கணபதி தெரியும்; கணபதீஸ்வரர் தெரியுமா?

கணபதி தெரியும்; கணபதீஸ்வரர் தெரியுமா?
Published on
Kalki vinayagar
Kalki vinayagar

ரகத முனிவரின் மனைவி விபுதை. அசுர குலத்தைச் சேர்ந்தவர் இவர்களுக்கு அசுர குணம் கொண்ட கஜமுகாசுரன் பிறந்தான். இவன் சிவபெருமானை நோக்கி தவம் இருந்ததால் அவனது தவத்தில் மகிழ்ந்த ஈசன் அவனுக்கு சில வரங்களை வழங்கினார். அதன்படி கஜமுகாசுரனை கொல்பவர் மனிதராகவும் இருக்கக்கூடாது, மிருகமாகவும் இருக்கக்கூடாது என்பதே அந்த வரம். அந்த வரம் பெற்ற அகந்தையில் அவன் தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்தினான். அதையறிந்த சிவபெருமான் திருக்கயிலாய மலையில் ஏழு கோடி மந்திரங்கள் அடங்கிய ஒரு சித்திர மண்டபத்தில் பார்வதியோடு எழுந்தருளினார். அந்த மண்டபத்தின் நடுவே சமஷ்டி பிரணவம், விபஷ்டி பிரணவம் என்ற இரு மந்திரங்கள் அமைந்திருந்தன. சிவபெருமானும் பார்வதியும் அந்த இரண்டு பிரணவங்களையும் நோக்க, அவ்விரு மந்திரங்கள் வடிவாய் யானை முகத்துடனும் மனித உடலும் விநாயகர் அவதரித்தார்.

பிரம்மா, விஷ்ணு புடைசூழ திருக்கயிலாயம் வந்த தேவர்கள் சிவபெருமானிடம் கஜமுகாசுரன் அளித்துவரும் தொல்லையைப் பற்றிக் கூறி முறையிட்டனர். உடனே சிவபெருமான் விநாயகரை அழைத்து கஜமுகாசுரனை வென்று தேவர்களைக் காத்திடுமாறு அருளினார். அதன்படி பூலோகம் வந்த விநாயகர், சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். கணபதி பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபட்ட இறைவன் என்பதால், அவருக்கு கணபதீஸ்வரர் என்ற பெயர் வந்தது.  இத்தலமும், கணபதிச்வரம் என்று பெயர் பெற்றது. விநாயகர் கஜமுகாசுரனை வதம் செய்தபோது, அசுரனின் செங்குருதி பெருகி காட்டாறாகப் பெருகியதால் இத்தலத்துக்கு திருச்செங்காட்டங்குடி என்னும் திருப்பெயரும் உண்டு.

Picasa

ஆலயத்தின் ஐந்து நிலை ராஜகோபுரத்தை கடந்து உள்ளே நுழைந்தால் மூலவர் ஆதி வனநாதர் என்னும் கணபதீஸ்வரர் கிழக்கு பார்த்த வண்ணம் அருள்கிறார். சிறுத்தொண்டருக்காக இத்தல ஈசன் பைரவர் வடிவில் வந்து அருளியதால் உத்ராபதீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். தனி விமானத்துடன் உத்ஸவ மூர்த்தி திருக்கரங்களில் உடுக்கை, திருவோடு, திரிசூலத்துடன் காணப்படுகிறார். தினமும் இவருக்கு பச்சை கற்பூரமும் குங்குமப்பூவும் சாத்தப்படுகின்றன. தனது பக்தை ஒருத்திக்காக பிரசவம் பார்த்த இத்தல அம்பாளின் திருநாமம் சூலிகாம்பாள் என்பதாகும். இத்தல அம்பிகையை வழிபட, தாய்மை அடைந்த பெண்களுக்கு சுகப்பிரசவம் ஆகும் என்கிறார்கள். இக்கோயில் கருவறையில் பசு நெய் சேர்த்து வழிபட்டு அன்னதானம் செய்தால் பாவங்கள் விலகும்.

பொதுவாக, சிவனடியார்களுக்கு ஈசன் உமையுடன் ரிஷபத்தின் மேல் வந்து காட்சி கொடுப்பார். ஆனால், சிறுத்தொண்டருக்கு மட்டுமே முருகப்பெருமானுடன் சேர்ந்து காட்சி கொடுத்த பெருமைமிக்கது இத்திருத்தலம்.

அமைவிடம்: காரைக்காலில் இருந்து 11 கி.மீ., கும்பகோணத்தில் இருந்து 39 கி.மீ. தொலைவில் உள்ளது திருச்செங்காட்டங்குடி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com