ஆன்மிகத்தில் கண்கூடாக நடக்கும் சில அற்புத நிகழ்வுகளை அவ்வப்போது பகுத்தறிவாளர்களும் ஆராயாமல் ரசித்துச் செல்வதுண்டு. அப்படியொரு நிகழ்வாகத்தான், பிரசித்தி பெற்ற சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலின் மூலவர் சிலை மீது நேற்று முன்தினம் ஒரு கிளி வந்து அமர்ந்து கொண்டு போக மறுக்கிறது.
சேலம், பழைய பேருந்து நிலையத்தின் அருகில் உள்ளது பழைமையும் பெருமையும் வாய்ந்த கோட்டை மாரியம்மன் திருக்கோயில். இந்தக் கோயிலுக்கு பல்வேறு பெருமைகள் இருந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் அம்மனுக்கு 22 நாட்கள் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது சிறப்பு. அந்த வகையில் இந்த ஆண்டும் ஆடித் திருவிழா சமீபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
மேலும், கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக இந்தக் கோயிலின் கும்பாபிஷேகத்தை ஒட்டி பல்வேறு கோயில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. திருப்பணிகள் நிறைவு பெற்று, அடுத்த 27ம் தேதி கும்பாபிஷேகம் என இந்து சமய அறநிலையத்துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று முன்தினம் (23.9.2023) காலை எங்கிருந்தோ பறந்து வந்த பச்சைக் கிளி ஒன்று கருவறைக்குள் சென்று அம்மன் சிரசின் மீது அமர்ந்து கொண்டது. கோயில் பணியாளர்கள் எவ்வளவோ விரட்டியும், அந்தக் கிளி அங்கிருந்து வெளியே செல்ல மறுக்கிறது.
மேலும், அந்தக் கிளி அம்மனுக்கு நடைபெறும் அபிஷேகம் மற்றும் பூஜைகளுக்கு எந்தத் தொந்தரவும் கொடுக்காமல் அம்மன் சிரசின் மீதே அமர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி, அம்மனுக்கு பிரசாதமாக வைக்கப்படும் பழம் உள்ளிட்ட பிரசாதங்களை கொத்தித் தின்பது கோயிலுக்கு வருபவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. அம்மன் சிரசின் மீதமர்ந்து கொண்டு போக மறுக்கும் அந்தக் கிளியைக் காண்பதற்கென்றே ஏராளமான பக்தர்கள் இந்தக் கோயிலுக்கு வந்து செல்கின்றனர்.
இதுகுறித்து அந்தக் கோயிலின் அர்ச்சகர் கூறுகையில், “தினமும் காலை 6 மணிக்குக் கோயில் நடை திறந்து அம்மனுக்கு பூஜை செய்வது வழக்கம். நேற்று முன் தினமும் அப்படித்தான் காலையில் கோயிலைத் திறந்து அம்மனுக்கு பூஜை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென ஒரு பச்சைக்கிளி பறந்து வந்து கோயில் கருவறை அம்மன் சிலை மீது அமர்ந்தது. நாங்கள் அதை எவ்வளவு முயன்று விரட்டியும் போகாமல் அங்கேயே இருக்கிறது. கோட்டை மாரியம்மன் கோயிலுக்கு விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், அம்மனே கிளி ரூபமாக இக்கோயிலில் வந்தமர்ந்து உள்ளதாக பக்தர்கள் நம்புகின்றனர்” என்று கூறினார்.