கிறான். அது அர்ஜுனனின் தேரை 10 அடி தூரம் பின்னால் தள்ளிக்கொண்டு போகிறது. இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீகிருஷ்ணர், கர்ணனைப் பார்த்து, “ஆஹா! அற்புதம் கர்ணா” என்று பாராட்டுகிறார்.
இதைப் பார்த்த அர்ஜுனன், கிருஷ்ணரிடம், ”நான் எய்த அஸ்திரம் கர்ணனின் தேரை 100 அடி பின்னுக்கு நகர்த்திச் சென்றது. கர்ணன் எய்த அஸ்திரமோ நம் தேரை வெறும் 10 அடிதான் பின்னுக்கு நகர்த்திச் சென்றது. ஆனால், நீங்கள் என்னை பாராட்டாமல் கர்ணனை புகழ்கிறீர்களே ஏன்?” என்று கேட்டான்.
அதற்கு ஸ்ரீ கிருஷ்ணர் சிரித்துக்கொண்டே அர்ஜுனனிடம் கூறுகிறார், “இது தூரக்கணக்கை சார்ந்தது அல்ல. பாரக்கணக்கை சார்ந்தது. உன்னுடைய தேரில் ஒரு தேரோட்டியும், ஒரு வீரனும் இருப்பதாகவே நினைத்துக்கொண்டிருக்கிறாய். கொஞ்சம் உன்னுடைய தேரின் கொடியைப் பார். அதில் அஞ்சனை மைந்தன் அனுமன் இருக்கிறார். அனுமன் இருக்கும் இடத்தில் மந்திர சக்திகளும் பலனற்றுப் போகும். நான் வேண்டிக்கேட்டுக் கொண்டதால், உன்னுடைய தேரில் வந்து இருந்து உன்னையும், உன்னுடையத் தேரையும் பாதுகாத்துக் கொண்டிருக்கிறார். அது மட்டுமில்லாமல், உன்னுடைய தேரில் நானே அமர்ந்திருக்கிறேன்.
கர்ணன் பயங்கரமான அஸ்திரத்தை உனது தேரை நோக்கி எய்தபோது அனுமன்தான் ‘மகிமா’ என்கிற சக்தியை பயன்படுத்தி இந்தத் தேரை பயங்கர பாரமுடையதாக மாற்றினார். இருப்பினும், அனுமனின் சக்தியை மீறி கர்ணன் எய்த அம்பு உன்னுடைய தேரை பத்து அடி தூரம் பின்னே தள்ளிக்கொண்டு போயிருக்கிறது. அதனால்தான் கர்ணனின் அஸ்திர பிரயோகத்தைப் பார்த்து நானே ஒருகணம் திகைத்துப் போனேன். இத்தகைய மாவீரனை பாராட்டாமல் எப்படியிருக்க முடியும் அர்ஜுனா?” என்று கேட்டார். கர்ணன் கொடைவள்ளலில் மட்டும் சிறந்தவன் அல்ல, வீரத்திலும் சிறந்தவன் என்பதை இந்நிகழ்வு தெளிவாக உணர்த்துகிறது.