குருவும் மூன்று வித சிஷ்யர்களும்!

குரு பூர்ணிமா 21.07.2024
ஷீர்டி சாயிபாபா
ஷீர்டி சாயிபாபா
Published on

னிதர்களின் அக இருளை (அஞ்ஞானத்தை) நீக்கி, ஆத்ம ஞானத்தை (மெய்ஞானத்தை) ஒளிர வைப்பவர்தான் குரு. இவ்வுலக வாழ்க்கையில் இன்ப, துன்பங்களில் உழன்று சம்சார சாஹரத்தை நீந்திக் கடக்க முடியாமல் அவதிப்படும் மாந்தர்களை கருணையோடு கரையேற்றவே மஹான்கள் அவதரித்து குருவாக வழிகாட்டுகிறார்கள். ஸ்ரீ ஷீர்டி சாயி பாபா அத்தகைய சிறப்பான ஒரு குருவாக பக்தர்களால் வழிபடப்படுகிறார். வேத வியாச மகரிஷியின் ஜயந்தி தினத்தை குரு பூர்ணிமா என்று சிறப்பித்து, அன்று நாம் நமது குருமார்களை துதித்து, வணங்கி பூஜிக்கும் நாளாக வழிபட்டு வருகிறோம்.

ஸ்ரீ சாயி சத்சரித்திரத்தில் ஸ்ரீ ஹேமத்பந்த் அடியவர்களை மூன்று விதமானவர்களாக வகைப்படுத்துகிறார். முதல் தரம் அல்லது உத்தமர்கள், இரண்டாம் தரம் அல்லது மத்ய தரமானவர், மூன்றாம் தரம் அல்லது அதமர் சாதாரணமானவர்கள்.

முதல் தரமானவர்கள் குரு சொல்வதற்கு முன்பே அவருடைய விருப்பத்தை ஊகித்தறிந்து, அவர் ஆணைக்குக் காத்திராமல் உடனேயே நிறைவேற்றுபவர்கள்.  இது உத்தம சிஷ்யனின் லட்சணம். இரண்டாம் தரமானவர்கள் குருவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து அப்படியே கொஞ்சமும் தப்பாமல் எழுத்துக்கு எழுத்து கடைப்பிடிப்பவர்கள். இவர்கள் மத்ய தரமானவர்கள். மூன்றாம் தரமானவர்களோ குருவின் கட்டளையை, ‘செய்கிறேன்! செய்கிறேன்!’ என்று சொல்லிக்கொண்டிருந்தாலும், நிறைவேற்றுதலை ஒத்திப்போட்டுகொண்டு, ஒவ்வொரு படியிலும் ஏதோ தவறு செய்து கொண்டும் இருக்கிறார்கள். இது, 'அதம' சிஷ்யனின் அடையாளம். இதற்கு உதாரணமாக ஒரு நிகழ்ச்சி சத்சரித்திரத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.

ஒரு சமயம் ஷீர்டியில், 'காலரா' வியாதி தாண்டவமாடிக் கொண்டிருந்தது. அப்போது பஞ்சாயத்தார் இரண்டு கட்டளைகளை ஏற்படுத்தினார்கள். ஒன்று, எவ்வித எரிபொருள் (விறகு) வண்டியையும் வெளியிலிருந்து கிராமத்திற்குள் வர அனுமதிக்கக்கூடாது. அதாவது, வேறு ஊர்க்காரர்கள் ஷீர்டிக்குள் வரக்கூடாது என்று கட்டுப்பாடு செய்தார்கள். மற்றொன்று ஒரு ஆடு கூட அங்கு கொல்லப்படக்கூடாது.  கிராமப் பஞ்சாயத்து விதித்த சட்ட திட்டங்களை மக்கள் நேர்மையுடன் அனுசரித்தனர்.

இந்த, 'காலரா' கட்டளைகள் அமலில் இருக்கையில் யாரோ ஒருவர் மசூதிக்கு ஒரு ஆட்டைக் கொண்டு வந்தார். அது மூப்படைந்து மிகவும் பலவீனமாக இறக்கும்  தருவாயில் இருப்பதைப் போன்று தோற்றமளித்தது. அந்த சமயத்தில் மாலிகானைச் சேர்ந்த பீர் முஹமது என்கிற 'படே பாபா' என்பவர் பாபாவின் அருகே நின்று கொண்டிருந்தார். பாபா அவரைக் கூப்பிட்டு, "இதை ஒரே வெட்டில் பலி கொடு" என்றார். "எதற்கும் பயனின்றி அது ஏன் கொல்லப்பட வேண்டும்?" என்று படே பாபா அதைக் கொல்ல மறுத்து விட்டார். பின்னர் பாபா சீடர் ஷாமாவிடம் அதனைக் கொல்லும்படி கேட்டுக் கொண்டார். ஷாமா ராதாகிருஷ்ணமாயியிடம் சென்று ஒரு கத்தி வாங்கி வந்து அதை பாபாவின் முன்னால் வைத்தார். கத்தி எதற்காக வாங்கப்பட்டிருக்கிறது என்பதையறிந்த ராதாகிருஷ்ணமாயி அதைத் திரும்ப எடுத்துக்கொண்டு விட்டாள். ஷாமாவும் தனது கையால் ஆடு கொல்லப்படுவதைத் தவிர்ப்பதற்காக கொஞ்ச நேரம் தலைமறைவாக வாடாவில்  போய் உட்கார்ந்து கொண்டார்.

இதையும் படியுங்கள்:
ஆடி மாதம் கஜேந்திர மோட்சம் நடைபெறும் திருக்கோயில் எது தெரியுமா?
ஷீர்டி சாயிபாபா

இப்போது பாபா  காகா சாஹேப் தீக்ஷித்தைப் பரீட்சை செய்ய எண்ணினார். ஜனங்களுக்கு அவரது குரு பக்தியை உணர்த்துவதற்காக பாபா ஒரு கத்தியை எடுத்து வந்து அந்த ஆட்டைக் கொல்லும்படி கேட்டுக் கொண்டார். தூய பிராமணக் குடும்பத்தில் பிறந்த அவருக்கு தமது  வாழ்க்கையில் கொலையை பற்றியே தெரியாது. ஹிம்சை செயலுக்கு அவர் முற்றிலும் எதிரானபோதும் ஆட்டைக் கொல்வதற்குத் தன்னைத்தானே தைரியப்படுத்திக் கொண்டார்.

தனது வேட்டியை இறுகக் கட்டி, கத்தியை தூக்கிக் கொண்டு பாபாவின் முடிவான ஆணைக்காக அவரைப் பார்த்தார்.

பாபா, "உம்! வெட்டு!" என்றதும், கைகள் வெட்டுவதற்குத் தயாராக கீழே இறக்கப்படவிருந்த அதே தருணம் பாபா, "நிறுத்து! நீ எவ்வளவு கொடுமையானவனாக இருக்கிறாய்? பிராமணனாகயிருந்து கொண்டு ஆட்டைக் கொல்ல எப்படித் துணிந்தாய்?" என்றார். காகா சாஹேப் கத்தியைக் கீழே வைத்து விட்டு பணிவோடு கூறினார். "அமிர்தத்தையொத்த தங்களின் சொல்லே எங்களுக்குச் சட்டமாகும். கொல்வது சரியா தவறா என்று எங்களுக்குத் தெரியாது.  குருவின் கட்டளையை நாங்கள் ஆராயவோ, விவாதிக்கவோ விரும்புவதில்லை.  ஐயம் சிறிதுமின்றி குருவின் கட்டளைக்குக் கீழ்ப்படிதலே எங்களது கடமையும் தர்மமும் ஆகும்" என்றார்.

எப்போதும் குருவின் சொல்படி நடப்பவர்கள் முதல் தரமான உத்தம சிஷ்யர்கள்.  அவர்கள் குருவின் வாக்கு சரியா, தவறா? அல்லது பயனுள்ளதா, பயனற்றதா என்றெல்லாம் யோசிப்பதில்லை. அந்த பாரத்தை குருவின் மேல் போட்டு விடுவார்கள். அவர்களின் மனம் குருவின் நாமஸ்மரணையில் லயித்து எப்போதும் அவரது சரணங்களை வழிபடுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com