ஈசனிடம் உபதேசம் பெற்ற கருங்குருவி!

மதுரை ஸ்ரீ சுந்தரேஸ்வரர் மீனாட்சி அம்மன்
மதுரை ஸ்ரீ சுந்தரேஸ்வரர் மீனாட்சி அம்மன்
Published on

சிவபெருமானின் திருவிளையாடல்களை மையமாக வைத்து ஆவணி மூல திருவிழா மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கொண்டாடப்படுகிறது. அறுபத்தி நான்கு திருவிளையாடல்களில் பன்னிரண்டு முக்கியமான திருவிளையாடல் லீலைகள் இந்த ஆவணி மூல திருவிழாவை முன்னிட்டு நடைபெறும். முதல் நாள் அன்று கருங்குருவிக்கு உபதேசம் செய்த லீலை நடைபெறும்.

ராஜராஜனின் மகன் சுகுண பாண்டியன். இவன் தனது தந்தையின் மறைவுக்குப் பிறகு பதவியேற்ற ஆட்சிக்காலத்தில் கருங்குருவி ஒன்று மதுரைக்கு அருகில் இருந்த ஒரு ஊரில் வசித்து வந்தது. முற்பிறப்பில் இந்தக் குருவி வலிமைமிக்க ஒரு ஆண் மகனாக விளங்கியது. ஆனால், அவன் செய்த  பாவ வினைகளால் இப்பிறவியில் கருங்குருவியாக பிறந்திருந்தான். இந்தக் குருவியை பருந்துகளும் காகங்களும் விரட்டி விரட்டி அடித்தன. குருவி பயத்திலேயே காலம் தள்ளிக் கொண்டிருந்தது. இதனால் ஊரை விட்டுக் கிளம்பி அங்கிருந்த காட்டுக்குள் போய்விட்டது.

அங்கே காகம் போன்ற எதிரி பறவைகள் எதுவும் இல்லாததால் அங்கேயே தனது காலத்தைக் கழித்துக் கொண்டிருந்தது. ஒரு சமயம் சிவனடியார் ஒருவர் அந்தக் கருங்குருவி தங்கியிருந்த மரத்தடியில் இளைப்பாறுவதற்காக அமர்ந்தார். அப்போது அந்த வழியாகச் சென்ற சிலர் அடியவரை வணங்கினர். அவர்களுக்கு அவர் அறிவுரைகள் சொன்னார். மதுரை மாநகரின் பெருமைகளை எடுத்துச் சொன்னவர், “அந்த ஊருக்குச் சென்றாலே நமக்கு பிறவிப்பிணிகள் அனைத்தும் நீங்கிவிடும். அங்குள்ள பொற்றாமரை குளத்தின் தீர்த்தம் உடலில் பட்டாலே சகல வளமும் கிடைக்கும். மோட்சம் உறுதி” என்றார்.

இதை மரத்திலிருந்து கேட்ட குருவி, சிவ நாமத்தை உச்சரித்தபடியே மதுரை நோக்கி பறந்தது. கோயிலுக்குள் நுழைந்து பொற்றாமரை குளத்தின் நீரில்  தன் உடல் படும்படியாக உரசிக் கொண்டு மேல் எழும்பியது. பிராகாரத்தை சுற்றி பறந்து வலம் வந்து மீனாட்சி அம்மன் சன்னிதிக்குள்ளும் சுந்தரேஸ்வரர் சன்னிதிக்குள்ளும் இருந்த உத்தரத்தின் மேல் அமர்ந்து தெய்வ தரிசனம் செய்தது. மூன்று நாட்கள் தொடர்ந்து இப்படி தரிசனம் செய்த அந்தக் குருவியைப் பற்றி அன்னை மீனாட்சி தனது கணவரிடம் கேட்டாள்.

இதையும் படியுங்கள்:
ஃபேன் பாயாக இருப்பதன் சாதக, பாதகங்கள் தெரியுமா?
மதுரை ஸ்ரீ சுந்தரேஸ்வரர் மீனாட்சி அம்மன்

அதன் பூர்வ ஜன்மம் குறித்து அம்பிகையிடம் சுவாமி விளக்கினார். இறைவனும் அந்தக் குருவியின் பக்திக்கு மனம் இறங்கி மிருத்யுஞ்ச மந்திரத்தை உபதேசித்தார். அப்போது அந்தக் கருங்குருவி இறைவனிடம், “எங்கள் இனத்தையே எளியோன் என்னும் பெயர் மாற்றி வலியோன் என வழங்கும்படி கேட்டது. “நீ பலம்மிக்க குருவியாக இருப்பாய். மற்ற பறவைகளை விரட்டும் ஆற்றல் பெறுவாய்” என்று சொல்லி மந்திரத்தை உபதேசித்தார். மேலும், கருங்குருவி இறைவன் வழங்கிய மந்திரத்தை உபதேசித்து முக்திப்பேறு அடைந்தது.

மதுரை மீனட்சி அம்மன் கோயில் ஆவணி முலத் திருவிழாவில் நாளை மறுநாள் கருங்குருவிக்கு ஈசன் உபதேசம் செய்த லீலை நடைபெற உள்ளது. முதல் நாள் கருங்குருவிக்கு உபதேசம் செய்வதும், இரண்டாம் நாள் நாரைக்கு முக்தி கொடுத்தல், மூன்றாம் நாள் மாணிக்கம் விற்றது, நான்காம் நாள் தருமிக்கு பொற்கிழி அளித்தது ஐந்தாம் நாள் உலவா கோட்டை அருளியது, ஆறாம் நாள் பாணனுக்கு அங்கம் வெட்டியது, ஏழாம் நாள் வளையல் விற்றது, எட்டாம் நாள் நரியை பரியாக்கியது, ஒன்பதாம் நாள் பிட்டுக்கு மண் சுமந்தது, பத்தாம் நாள் விறகு விற்றது என பல லீலைகளும் நடத்திக் காட்டப்படும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com