lord siva - Parvathi devi ganga snanam
lord siva - Parvathi devi ganga snanam

பாவம் தீர்க்குமா கங்கை நீராடல்: சிவபெருமான் நிகழ்த்திய திருவிளையாடல் மர்மம்!

Published on

யிலாயத்தில் ஒருசமயம் சிவபெருமானும் பார்வதி தேவியும் உரையாடிக் கொண்டிருந்தனர். அப்போது பார்வதி தேவிக்கு ஒரு சந்தேகம் தோன்றியது. அதை கயிலைநாதனாம் ஈசனிடம் கேட்க ஆரம்பித்தார். அதாவது, ‘மக்கள் கங்கையில் நீராடினால் அவர்களது பாவம் போய்விடும் என்று நீராடுகிறார்களே, அவர்களின் அனைத்துப் பாவங்களும் போய்விடுமா?’ என்பதுதான் அந்தக் கேள்வி.

அதற்கு சிவபெருமான், தனது பதிலை ஒரு திருவிளையாடலாக நடத்திக்காட்ட எண்ணி, பார்வதி தேவி என்ன செய்ய வேண்டும் என்பதைக் கூறினார். அதன்படி சிவபெருமான் வயதான ஒரு ரிஷி போலவும், பார்வதி தேவி ரிஷி பத்தினியாகவும் மாறினார்கள்.

இதையும் படியுங்கள்:
வருடம் முழுக்க கவசத்தோடு காட்சி தரும் ஈசன் 3 நாட்கள் மட்டும் சுயம்பு மூர்த்த தரிசனம்!
lord siva - Parvathi devi ganga snanam

கங்கையில் நீராடிவிட்டு பக்தர்கள் வரும் வழியில், ஒரு சிறு பள்ளம் தோன்றச் செய்து, சிவபெருமான் அதில் விழுந்து தத்தளித்தபடி இருந்தார். பார்வதி தேவி அந்தப் பள்ளத்தின் அருகே நின்று கொண்டு, கங்கா ஸ்நானம் முடித்துவிட்டு வருவோரிடம் தனது கணவரை காப்பாற்றும்படி கூக்குரலிட்டபடி இருந்தார். இதன்படி இருவரும் ஏற்கெனவே தாங்கள் பேசிக்கொண்டபடி நாடகத்தை அரங்கேற்றினர்.

அந்த சமயத்தில் கங்கையில் நீராடி விட்டு வந்த பலரும், பள்ளத்தில் கிடந்த ரிஷி வடிவில் இருந்த சிவபெருமானை வெளியே தூக்க வந்தபோது, பார்வதி தேவி தனது கணவர் ஒரு உத்தமமான ரிஷி என்றும், அவரை பாவம் செய்தவர் தொட்டால் மறுகணமே சாம்பலாகி விடுவார்கள் என்றும் கூறி எச்சரிக்கை செய்தார். இதனால் உதவ வந்த அனைவரும் பயந்து அந்த இடத்தை விட்டு நகர ஆரம்பித்தனர்.

இதையும் படியுங்கள்:
சூரசம்ஹார மறுநாள் நடைபெறும் திருமுருகக் கல்யாணத்தின் பிரமிக்க வைக்கும் ரகசியம்!
lord siva - Parvathi devi ganga snanam

அப்பொழுது ஒருவர் மட்டும் துணிந்து வந்து பள்ளத்தில் இருந்தவரை தூக்க முனைந்தார். பார்வதி தேவியார் அவரையும் எச்சரிக்கை செய்தார். ஆனால், அவர் தான் இப்பொழுதுதான் கங்கையில் நீராடிவிட்டு வருவதாகவும் தன்னுடைய பாவங்கள் எல்லாம் கங்கையில் கரைந்து விட்டன என்றும் கூறியபடி அவரைத் தூக்க பள்ளத்தில் இறங்கினார்.

அந்த பதிலைக் கேட்டு சிவபெருமானும் பார்வதியும் மிகவும் மகிழ்ந்தார்கள். கங்கையில் நீராடிவிட்டு வந்த அனைவரிலும் அவர் ஒருவரே உண்மையான பக்தன்  என்று அவரது செய்கையின் மூலம் திருப்தி கொண்டார்கள். தம்பதி சமேதராக அவருக்கு சுய ரூபத்தில் காட்சி கொடுத்து, ஆசி கூறி மறைந்தார்கள் சிவபெருமானும் பார்வதி தேவியும்.

எந்தச் செயலையும் நம்பிக்கையோடும், சிரத்தையோடும், ஆத்மார்த்த பக்தியோடும் செய்து வந்தால், அதற்கு உண்டான பலன் கிடைக்கும் என்பது நிச்சயம்.

logo
Kalki Online
kalkionline.com