காசியில் கங்கா ஆரத்தி தரிசனம்!

காசியில் கங்கா ஆரத்தி தரிசனம்!

காசியில் கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள 84 படித்துறைகளில் தசாஸ்வமேத படித்துறை மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்தப் பகுதியில் பிரம்மா பத்து அஸ்வமேத யாகங்களை நடத்தியதால் இந்தப் படித்துறை, ‘தச அஸ்வமேத படித்துறை’ அதாவது, ‘தசாஸ்வமேத படித்துறை’ என்று அழைக்கப்படுகிறது. இந்த படித்துறையில்தான் காசியின் புகழ்பெற்ற கங்கா ஆரத்தி தினமும் மாலை வேளைகளில் நடைபெறுகிறது.

கங்கை புனித நதியாக உருவானவள். ஏழு புண்ணிய நதிகளில் முதலிடம் பெறுவது கங்கையே. கங்கையில் நீராடினால் பாவங்கள் நீங்கி புனித நிலையினை அடையலாம் என்பது இந்துக்களின் நம்பிக்கை. பெருமைகள் பல பெற்ற கங்கை நதிக்கு நன்றிக்கடனாக நாள்தோறும் மாலை வேளையில் நேரடியாகச் செய்யப்படும் பூஜையே, ‘கங்கா ஆரத்தி’ ஆகும். இந்த மாபெரும் பூஜை கங்கைக் கரையில் மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. இந்த பூஜையைக் காணவும், தரிசனம் செய்யவும் தினமும் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கங்கை நதிக்கரையில் கூடுவது வழக்கமாக இருக்கிறது.

ஒரே நேரத்தில் ஒரே மாதிரி ஆடை அணிந்த ஏழு பண்டாக்களால் இந்த பூஜை செய்யப்படுகிறது. வேத மந்திரங்களின் உச்சரிப்பு, சங்க நாதம், தீப ஆராதனை, நெய்வேத்யம் என பதினாறு வகையாக ஷோடச உபசாரங்களும் செய்து தினமும் மாலையில் ஏழு பண்டாக்கள் கங்கா மாதாவுக்கு ஆரத்தி செய்து வழிபடுகின்றனர். பக்தர்கள் அனைவரும் தரிசனம் செய்வதற்கு ஏதுவாக உயர்ந்த மேடைகளின் மேல் நின்று பூஜாரிகள் நிதானமாக தூபம், தீபம், அலங்கார தீபம், புஷ்பம், சாமரம் என ஆத்மார்த்தமாக கங்கா மாதாவுக்கு சிறப்பாக பூஜை செய்கிறார்கள். புனித கங்கை நதிக்கரையில் ஆரத்திப் பாட்டு என்பது ஒரு முக்கிய நிகழ்ச்சியாகும். இந்த ஆரத்தியைக் காணவரும் பக்தர்கள் மெய்மறந்து ஆரத்தியைக் கண்டு மகிழ்கிறார்கள். கங்கா ஆரத்தியின் சிறப்பினை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. கங்கா ஆரத்தி ஒவ்வொரு நாளும் சரியாக மாலை ஆறு நாற்பத்தி ஐந்து மணிக்குத் துவங்குகிறது. சரியாக எட்டு மணி அளவில் முடிவடைகிறது.

மாலை நான்கரை மணியிலிருந்தே பக்தர்கள் ஆரத்தியை தரிசிக்க இங்கு கூடத் தொடங்குகிறார்கள். தசாஸ்வமேத படித்துறையை அடுத்து சற்று தள்ளி அமைந்துள்ள மற்றொரு படித்துறையிலும் நான்கு பூஜாரிகள் இதேநேரத்தில் கங்கா ஆரத்தியை நடத்துகிறார்கள். பூஜாரிகள் பூஜை நடத்தும் இடத்தின் பின்புறம் சுமார் முன்னூறு நாற்காலிகள் போடப்பட்டுள்ளன. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இலவசமாக இந்த நாற்காலியில் நாம் அமர்ந்து ஆரத்தியைக் கண்டு மகிழலாம்.

கங்கைக்கரையில் படகுகளை நிறுத்தி வைத்துள்ளார்கள். அருகில் உள்ள படகுகளில் அமர்ந்து ஆரத்தியைப் பார்க்க ஒருவருக்கு நூறு ரூபாய் வீதம் வசூலிக்கிறார்கள். சற்றுத் தள்ளி பெரிய வகைப் படகுகளை நிறுத்தி வைத்துள்ளார்கள். தொலைவில் அமர்ந்து பார்த்தால் முழுக்காட்சியையும் பார்த்து மகிழலாம். இத்தகைய பெரிய படகுகளில் முன்வரிசையில் அமர்ந்து பார்க்க ஒருவருக்கு நானூறு ரூபாய் வசூலிக்கிறார்கள். இரண்டாவது வரிசையிலிருந்து கடைசி வரிசை வரை அமர ஒருவருக்கு இருநூறு, முன்னூறு என வாங்குகிறார்கள். கங்கா ஆரத்தி தொடங்குவதற்கு அரைமணி நேரத்துக்கு முன்னர் படகை கங்கையில் செலுத்தி அனைத்து படித்துறைகளையும் சுற்றிக் காண்பிக்கிறார்கள். பின்னர் ஆரத்தி நடைபெறும் இடத்துக்கு முன்னதாக படகினை நிறுத்தி விடுகிறார்கள். நீங்கள் அதில் அமர்ந்தவாறே ஆரத்தியை முழுமையாகக் காணலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com