
எந்த காரியத்தை தொடங்கினாலும் முதலில் பிள்ளையாரை வழிப்பட்டுவிட்டு ஆரம்பிப்பது நம் வழக்கம். விநாயகரை வணங்கி தொடங்கும் எந்த காரியமும் தடையின்றி வெற்றிகரமாக நடந்து முடிக்கும் என்பது நம் மக்களின் நம்பிக்கையாகும். தமிழ்நாட்டில் எண்ணற்ற பிள்ளையார் கோவில்கள் இருந்தாலும், அதில் சிறப்பு வாய்ந்த சில கோவில்கள் மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது. அந்த வரிசையில் ஈச்சனாரி விநாயகர் கோவிலும் (Eachanari Vinayagar Temple) ஒன்றாகும்.
தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஈச்சனாரி என்ற ஊரில் அமைந்திருக்கிறது ஈச்சனாரி விநாயகர் கோவில். வாழ்வில் ஏற்படும் தடைகளை இந்த விநாயகர் நீக்குவதாக பக்தக்கள் கூறுகிறார்கள். இக்கோவிலை பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு மதுரையில் இருந்து பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு ஐந்து அடி உயரமும் மூன்று அடி அகலமும் கொண்ட பிரம்மாண்டமான விநாயகர் சிலை மாட்டு வண்டியில் வைத்துக் கொண்டு செல்லப்பட்டது.
மாட்டு வண்டி ஈச்சனாரி என்ற இடத்தை அடைந்ததும் அதன் அச்சு திடீரென்று உடைந்தது. மக்கள் சிலையை நகர்த்த எவ்வளவோ முயன்று பார்த்தனர். ஆனால், அதை அசைக்க முடியாமல் அங்கேயே நின்றது. இதை பார்த்த மக்கள் விநாயகரே இந்த இடத்தை தேர்ந்தெடுத்து குடியிருக்க விரும்பிய ஒரு தெய்வ செயலாக கருதினர்.
மக்கள் அந்த இடத்திலேயே விநாயக பெருமானுக்கு ஒரு சிறிய கோவிலைக் கட்டினர். இன்று அந்த சிறிய கோவில் பெரிய ஆலயமாக உருவாகி பக்தர்கள் வாழ்க்கையில் உள்ள தடைகளை நீக்கும் புனித ஸ்தலமாக விளங்குகிறது. இது வெரும் கோவில் மட்டுமல்ல. விநாயகரின் விருப்பத்தால் பிறந்த சரித்திரம். இக்கோவிலில் நட்சத்திர அலங்கார பூஜை மிகவும் சிறப்பாக நடைப்பெறும்.
அஸ்வினி முதல் ரேவதி வரையிலான 27 நாட்சத்திரங்களுக்கு ஒவ்வொரு விதமான அலங்காரம் செய்வார்கள். குழந்தைகள் கல்வி, படிப்பில் மென்மேலும் உயர்வதர்காக பக்தர்கள் இந்த விநாயகரிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.
வியாபார விருத்தி, தொழில் மேன்மை, உத்தியோக உயர்வு ஆகியவற்றிற்காக விநாயக பெருமானை வேண்டினால் நிச்சயம் நிறைவேறுவதாக நம்பப்படுகிறது. விநாயகருக்கு நேர்த்திக்கடனாக சிதறு தேங்காய் போடுதல், கொழுக்கட்டை படைத்தல், அருகம்புல் மாலை போடுதல், பாலாபிஷேகம் போன்றவை பக்தர்களால் செய்யப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலுக்கு நீங்களும் சென்று விநாயகரை வழிப்பட்டு அவர் அருளைப் பெறுங்கள்.