யுகங்கள் மாறினாலும் நிலைத்து நிற்கும் சிவ சொரூப மலை!

Thiruvannamalai annamalaiyar
Thiruvannamalai annamalaiyar
Published on

நினைத்தாலே முக்தி தரும் பஞ்சபூதத் திருத்தலங்களில் ஒன்றாக விளங்குவது திருவண்ணாமலை. மூலவர் அருணாச்சலேஸ்வரர், அம்பிகை உண்ணாமுலை அம்மை. அடி, முடி காண ஒண்ணா அண்ணாமலையார் பிரம்மா மற்றும் திருமாலுக்கு இடையே நிகழ்ந்த, ‘யார் பெரியவர்’ என்ற வாக்குவாதத்தில், ‘அனைவரையும் விட தாமே பெரியவன்’ என உணர்த்த நெருப்புப் பிழம்பு மலையாகத் தோன்றிய தலம் இதுவென சிவபுராணம் குறிப்பிடுகிறது.

பஞ்சபூதத் தலங்களில் இது அக்னி தலமாகும். ஈசன் இங்கு சுயம்பு மூர்த்தமாக அருள்பாலிக்கிறார். தேவார, திருவாசகப் பாடல் பெற்ற திருத்தலங்களில் ஒன்று என்ற பெருமையுடையது. அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் என சமயக்குரவர்கள் நால்வரும் இத்தல பெருமானை குறித்துப் பாடி உள்ளனர்.

இம்மலை கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவும், திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் தங்க மலையாகவும், தற்போது கலி யுகத்தில் கல் மலையாகவும் உள்ளது எனப் போற்றப்படுகிறது. மேலும், சிவபெருமானே மலையாக இத்தலத்தில் திகழ்கிறார் எனவும், இம்மலையை வலம் வருதல் (கிரிவலம்) மிகவும் புண்ணியமாகவும் போற்றப்படுகிறது.

இந்த மலை 260 கோடி ஆண்டுகள் பழைமையானது என பீர்பால் சகானி என்ற விஞ்ஞானி அறிவித்துள்ளார். இங்கு எண்ணற்ற சித்தர்கள் வாழ்ந்து சமாதி அடைந்துள்ளனர். 18 சித்தர்களில் ஒருவரான இடைக்காட்டு சித்தர் இத்தலத்திற்கு உரியவராக விளங்குகிறார். அருணகிரிநாதர், சேஷாத்திரி சுவாமிகள், சற்குரு ஸ்வாமி, பத்ராசல சுவாமி, பாணி பத்தர், விசிறி சாமியார், மூக்குப்பொடி சித்தர், ரமண மகரிஷி, கண்ணாடி சாமியார், குரு நமச்சிவாயர் என எண்ணற்ற சித்தர்கள் அண்ணாமலையில் வாழ்ந்து, பலர் இங்கேயே ஜீவ சமாதி அடைந்தும் உள்ளனர். சில சித்தர்களின் ஆசிரமம் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
கார்த்திகை மாத சங்காபிஷேக மகத்துவம்!
Thiruvannamalai annamalaiyar

இக்கோயில் 24 ஏக்கர் பரப்பளவில் ஆறு பிராகாரங்கள், ஒன்பது ராஜகோபுரங்கள் கொண்டது. ஆயிரம் கால் மண்டபம், 16 கால் மண்டபம், புரவி மண்டபம் என 306 மண்டபங்கள் இக்கோயிலில் உள்ளன. இத்தலத்தில் திருப்புகழ், கந்தர் அனுபூதி, திருவெம்பாவை, அருணாச்சல அஷ்டகம், திருவம்மானை போன்ற நூல்கள் இயற்றப்பட்டுள்ளன. இங்குள்ள முருகன் மீது அருணகிரிநாதர் நிறைய பாடல்களைப் பாடியுள்ளார்.

அருணகிரிநாதருக்கு இக்கோயிலில் விழா எடுக்கப்படுகிறது. காமதகனம் நிகழ்வு இத்தலத்தில் மட்டுமே நடைபெறும் சிறப்பாகும். தேர் திருவிழா, கார்த்திகை தீபம் போன்றவை இங்கு மிகவும் விசேஷமாக நடைபெறும் விழாக்களாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com