வரலாற்று சின்னமாக அமைந்த அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை விழா விமரிசையாக நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமை தாங்கி பால ராமர் சிலையை திறந்து வைத்தார்.
இதனை தொடர்ந்து தினசரி திருப்பதி போன்று அயோத்தி ராமர் கோயிலுக்கும் பக்தர்கள் படையெடுத்து வருகின்றனர். இவர்களின் வசதிக்காக பல சேவைகள் செய்யப்பட்டு வருகின்றன.
ரயில் பேக்கேஜ்:
சென்னையிலிருந்து புறப்படுபவர்களுக்கும் பல சேவைகள் வழங்கப்படுகிறது. இந்திய ரயில்வேயின் ஒரு நிறுவனமான இந்தியன் ரயில்வே டூரிசம் அண்ட் கேட்டரிங் கார்ப்பரேஷன் (IRCTC) தனது பயணிகளுக்காக ஒவ்வொரு நாளும் சிறந்த டூர் பேக்கேஜ்களை கொண்டு வருகிறது. இதில் விடுமுறை இடங்கள் முதல் மத வழிபாட்டு இடங்கள் வரை அனைத்தும் அடங்குகின்றது.
ராஜ்கோட்டில் தொடங்கும் இந்த பேக்கேஜ் 9 இரவுகளும் 10 பகல்களும் கொண்ட தொகுப்பாகும். இந்த பேக்கேஜ் மூலம் நீங்கள் அயோத்தி, பிரயாக்ராஜ், ஷ்ரிங்வர்பூர், சித்ரகூட், வாரணாசி, உஜ்ஜைன் மற்றும் நாசிக் ஆகிய இடங்களுக்குச் செல்லலாம்.
சென்னையில் இருந்து எடுத்து கொண்டால் 22613 என்ற எண் கொண்ட ராமேஸ்வரம் - அயோத்தி ரயில் வாரந்தோறும் ஞாயிறு அன்று இயக்கப்படுகிறது.
விமான சேவை:
தென்னிந்தியாவில் இருந்து அயோத்தி செல்வதற்கு நேரடி விமான சேவை ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
பிப்ரவரி ஒன்றாம் தேதியில் இருந்து சென்னை - அயோத்தி நேரடி விமானப் பயணத்தை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது. இதற்காக டிக்கெட் கட்டணம் 6,300 முதல் 6,500 ரூபாய் வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பெங்களூரு, மும்பை ஆகிய நகரங்களில் இருந்தும் நேரடி விமான சேவையை ஸ்பைஸ்ஜெட் வழங்க முடிவு செய்துள்ளது.
மீண்டும் திரும்புவதற்கு அலகாபாத், வாரணாசி, கயா, பாட்னா ஆகிய நகரங்களுக்கு சென்றால், அங்குள்ள விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு நேரடி விமானம் மூலம் பயணிக்கலாம்.