சாட்சி சொல்ல வந்த கோபாலன்!

சாட்சி சொல்ல வந்த கோபாலன்!
Published on

முன்னொரு காலத்தில் தென்னிந்தியாவில், ‘வித்யா நகரம்’ என்று போற்றப்பட்டு வந்த ஒரு நகரத்தில் இரண்டு அந்தணர்கள் தோழமையுடன் வாழ்ந்து வந்தார்கள். ஒருவர் முதியவர். அவர் செல்வந்தர். மற்றொருவர் இளைஞர். ஆனால் அவர் வறியவர். இருவரும் பல க்ஷேத்ரங்களுக்குச் சென்று பகவானை தரிசித்து மகிழ்ந்து வந்தார்கள். தென்னிந்தியாவில் மட்டுமல்லாமல், வட இந்தியாவிலும் பல வழிபாட்டு தலங்களுக்குச் செல்வதை அவர்கள் வாடிக்கையாகக் கொண்டிருந்தனர்.

அப்படிச் சென்றபொழுது, ஒரு முறை பிருந்தாவனத்துக்கு அவர்கள் சென்றனர். பிருந்தாவனத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணருடைய அர்ச்சாவதார மூர்த்தியைக் கண்டு மிகவும் அதில் லயித்துப்போனார்கள். அந்த ஸ்தலத்திலேயே இரண்டு மூன்று நாட்கள் தங்குவது என தீர்மானித்து, அப்படியே தங்கியும் வந்தார்கள். அந்த வசதியான முதியவருக்கு, வறியவரான அந்த இளைஞர் நிறைய உபகாரம் செய்து வந்தார். தள்ளாமையினால் முதியவர் செய்ய முடியாத சில காரியங்களை அந்த இளைஞர் அவருக்குச் செய்து கொடுத்தார்.

தனக்கு மிகவும் உதவியாக  இருந்து பல ஸ்தலங்களையும் தரிசனம் செய்ய உதவியாக இருந்த அந்த இளைஞனை, முதியவருக்கு மிகவும் பிடித்துப்போனது. ‘அந்த இளைஞனுக்கு மிகவும் உயர்வான ஒரு அன்பளிப்பைத் தர வேண்டும்’ என அவர் சித்தம் கொண்டார். சிறிதும் அலுப்பு சலிப்பு இல்லாமல் தனக்கு பணிவிடை செய்யும் அந்த இளைஞனை முதியவர் அழைத்து, "தம்பி, நீ செய்யும் பணிவிடைகளில் நான் மிகவும் மகிழ்ந்து போய்விட்டேன். உனக்கு என்ன அன்பளிப்பு தருவது என்று நான் யோசனை செய்து பார்த்ததில், எனக்கு விளங்கியது ஒன்றுதான். அதாவது எனது மகளை உனக்குத் திருமணம் செய்து கொடுக்கலாம் என்கிற தீர்மானத்துக்கு வந்திருக்கிறேன். உனக்கு சம்மதமா? என் மகளை நீ மணந்து கொள்கிறாயா?" என்றார்.

பெரியவரின் வார்த்தைகளைக் கேட்டதும், இளைஞன்  வெலவெலத்துப் போனான். "ஐயா பெரியவரே, நான் உங்களுக்குச் செய்யும் இந்த உபகாரம் எல்லாமே பகவானுக்கு செய்யும் தொண்டாக நினைத்துதான் செய்கிறேன். எனக்கு எந்த கைமாறும் இதற்காக நீங்கள் செய்ய வேண்டாம். எனக்கு உங்கள் ஆசிர்வாதம் இருந்தால் போதும். நான் வறியவன். படிப்பு அறிவு இல்லாதவன். நீங்கள் செல்வந்தர். முதலில் அதனை யோசனை செய்து பாருங்கள். இந்த எண்ணம் சரிப்பட்டு வராது. விட்டு விடுங்கள்" என்று கூறினான்.

"இளைஞனே, என்னுடைய வார்த்தைகளில் உனக்கு நம்பிக்கை இல்லையா? என் மகள் என்பவள் என்னுடைய சொத்து. என் சொத்தினை நான் யாருக்கு  வேண்டுமானாலும் கொடுக்க எனக்கு உரிமை உண்டு. இதை யாரும் தடுக்க முடியாது. ஆகையால், எனது மகளை உனக்கு கன்னிகாதானம் செய்து தருவது என்று முடிவெடுத்து விட்டேன். எனது விருப்பத்தை யாராலும் மாற்ற முடியாது. என் மகளை நீ ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அப்பொழுதுதான் என் மனம் அமைதி பெறும்" என்றார் அந்த பெரியவர்.

"ஐயா, உங்களுக்கு ஊரில் உற்றார் உறவினர் என்று பலர் இருக்கிறார்கள். எனக்கு அப்படி யாரும் இல்லை. ஆகையால், அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்காதீர்கள். அவர்களுடன் தீர ஆலோசித்து பின்பு ஒரு முடிவுக்கு வாருங்கள். எனக்கு எந்த கைமாறும் தேவையில்லை என்று ஏற்கெனவே நான் சொல்லிவிட்டேன். ஸ்ரீகிருஷ்ணரின் பக்தனை திருப்திப்படுத்தினால் பகவானையே திருப்தி படுத்தியது போல் ஆகும் என்பது எனக்குத் தெரியும். ஆகையால்தான் நான் உங்களுக்கு உபகாரங்கள் செய்து வந்தேன்" என்றான் அந்த இளைஞன்.

"உன்னுடைய எந்த கூற்றையும் ஏற்க நான் தயாராக இல்லை. நான் சொன்னபடி செய்துதான் தீருவேன். ஊருக்குத் திரும்பிய பிறகு, என் மகளை உனக்கு மணம் முடித்துக் கொடுக்கப்போகிறேன். உன்னைப் போல ஒரு நல்லவன், பொறுமைசாலி, உபகாரி என் மகளுக்குக் கிடைக்க மாட்டான். என் முடிவில் எந்த மாற்றமும் இருக்காது. இது நிச்சயம்" என்றார் முதியவர்.

இளைஞனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. இது நடக்க முடியாத காரியம் என்பது அவன் மனதுக்குப் பட்டது. அவன் உடனே, "ஐயா… இதுதான் உங்கள் தீர்மானம் என்றால் இங்கு இருக்கும் கோபாலன் சன்னிதியில், அவரை சாட்சியாக வைத்து, எனக்கு சத்தியம் செய்து கொடுங்கள்" என்று கூறினான்.

முதியவரும் கோபாலன் சன்னிதி முன்னிலையில், ‘என் மகளை உனக்குக் கன்னிகாதானம் செய்து கொடுக்கிறேன். அதற்கு இந்த கோபாலனே சாட்சி’ என்று கூறி சத்தியம் செய்து கொடுத்தார்.

ருவரும் க்ஷேத்ராடனம் முடித்துவிட்டு வித்யா நகரத்துக்குத் திரும்பினார்கள். ஸ்தல யாத்திரை செய்து முடித்து வந்த  முதியவருக்கு தான் செய்து கொடுத்த சத்தியம் மறந்து போயிருந்தது. திடீரென்று ஒரு நாள் ஞாபகம் வரவே, ‘பெரிய குற்றம் செய்து விட்டோமே. பெண்ணை இளைஞனுக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டுமே’ என்ற எண்ணம் தோன்றியது. சரியாக அந்த நேரத்தில் அந்த இளைஞனும் அங்கு வந்தான். வீட்டில் இருந்தவர்கள் அந்த இளைஞனிடம் யார் என்று கேட்டபொழுது,  ஸ்தல யாத்திரையின்பொழுது நடந்த விபரங்களை அவன் அந்த வீட்டாரிடம் கூறினான்.

படிப்பறிவில்லாத வறியவன் ஒருவனுக்கு செல்வந்தர் வீட்டில் பிறந்த பெண்ணை மணம் முடித்துக் கொடுப்பதா என்கிற கோபத்தில் ஆளுக்கு ஒரு பக்கம் முதியவரை ஏசத் தொடங்கினார்கள். இளைஞன், ஊர் மக்களைக் கூட்டி நடந்த விபரங்களைக் கூறி, பஞ்சாயத்து செய்து வைக்கும்படி கூறினான். ஊர் மக்கள் அந்த முதியவர் கூறியதற்கு சாட்சியாக யார் இருக்கிறார்கள் என்ற கேள்வியை எழுப்பியபொழுது, ‘கோபாலன் சாட்சியாக இருந்தான்’ என்று கூறி, 'அந்த கோபாலன் இங்கு வந்து சாட்சி சொன்னால் நீங்கள் இந்தத் திருமணத்தை ஏற்பீர்களா?' என்று கேட்க, ஊர் மக்களும், 'கோபாலன் வந்து சாட்சி சொன்னால் நிச்சயம் நாங்கள் ஏற்றுக் கொள்வோம்' என்று கூறினார்கள். உண்மையிலேயே அந்த இளைஞனுக்கு முதியவரின் பெண்ணை மணம் முடித்துக்கொள்ளவில்லையே என்கிற வருத்தத்தை விட, முதியவர் ஒருவர் தெய்வக் குற்றத்துக்கு ஆளாகப் போகிறாரே என்கிற பயம்தான் அதிகமாக இருந்தது.

ளைஞன் பிருந்தாவனத்துக்கு விரைந்தான். கோபாலன் சன்னிதியின் முன் நின்று, பஞ்சாயத்து கூடும் சமயத்தில் சாட்சி சொல்ல வரும்படி அழைத்தான். கோபாலனும், 'நான் நிச்சயம் உன் பின்னால் வருகிறேன். ஆனால், நீ திரும்பிப் பார்த்தால் அந்த இடத்திலேயே நான் நின்று விடுவேன். நான் வருகிறேன் என்பதற்கு ஆதாரமாக எனது கால் சலங்கை சத்தம் உனக்குக் கேட்கும்' என்று கூறி, இளைஞனை தொடர்ந்து வித்யா நகரம் வரை கோபாலன் வந்தார். ஊர் எல்லை வந்தவுடன் இளைஞன் திரும்பிப் பார்த்து கோபாலனிடம், “நான் ஊர் மக்களை அழைத்து வருகிறேன்” என்று கூறவும், “நீ திரும்பிப் பார்த்து விட்டாய். நான் உனக்காக சாட்சி சொல்வதற்காக , இந்த எல்லையிலேயே இருக்கிறேன். வேறு எங்கும் செல்ல மாட்டேன்” என்று கூறி அங்கேயே நின்று விட்டார்.

ஊர் மக்கள் அனைவரும் கோபாலனைக் காணும் ஆவலில் அங்கு கூடி விட்டார்கள். இளைஞன் சொன்னது உண்மை என்றும் அறிந்து கொண்டார்கள். முதியவரும் கோபாலனின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். தனது பெண்ணை அந்த இளைஞனுக்கு மணம் முடித்துக் கொடுப்பதாகச் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றுவதாகக் கூறி,  இருவருக்கும் அங்கேயே கோபாலன் முன்னிலையில் மணம் முடித்து வைத்தார் முதியவர். இளைஞன் மற்றும் முதியவரின் வேண்டுகோளின்படி, கோபாலன் அந்த இடத்திலேயே சாட்சி கோபாலன் என்ற திருநாமத்தோடு எல்லோருக்கும் அனுக்கிரகம் செய்து வந்தார். அவ்வூர் மன்னனும், அங்கேயே சாட்சி கோபாலனுக்கு ஒரு கோயிலை எழுப்பினார். சாட்சி கோபாலன் பக்தர்களின் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

ரிசாவின் கஜபதி வம்சத்தைச் சேர்ந்த புருஷோத்தம தேவ் என்பவர், வித்யா நகரத்தை வென்றபொழுது, அங்கிருந்த கோபாலன் விக்ரகத்தின் அழகில் லயித்து, அதைக் கொண்டுவந்து, கட்டக்கிலுள்ள தனது கோட்டையில் ஸ்தாபிதம் செய்தார். அந்நியப் படையெடுப்பின்போது தாக்குதலிலிருந்து அந்த விக்ரகத்தைக் காப்பாற்ற, ஒவ்வொரு இடமாக மாற்றினார். கடைசியாக, புரி ஜகந்நாத க்ஷேத்ரத்திலிருந்து, சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ள, 'சத்தியவாதி' என்னும் கிராமத்துக்கு அருகில்,  சாட்சி கோபாலனுக்கு ஒரு கோயிலை எழுப்பி, அங்கு பிரதிஷ்டை செய்தார்.

இன்றும் உலகின் பல்வேறு இடங்களில் இருந்து திரளான மக்கள் வந்து,  சாட்சி கோபாலனை தரிசனம் செய்து கொண்டிருக்கிறார்கள். புரி ஜகந்நாத க்ஷேத்ரத்துக்கு வரும் பக்தர்கள் இந்த சாட்சி கோபால பகவானையும் தரிசித்தால்தான், அந்த யாத்திரை முடிவடையும் என்கிற நம்பிக்கையும் இங்கு நிலவுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com