

கோவில் மூலஸ்தானத்தில் இருந்து வெளிவரும் அபிஷேக தீர்த்தத்தை கோமுக நீர் என்று போற்றுவது வழக்கம். கோமுகநீர் என்பது கோவில்களில் மூலவர் மீது செய்யப்படும் அபிஷேக நீர், கோமுகி என்ற பசுவின் முகம் போன்ற அமைப்பு உள்ள, கோமுகி வழியாக வெளியேறும் புனிதமான தீர்த்தமாகும். இது கங்கை போன்ற புண்ணிய நதிகளைவிட அதிக சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த தீர்த்தம் வாஸ்து தோஷங்களைப் போக்கி, மனத்தூய்மை, செல்வ செழிப்பு மற்றும் திருமணத் தடைகளை நீக்கும் சக்தி பெற்றது.
இறைவனின் திருமேனியைத் தொட்டு வருவதால் இது கங்கையை விட புனிதம் நிறைந்தாகக் கருதப்படுகிறது. கோமுக நீரைத் தலையில் தெளித்துக்கொள்வது வாஸ்து தோஷங்கள், கண் திருஷ்டி மற்றும் தீவினைகளைப் போக்கும் சக்தி படைத்தது. இது நேரடியாக இறைவனின் திருமேனியில் பட்டு வருவதால், மிகுந்த நேர்மறை ஆற்றலையும், தெய்வீகத் தன்மையையும் கொண்டுள்ளது.
சிலர் எப்போதும் மனஅமைதி இல்லை, குடும்பத்தில் சந்தோஷம் இல்லை, எப்போதும் சண்டை சச்சரவுகள் நடைபெறுகிறது என்று புலம்புவார்கள். அப்படிப் பட்டவர்கள் இந்தப் புனித தீர்த்தத்தைக் கொண்டு வந்து வீட்டில் தெளிப்பதால் மனஅமைதியும், குடும்பத்தில் மகிழ்ச்சியும் பெருகும் என்பது நம்பிக்கை. இந்த தீர்த்தத்தை தலையில் தெளித்துக்கொள்வதால் எதிர்மறை ஆற்றல்கள் நீங்குவதுடன் உடற்பிணிகளும் நீங்கும்.
கோமுகம் வழியாக வெளியேறும் அபிஷேக நீரைத் தொட்டு வணங்கிட செல்வ வளம் சேரும் என்பது ஐதீகம். இந்த தீர்த்தத்தை தலையில் தெளித்துக்கொள்ள நம்மை சுற்றியுள்ள தீய சக்திகள் விலகிவிடும். கோமுக நீரை வீட்டிற்கு சுத்தமான பாத்திரத்தில் கொண்டு வந்து வீடு மற்றும் வியாபாரத் தலங்களில் தெளிக்க வாஸ்து தோஷம், கண் திருஷ்டிகள் விலகி வியாபாரம் விருத்தியாகும்.
பரணி மகம் நட்சத்திரத்தன்று கோமுகத் தீர்த்தத்தை கொண்டு வந்து வாகனம் மற்றும் குடும்ப நபர்களின் மீது தெளித்துவிட விபத்துக்கள் ஏற்படாது என்றும், எம பயம் நீங்கும் என்று கூறப்படுகிறது. கார்த்திகை நட்சத்திரத்தன்று கோமுக தீர்த்தத்தை தெளித்துக் கொள்வதால் பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வார்கள் என்றும், ரோகினி நட்சத்திரத்தன்று தெளித்துக்கொள்ள குழந்தை இல்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் காலம் தொட்டு இருந்து வருகிறது.
அந்த அபிஷேகத் தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொள்வது போல் வீட்டிலும் தெளிக்க தெய்வீக சக்தியின் அதிர்வலையானது வீட்டினுள் நிறைந்திருக்கும். கோமுகம் என்பது ஆலயங்களில் இறைவனை வழிபட்டு நாம் வலமிருந்து இடமாக சுற்றி வரும் பொழுது பிரம்மா வீற்றிருந்து அருள்பாளிக்கும் உருவச் சிலைக்கு கீழே இந்த கோமுகத் தீர்த்தம் அமைக்கப்பட்டிருக்கும்.
திருமணத்தடை உள்ள ஆண்களும், பெண்களும் அங்குள்ள ஆலய நிர்வாகத்திடம் அனுமதி பெற்று இந்த கோமுக தீர்த்தம் செல்லும் பாதையை சுத்தப்படுத்தி, அதாவது தொடர்ச்சியாக 21 நாட்கள் கோமுக தீர்த்தம் செல்லும் பாதையை சுத்தப்படுத்தி மனதார வேண்டி வர திருமணத் தடை நீங்கி நல்ல வரன் கிடைக்கும்.
திருமணத்தடை மட்டுமல்ல தொழில் முன்னேற்றம், உயர் கல்வி கற்பதில் ஏற்படும் தடை, வேலைவாய்ப்பு என பல கோரிக்கைகளும் இந்த கோமுக தீர்த்த பாதையை சுத்தப்படுத்துவதன் மூலம் நம் வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது காலம் காலமாக தொடர்ந்து வரும் நம்பிக்கையாகும்.