இன்ப, துன்பத்தில் நம் கூடவே இருக்கும் இறைவன்!

இன்ப, துன்பத்தில் நம் கூடவே இருக்கும் இறைவன்!

ஷீரடி சாயிபாபாவின் 106வது மஹாசமாதி தினம்
Published on

ஞானிகளின் கடைக்கண் பார்வை, மலை போன்ற நம் பாவங்களை அழித்து நம்மை நல்லொழுக்க நெறியில் ஈடுபடுத்துகிறது. அவர்களுடைய சாதாரணப் பேச்சே நமக்கு நல்ல உபதேசங்களை வழங்குகிறது. அத்தகைய மகான்களில் ஒருவரான ஷீரடி ஸ்ரீ சாயிபாபாவின் 106வது மஹாசமாதி ஆண்டு 24.10.2023 விஜயதசமி நன்னாளன்று துவங்குகிறது.

ஸ்ரீ ஷீரடி சாயியின் பக்தர்களில் முக்கியமானவர் தாஸ்கணு. ஸ்ரீ தாஸ்கணு மஹராஜ் என்று சாயி பக்த கோடிகளால் அன்புடன் அழைக்கப்பட்டவர். இவர் ஒரு முறை ஈஷோபநிஷதத்திற்கு மராத்தியில் விளக்க உரை எழுத ஆரம்பித்தார். ஆத்மாவின் மதிப்பு மிக்க உணர்வுகளை பதினெட்டே செய்யுட்களில் விளக்கும் உபநிஷதம் இது.  ஒரு பக்கம் தீயன செய்யத் தூண்டும் மயக்கங்கள், மற்றொரு பக்கம் வாழ்வில் எதற்கும் கலக்கமுறாத முழு மனநலம் வாய்க்கப் பெற்றிருப்பது. இதில் ஒன்று கர்மா, மற்றொன்று ஞானம். இந்த நேர் எதிரிடையான இரண்டு விஷயங்களும் ஏதோ ஓர் புள்ளியில் சந்தித்து கூட்டிணைக்கப்படும் வாய்ப்பு வரும்போது, அந்த உயர்நிலை இணைப்பில் பேதம் எப்படி துடைத்தழிக்கப்படுகிறது என்பதை சுருக்கமாகவும், அற்புதமாகவும் கூறுவதுதான் ஈஷோபநிஷதம். இதுவே இந்த உபநிஷத்தின் மிக மிக மதிப்பு வாய்ந்த கருத்தாகும். தாஸ்கணுவால் இந்த சாராம்சத்தை தெளிவுற விளங்கிக்கொள்ள முடியாததால் பாபாவை சரணடைந்து வழி காட்டும்படி வேண்டினார்.

பாபா அவரிடம், "இவ்விஷயத்தைப் பற்றிய கவலை கொள்ளாதே!  நீ வீட்டுக்குத் திரும்பிப் போகும் வழியில் விலேபார்லேயில் காகா சாஹேபின் வேலைக்காரி உனது சந்தேகங்களைத் தீர்த்து வைப்பாள்" என்றார்.  கல்வி அறிவற்ற ஒரு வேலைக்காரியால் ஒரு உபநிஷதத்திற்கு விளக்கம் எப்படி கிடைக்கும் என்று அங்கிருந்த கற்றறிந்த சிலர் கேலி பேசியபோது பாபாவிடம் மிகுந்த நம்பிக்கையும் மரியாதையும் உள்ள தாஸ்கணு எந்தவிதமான தயக்கமுமின்றி நேராக விலேபார்லே சென்று காகா சாஹேபின் வீட்டில் தங்கினார்.

மறுநாள் ஒரு இனிமையான பாடல் ஒலி கேட்டு எழுந்தார். காகா சாஹேபின் வேலைக்காரனான நாம்யாவின் சகோதரியான ஒரு ஏழைப்பெண் களிப்பாகப் பாடிக்கொண்டே பாத்திரம் துலக்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தார். அவளது மேனியை கிழிந்த துணி ஒன்றே அலங்கரித்துக் கொண்டிருந்தது. ஆனாலும் அவளுடைய மனநிலையில் சந்தோஷத்துக்கு எந்தக் குறைவுமில்லை.

அடுத்த நாள் ராவ் பஹதூர் ப்ரதான் என்பவர் தாஸ்கணுவிற்கு ஒரு ஜதை வேஷ்டி வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தபோது, அவரிடம் தாஸ்கணு அந்த ஏழைச் சிறுமிக்கும் ஒரு புதிய உடை வாங்கி அளிக்கும்படி கேட்டுக் கொண்டார். ராவ் பஹதூரும் அழகிய பாவாடை தாவணி ஒரு செட் வாங்கி வந்து அந்த பெண்ணிற்கு அன்பளிப்பாகக் கொடுத்தார். மறுநாள் புத்தாடையை அணிந்து கொண்ட அவளது மகிழ்ச்சி கரை காணாது போயிற்று. தினமும் பழையது சாப்பிடும் ஒருவனுக்கு அறுசுவை உணவு சாப்பிடக் கிடைத்தால் எவ்வளவு ஆனந்தமாக இருக்கும்? அதேபோல அவள் பெருமகிழ்ச்சியோடு சுழன்று சுழன்று நடனமாடினாள். மற்ற சிறுமிகளோடு விளையாட்டுகளில் போட்டியிட்டு அவர்களை எல்லாம் வென்றாள்.

அதற்கடுத்த நாள் புதிய உடையை வீட்டில் வைத்து விட்டு தன்னுடைய பழைய கிழிந்த துணியையே அணிந்து வந்தாள். ஆனால் முன் தினம் காணப்பெற்ற அதே அளவு ஆனந்தத்துடனேயே காணப்பட்டாள். அவள் ஏழையானதால் கிழிசல் உடையையே அணிய வேண்டும். தற்போது ஒரு புதிய உடை அவளிடம் இருக்கிறது. அதை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறாள். ஆனாலும் பழைய கந்தலையே உடுத்தியும் துளிக் கூட மனச்சோர்வோ துன்பமோ இல்லாதபடி அவள் காணப்பட்டாள்.

இவ்வாறாக வாழ்க்கையில் நமது இன்ப துன்ப உணர்ச்சிகள் எல்லாம் நமது மனப்பாங்கைப் பொறுத்தே இருக்கின்றன என்பதை அவர் உணர்ந்தார். அது மட்டுமல்ல, இக்குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் ஏழைச் சிறுமியின் வறுமை நிலை, அவளது கந்தல் உடை, புதுப் பாவாடை தாவணி, அதை அன்பளிப்பாகக் கொடுத்தவர், அன்பளிப்பைப் பெற்றவள் இவை எல்லாம் கடவுளின் கூறுகளே. அவரே எல்லாவற்றிலும் ஊடுருவி கலந்திருக்கிறார் என்கிற உபநிஷதப் பாடத்தின் நடைமுறை விளக்கத்தையும் தாஸ்கணு பெற்றார்.

பாபாவே தாஸ்கணுவிற்கு இந்த போதனையை நேரிடையாக செய்திருந்தால் இந்த நிகழ்ச்சி நடைபெற்றிருக்குமா? "காகா சாஹேப் வீட்டிலுள்ள வேலைக்காரி ரூபத்தில் உனக்கு ஞானத்தை உபதேசித்ததும் நான்தானே?" என்று சொல்லாமல் சொல்லி, சொல்ல வந்த விஷயத்தை ஆணித்தரமாக உணர்த்தி எல்லோர் மனதிலும் பதிய வைத்து விட்டாரே?

வாழ்க்கையில் இன்பம் துன்பம் இரண்டிலும் உண்மையிலேயே இறைவன் நம் கூடவே இருக்கிறார்! ஈஷோபநிஷதத்தின் சாராம்சத்தை தாஸ்கணு மஹராஜுக்கு விளக்குமுகமாக பாபா சத்சரித்திரத்தில் பக்தர்கள் அனைவருக்கும் இந்த உண்மையை புலப்படுத்துகிறார். ஸ்ரீ பாபாவின் மஹாசமாதி நாளாகிய 24.10.2023 (விஜயதசமி) அன்று நாமும் பாபாவை வழிபட்டு அவருடைய அருளுக்குப் பாத்திரமாவோம்!

logo
Kalki Online
kalkionline.com