சோழவரத்திற்கு அருகில், ஞாயிறு என்னும் கிராமத்தில் உள்ளது ஞாயிறு திருக்கோயில். இது சூரியன் வழிபட்ட தலம் என்பதால் ஊர் பெயரும் ஞாயிறு என்றே அழைக்கப்படுகிறது. சென்னையில் உள்ள நவக்கிரக தலங்களில் இது சூரிய தலமாகும். ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பழைமை வாய்ந்த சோழ மன்னர்கள் காலத்தில் கட்டிய கோயில் இது. ஈசனின் பெயர் புஷ்பரதேஸ்வரர், அம்பாள் சொர்ணாம்பிகை.
இத்தல ஈசன் சுயம்புவாகத் தோன்றியவர். தாமரை புஷ்பத்தில் எழுந்தருளியதால் புஷ்பரதேஸ்வரர் எனப் பெயர் பெற்றார். மிகவும் பழைமையான கோயில்களில் மட்டுமே காணப்படும் அஷ்டாங்க விமானம் இக்கோயில் கருவறை விமானமாக அமைந்துள்ளது.
கோயில் தல விருட்சம் நாகலிங்க மரம். 600 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. கண்வ மகரிஷிக்கும் இங்கு சன்னிதி உள்ளது. சுந்தரரின் மனைவி சங்கிலி நாச்சியார் பிறந்த ஊர் இது. இவருக்கும் இங்கு சன்னிதி உள்ளது.
சூரியன் மற்ற கிரகங்களுக்கு தலைமை கிரகம் என்பதால் இங்கு நவக்கிரக சன்னிதி கிடையாது. பிற கிரக தோஷங்களுக்கு அந்தந்த கிரகத்திற்குரிய நாட்களில் இவருக்கு சிவப்பு நிற வஸ்திரம் சார்த்தி கோதுமை மாவு, நெய் கொண்டு விளக்கேற்றி வழிபடுகிறார்கள். சித்திரை மாதம் முதல் ஏழு நாட்கள் அம்பாள், ஈஸ்வரன் மேல் சூரிய ஒளி விழுகிறது. இதனை சூரியன் ஈஸ்வரனுக்கு பூஜை செய்வதாகக் கூறப்படுகிறது. எனவே, அந்த தினங்களில் சிவனுக்கு உச்சிக்கால பூஜைகள் செய்வதில்லை. ஈசனுக்கு முன்புள்ள மண்டபத்தில் சூரியன் சன்னிதி புஷ்பரதேஸ்வரர் சன்னிதியை பார்த்தபடி உள்ளது.
விஸ்வகர்மாவின் மகள் சாயாவை சூரியன் மணந்து கொண்டார். நாளுக்கு நாள் சூரியனின் வெப்பத்தன்மை அதிகமாகவே, தனது நிழலை உருவமாக்கிவிட்டு சென்று விடுகிறாள் சாயா. இதை அறிந்த சூரியன் தனது மனைவியை அழைத்து வர கிளம்பும் முன் சிவ பூஜை செய்தார். அந்த ஜோதி வானில் தோன்றி நகர்ந்து செல்ல சூரியனும் பின் தொடர்ந்தார். அது இங்குள்ள தடாகத்தில் பூத்திருந்த தாமரை மலரில் ஐக்கியமானது. அதிலிருந்து தோன்றிய ஈசன், சூரியன் அவரது மனைவியுடன் சேர்ந்து வாழ அருளினார். சூரியனின் வேண்டுதலின்படி அத்தலத்திலேயே எழுந்தருளினார். ஈசன் இப்படி தாமரை புஷ்பத்தில் எழுந்தருளியதால் புஷ்பரதீஸ்வரர் என பெயர் பெற்றார்.
தம்பதிகளுக்குள் ஒற்றுமை ஏற்படவும், கண் நோய் நீங்கவும், பித்ரு தோஷம் நீங்கவும் வழிபட வேண்டிய மிகவும் தொன்மையான திருத்தலம் இது. சென்னையில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவிலும் சோழவரத்திற்கு அருகிலும் உள்ளது இக்கோயில்.