எல்லையில்லா கருணைக் கடாட்சமாக விளங்கும் தொட்டமளூர் ஸ்ரீகிருஷ்ணர்!

எல்லையில்லா கருணைக் கடாட்சமாக விளங்கும் தொட்டமளூர் ஸ்ரீகிருஷ்ணர்!

பெங்களூரூவில் இருந்து மைசூர் செல்லும் சாலையில் சென்னப்பட்டினத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது தொட்டமளூர் ஸ்ரீ நவநீதகிருஷ்ணர் கோயில். சயன தோஷம், புத்திர தோஷம் போன்ற தோஷங்களுக்கும் பரிகாரத்தலமாக விளங்குகிறது இத்திருக்கோயில்.

நான்காம் நூற்றாண்டில் ராஜேந்திரசிம்ம சோழன் எனும் மன்னன் இக்கோயிலை கட்டினார். ராஜராஜ சோழன் காலத்து கல்வெட்டுகளும் இங்கு காணப்படுகின்றன. கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரத்தை வணங்கி உள்ளே சென்றால், மூலவர் தரிசனம் காணலாம். இங்கு மூலவராக ராம அப்ரமேயர் எழுந்தருளியுள்ளார். இந்தப் பெருமாளை ஸ்ரீராமர் வழிபாடு செய்ததாகக் கூறுகின்றனர். அப்ரமேயர் என்ற சொல்லுக்கு எல்லை இல்லாதவன் என்று பொருள். விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் பெருமாளுக்கு, ‘அப்ரமேயர்’ என்னும் திருநாமம் வருவது குறிப்பிடத்தக்கது.

அடுத்து, தனிச் சன்னிதியில் கிழக்கு பார்த்த வண்ணம் அரவிந்தவல்லி தாயார் அருள்பாலிக்கிறார். இவரை வெள்ளிக்கிழமைகள் தோறும் செந்தாமரை மலர்களால் அர்ச்சித்து வழிபட்டால் செல்வம் சேரும். நவராத்திரி, வரலட்சுமி விரதம் முதலிய நாட்களில் தாயாருக்கு சிறப்பான திருமஞ்சனம் நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை மாலை வேளைகளில் அரவிந்தவல்லி தாயாரை வில்வார்ச்சனை செய்து தொடர்ந்து வழிபட்டு வந்தால் தரித்திரம், பீடை, வறுமை அகலும்.

தவழும் கண்ணன்: பிராகார வலம் வருகையில், கிழக்கு பார்த்த கோலத்தில் கையில் வெண்ணெய் வைத்துக்கொண்டு குழந்தை கிருஷ்ணர் தலையை திருப்பி தவழும் திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். சுருட்டை தலை முடி, கழுத்தில் முத்துமாலை, அதில் புலி நகம், மாங்காய் கம்மல், வளையல், மோதிரம், இடுப்பில் அரைஞாண் கயிறு, கால்களில் கொலுசு அணிந்து தவழும் நவநீதகிருஷ்ணன் அப்படி ஒரு அழகு. சாளக்ராம கல்லில் உருவான இந்த நவநீதகிருஷ்ணனை மகான் வியாசராஜர் பிரதிஷ்டை செய்துள்ளார். மகான் ஸ்ரீ ராகவேந்தர் இக்கோயிலில் தங்கி வழிபாடு செய்துள்ளார்.

ராம அப்ரமேயர்: தொட்டமளூர் தவழும் குழந்தை கண்ணனை தரிசிக்க மகான் புரந்தரதாசர் வந்தபோது கோயில் மூடப்பட்டிருந்தது. உடனே அவர் வெளியில் இருந்தபடியே ‘ஜெகதோதாரணா... அடிசிதள யசோதா’ எனும் கீர்த்தனையை பாட, கோயில் கதவு தானே திறந்துகொண்டது. அப்போது நவநீதகிருஷ்ணன் தனது தலையைத் திருப்பி புரந்தரதாசரை எட்டிப் பார்த்தாராம். அதனால்தான் இன்றும் இக்கோயில் சன்னிதியில் கண்ணன் தவழும் நிலையில் தலையை திருப்பி பார்த்தவண்ணம் காட்சி தருகிறார்.

இக்கோயிலின் நவநீதகிருஷ்ணன் சன்னிதி வாசல் அருகில் துலாபாரம் அமைக்கப்பட்டுள்ளது. புத்திர பாக்கியத் தடை உள்ளவர்கள் இங்கு வந்து நவநீதகிருஷ்ணனுக்கு வெண்ணெய் நைவேத்தியம் செய்து வழிபடுகிறார்கள். புத்திர பாக்கியம் கிட்டியதும் மீண்டும் இங்கு வந்து குழந்தையின் எடைக்கு எடை வெல்லம் துலாபாரம் செய்கிறார்கள். தங்கம், வெள்ளி, மரத்தினால் ஆன தொட்டில்களையும் கண்ணன் சன்னிதியில் நன்றியுடன் சமர்ப்பித்து மகிழ்கிறார்கள்.

ஆலயத்தில் சுதர்சனர், நரசிம்மர், வேணுகோபாலர், மணவாள மாமுனிகள், ராமானுஜர், வேதாந்த தேசிகர் ஆகியோருக்கும் சன்னிதிகள் உள்ளன. ராஜகோபுரத்தின் எதிரில் புரந்தரதாசர் மண்டபம் உள்ளது. புரந்தரதாசர் இங்கிருந்துதான் கண்ணன் கீர்த்தனையை பாடி தரிசனம் பெற்றதாகக் கூறப்படுகிறது.

அமைவிடம்: பெங்களூரூவில் இருந்து மைசூர் செல்லும் சாலையில் 58 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சென்னப்பட்டினா என்ற ஊர். இங்கிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது தொட்டமளூர் கிருஷ்ணர் கோயில்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com