ஸ்ரீகிருஷ்ணரால் நிர்மாணிக்கப்பட்ட துவாரகை!

ஸ்ரீகிருஷ்ணரால் நிர்மாணிக்கப்பட்ட துவாரகை!
Published on

ந்திய வரைபடத்தின் வடமேற்கில் மாங்காய் வடிவில் அமைந்திருக்கிறது குஜராத் மாநிலம். அந்த மாநிலத்தின் நுனியில் இருப்பதுதான் துவாரகா. வடக்கத்தியர்கள் இதை, ‘த்வார்க்கா’ என்று உச்சரிக்கிறார்கள். முதன் முதலாக துவாரகாவில் ஸ்ரீகிருஷ்ணர் ஆலயம் கிருஷ்ணரின் பேரன் வஜ்ரநாபா என்பவரால் கட்டப்பட்டதாம். தற்போது இருக்கும் ஆலயம் 6ம் நூற்றாண்டில் இருந்து 7ம் நூற்றாண்டுக்குள் கட்டப்பட்டு இருக்கலாம் என்று ஆய்வுகள் சொல்கின்றன. ஐந்து அடுக்குகளைக் கொண்ட இந்த ஆலயம், சுண்ணாம்புக் கற்களாலும் மணலாலும் கட்டப்பட்டிருக்கிறது. நாளொன்றுக்கு ஐந்து முறை இந்த ஆலயத்தில் கொடி ஏற்றப்படுகிறது.

பக்தர்கள் ஆலயத்துக்குள்ளே நுழைவதற்கு, ‘ஸ்வர்க்க துவாரம்’ என்ற வழியும், வெளியே வர,  ‘மோட்ச துவாரம்’ என்ற வழியும் தனித்தனியே உள்ளன. ஆங்காங்கே கேமிராக்கள் வைக்கப்பட்டு, ஆலயத்துக்குள் வருபவர்கள் கண்காணிக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றனர். ஸ்ரீகிருஷ்ணர் இங்கே கல்யாண மாப்பிள்ளைக் கோலத்தில் காட்சி அளிக்கிறார். அதுமட்டுமின்றி, குழந்தை போலவும், அரசரைப் போலவும்கூட பல வகையான கோலங்களில் அருள்பாலிக்கிறார். அதற்கேற்ப அவரது ஆடை அலங்காரங்களையும் அவ்வப்போது மாற்றுகிறார்கள். ஸ்ரீகிருஷ்ணருக்கு திருமஞ்சன சேவையும் உண்டு.

சந்திரமௌலீஸ்வரர், விநாயகர், ராதிகாஜீ, லட்சுமி நாராயணன், ஆஞ்சனேயர், கோபால கிருஷ்ணர், லட்சுமி, சத்தியபாமா, சரஸ்வதி, பலராமர், கருடர், மாதவராய், தேவகி, ராதாகிருஷ்ணர், புருஷோத்தமர், ஸ்ரீ அம்பிகா, காயத்ரி தேவி, காசி விஸ்வநாதர், ஸ்ரீ சத்தியநாராயணர், மகாதேவ், ஸ்ரீ உசீஷ்வரர் எனப் பல கடவுளர்களுக்கும் கோயிலில் தனித்தனியே சன்னிதிகள் இருக்கின்றன. குரு தத்தாத்ரே, ஸ்வாமி ஸ்வரூபானந்தர் போன்ற ஆன்மிகத் தலைவர்களுக்கும் சன்னிதிகள் உண்டு.

கடலுக்குள் உள்ளதாகக் கூறப்படும் பழைய துவாரகை
கடலுக்குள் உள்ளதாகக் கூறப்படும் பழைய துவாரகை

கம்சனின் மைத்துனனான ஜராசந்தன், மக்களைத் துன்புறுத்தாமல் இருப்பதற்காக சௌராஷ்டிராவின் மேற்குக் கரையோரத்தில் சமுத்திர ராஜனிடம் இருந்து நிலம் பெறப்பட்டுக் கோமதி நதிக்கரையில் இந்தக் கோயில் நிர்மாணிக்கப்பட்டதாம். ஸ்ரீகிருஷ்ணரின் ஆணைப்படி விஸ்வகர்மாவால் உருவாக்கப்பட்டதுதான் துவாரகை நகரம். கண்கவர் நீரூற்றுகள், பூங்காக்கள், மாட மாளிகைகள் என்று பேரழகுடன் அமைக்கப்பட்டதாம் அந்தப் பழைய துவாரகை. துவாரகைக்கு, ‘சுதாமபுரி' என்றும் ஒரு பெயர் உண்டு. காரணம், சுதாமர் எனப்படும் குசேலர் இங்குதான் பிறந்தார். இங்கு குசேலருக்கென்று தனிக் கோயிலும் இருக்கிறது.

கடலுக்குள் உள்ளதாகக் கூறப்படும் பழைய துவாரகை
கடலுக்குள் உள்ளதாகக் கூறப்படும் பழைய துவாரகை

தற்போது இருக்கும் துவாரகைக்கு அருகில் அது இருந்ததாகவும், பின்னாளில் கடலில் அது மூழ்கிவிட்டதாகவும் ஐதீகம். மகாபாரதப் போர் முடிந்து 36 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த பூமியை விட்டு, வைகுந்தத்துக்குச் சென்ற பிறகு துவாரகையில் இருந்த பலரும் தங்களுக்குள் சண்டையிட்டு மடிந்தனராம். அர்ஜுனன் துவாரகை சென்று ஸ்ரீகிருஷ்ணரின் பேரர்களை ஹஸ்தினாபுரம் அழைத்துச் சென்ற பிறகு, பழைய துவாரகை நகரம் நீரில் மூழ்கிவிட்டதாம்.

1965ம் ஆண்டு பாகிஸ்தானோடு நடைபெற்ற போரில் துவாரகா நகரைப் பாகிஸ்தான் தாக்கியது. செப்டம்பர் மாதம் ஏழாம் தேதி இரவு நடைபெற்ற இந்தத் தாக்குதலுக்கு, 'ஆபரேஷன் துவாரகா' என்று பெயரும் இட்டது. கராச்சி துறைமுகத்தில் இருந்து 200 கி.மீ. தொலைவில் இருந்த துவாரகையை நோக்கிப் பாகிஸ்தான் கடற்படைக் கப்பல்கள் 20 நிமிடம் சுமார் 50 குண்டுகளை வீசின. ஏறக்குறைய ஒன்றுகூட அதில் வெடிக்கவில்லை என்பதுதான் விசேஷம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com