குரு அருளிய அருள்வாக்கு!

குரு அருளிய அருள்வாக்கு!

“எனது தோழிக்கு ஒரு பழக்கம். வீட்டில் ஏதாவது முக்கியமான நிகழ்ச்சிகள் நடக்கப்போகிறது என்றால், ஷீரடி சென்று பாபாவை தரிசனம் செய்த பிறகுதான் அதை ஆரம்பிப்பாள். தீவிர பாபா பக்தையான அவள், அவளது மகன் மேற்படிப்புக்காக அமெரிக்கா செல்ல வேண்டும் என்று கூறியபோது, அவனையும் அழைத்துக் கொண்டு குடும்பத்தோடு ஷீரடி பாபாவை தரிசிக்கச் சென்றிருக்கிறாள். அன்று விடியற்காலையில் எழுந்து ஷீரடி பாபா சன்னிதியில் காக்கட ஆரத்தி தரிசித்து முடித்தவுடன், குடும்பத்துடன் சென்று மியூசியம், பிறகு வேப்பமரம், தூனி, உதி வாங்கும் இடம், பாபா தண்ணீர் எடுத்த கிணறு என்று சுற்றி விட்டு அதன் பக்கத்தில் இருக்கும் சமாதியை வணங்கி வெளியில் வரும்போது, சமாதி ஓரத்தில் ஒருவர் நின்று கொண்டு தோழியின் மகனைப் பார்த்து, ‘சில பிரச்னைகளை எதிர்கொள்வாய்; எல்லாவற்றையும் கடந்து விடுவாய்; இந்தியாவில் பணி செய்வாய்’ என்று ஹிந்தியில் கூறியிருக்கிறார். அதைக் கேட்டவுடன் மனது தெளிவாகி மீண்டும் இன்னொரு வலம் வந்து பிள்ளையார், சிவன் சன்னிதிகளை வணங்கி விட்டு இன்னொரு முறை அந்த குரு நின்ற பகுதிக்கு வந்திருக்கிறார்கள். இன்னும் அவர் அங்கு நிற்கின்றாரா என்று பார்த்தபோது அங்கு அவரைக் காணவில்லை.

பிறகு ஊர் திரும்பி, வீட்டுக்கு வந்தவுடன் வெளிநாடு செல்வதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டு, மகனை அனுப்பி வைத்தாள் எனது தோழி. மகனும் நன்கு படித்து நிறைய மதிப்பெண்கள் பெற்றதால் அவனுக்கு அங்கேயே வேலையும் கிடைத்தது. அவன் வேலைக்குச் செல்வதற்கு சில நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் சென்று அவனைப் பார்த்து ஆசீர்வதித்து விட்டு வந்திருக்கிறார்கள். அவனும் குதூகலமாக பணிபுரிய ஆயத்தமாகிக் கொண்டிருந்தான். அந்த நேரத்தில் அவனுக்கு தனது பெற்றோரைப் பார்த்த குதூகலம். அந்த அன்பு அவனது மனதை வருட, ‘நாம் ஏன் நமது குடும்பத்தை விட்டுவிட்டு இங்கு வந்து சம்பாதிக்க வேண்டும்’ என்று மனதில் ஒருவித வெறுமை படர்ந்திருக்கிறது.

அதன் பிறகு அவனுக்கு அங்கிருக்கப் பிடிக்காமல்போக, பெற்றோருக்கு போன் செய்து விபரத்தைக் கூறி இருக்கிறான். பெற்றோரும் சிறிது யோசித்து விட்டு, ‘உனக்கு என்ன தோன்றுகிறதோ அப்படியே செய். எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. நீ இங்கு வந்து பணிபுரிவது எங்களுக்கு சந்தோஷமே’ என்று கூறி விட்டார்கள். அதன் பிறகு அமெரிக்காவிலிருந்து தாயகம் திரும்பி, வேலைக்கு மனு போட, உடனே வேலையும் கிடைத்து விட்டது. இப்பொழுது பெங்களூருவில் ஹார்ட்வேர் இன்ஜினியராகப் பணி செய்து கொண்டிருக்கிறான்.

அமெரிக்காவில் நல்ல வேலை கிடைத்தவுடன், ‘நான் இங்கேயே பணி செய்கிறேன்’ என்று தனது அம்மாவிடம் கூறியவன், எப்படி மனம் மாறி இந்தியாவுக்கு வந்தான் என்பது இன்று வரை புரியவில்லை. இதை அன்று ஷீரடியில் அந்த குரு சொன்ன போது நாங்கள் அதை நம்பவில்லை. ஆனால் கடைசியில், ‘படித்தது அங்கே, பணியில் அமர்ந்தது இங்கே’ என்றுதானே முடிந்தது. இதுதான் பாபாவின் சித்தம் போலும். அந்தத் தாயுமானவருக்குத்தானே தெரியும்; தன்னை நம்பியவருக்கு நல்வாக்கு கூறுவது எப்படி என்று. பாபாவை பணிவோம்! அவர் பேசுவதைக் கேட்போம்!

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com