மதுரை சித்திரை திருவிழா பற்றி சொல்லப்படாத வரலாறு!

Madurai chithirai festival
Madurai chithirai festival unknown factsImage Credits: Oneindia Tamil
Published on

வ்வொரு வருடமும் மதுரையில் ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் மீனாட்சி திருக்கல்யாணத்தை சித்திரை திருவிழா என்றும் அழைப்பார்கள். இந்த நிகழ்வைக் காண பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இந்தத் திருவிழா ஒரு மாத காலத்திற்கு நடைபெறும். முதல் 15 நாட்கள் மீனாட்சி அம்மன் பதவியேற்பும் அவருடைய திருமணமும், அடுத்த 15 நாட்கள் கள்ளழகர் வைகையாற்றுக்கு எழுந்தருளும் விழாவும் நடைபெறும்.

நானூறு வருடங்களுக்கு முன்பு வரை கள்ளழகர் அழகர்கோவிலில் இருந்து கிளம்பி அலங்காநல்லூருக்கு போய் சேருவார். அங்கே கள்ளழகரை குதிரை வாகனத்தில் தூக்கி வைத்து அலங்காரம் செய்வார்கள். அழகருக்கு அலங்காரம் செய்யும் ஊர் என்பதால் இந்த ஊருக்கு அலங்காரநல்லூர் என்கிற பெயர் வந்தது. இதுவே காலப்போக்கில் மருவி, ‘அலங்காநல்லூர்’ என்றானது.

அலங்காநல்லூரில் இருந்து தேனூருக்கு வந்து வைகையாற்றில் இறங்கும் அழகர், அதன் பிறகு வண்டியூருக்கு வந்து மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் கொடுப்பார். இதனால் மண்டூர் என்று அழைக்கப்பட்டு அதுவே மண்டியூராகி பிறகு, வண்டியூராகிப் போனது.

நானூறு வருடங்களுக்கு முன்பு வரை அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் தேனூரில்தான் நிகழ்ந்து வந்தது. அப்போது மதுரையின் மன்னராக இருந்த திருமலை நாயக்கர்தான் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை மதுரைக்கு மாற்றியமைத்தார். சைவம், வைணவத்தை ஒன்று சேர்க்கும் விதமாகத்தான் இந்த விழாவை மதுரைக்கு மாற்றியமைத்தார் திருமலை நாயக்கர். அதேபோல, மாசி மாதத்தில் நடைபெற்று வந்த மதுரை மீனாட்சியம்மன் கோயில் திருவிழாவையும் சித்திரை மாதத்திற்கு மாற்றியமைத்தார்.

கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும்போது என்ன நிறத்தில் பட்டு உடுத்தி இருக்கிறார் என்பது மிகவும் விசேஷமாகப் பார்க்கப்படும். அழகர் எந்த நிறத்தில் பட்டு உடுத்துகிறாரோ அந்த நிறத்தில் அந்த வருடம் நல்லது நடக்கும் என்று பக்தர்களால் நம்பப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் இருக்கும் சுழலும் லிங்கத்தின் தத்துவம் தெரியுமா?
Madurai chithirai festival

பச்சை பட்டு உடுத்தி அழகர் வந்தால், நாடு செழிப்பாக இருக்கும். வெள்ளை மற்றும் ஊதா நிற பட்டு உடுத்தி வந்தால் நாடு இடைப்பட்ட நிலையில் இருக்கும். மஞ்சள் பட்டு உடுத்தி  வந்தால் அந்த வருடத்தில் மங்கலகரமான நிகழ்வுகள் நடைபெறும். அதேநேரம், சிவப்பு பட்டு உடுத்தி வந்தால் அந்த வருடம் போதிய அளவில் விளைச்சல் இருக்காது என்று சொல்லப்படுகிறது.

அழகர் வைகை ஆற்றில் இறங்கும்போது, முழுநிலவு ஒளி வீசும். மக்கள் முகமெங்கும் மகிழ்ச்சி பொங்கும். ‘கோவிந்தா’ எனும் கோஷத்தால் மதுரையே அதிரும். தங்கக் குதிரையில் வைகையாற்றுக்கு கள்ளழகர் கிளம்பியதுமே வைகையில் காத்திருக்கும் பக்தர்களின் ஆரவாரம் அதிகமாகி விடும். வைகையில் ஓடுகின்ற நீரில் நின்றுக்கொண்டு தன்னை தரிசிக்கக் காத்திருக்கும் பக்தர்களைக் காண ஆடி அசைந்து கள்ளழகர் வருவதை காண்பதே தனியழகுதான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com