மஞ்சள் இருந்தால் போதும்; வீட்டிலேயே ஈஸியாக மஞ்சள் பிள்ளையார் செய்யலாம்!

vinayagar
vinayagar
Kalki vinayagar
Kalki vinayagar

ண்டுதோறும் இந்துக்களால் கோலாகலமாகக் கொண்டாடப்படும் பண்டிகை விநாயகர் சதுர்த்தி. தமிழகம் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் இந்தப் பண்டிகை விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

விநாயகப்பெருமானின் அவதார நாளையே விநாயகர் சதுர்த்தியாகக் கொண்டாடுகிறோம். அந்த நாளில் கணபதி சிலையை வைத்து வணங்கினால் எண்ணற்ற நன்மைகள் நமக்கு கிடைக்கும் என்பது நம்பிக்கை. பூஜைக்குப் பிறகு கணபதி சிலையை அனைவரும் ஆற்றில் கொண்டு சென்று கரைப்பார்கள்.

களி மண்ணால் உருவாகும் பிள்ளையார் சிலையை முந்தைய காலங்களில் சிறுவர்கள், பெரியவர்கள் என அனைவரும் ஆற்றில் கிடைக்கும் களிமண்ணைக் கொண்டு வந்து வீட்டிலேயே அழகாக செய்து வழிபடுவார்கள். நவீன காலத்தில் அனைவரும் கலர் கலராக கடைகளில் களிமண் பிள்ளையாரை வாங்கிப் பண்டிகையைக் கொண்டாடுகிறோம். ஆனாலும், அனைவருக்கும் தாமே பிள்ளையார் செய்து வழிபட ஆசை உண்டு. ஆனால், தற்காலங்களில் களிமண் கிடைப்பது கஷ்டம். கவலையை விடுங்கள், எளிதாக வீட்டிலேயே மஞ்சள் பிள்ளையார் செய்து விநாயகர் சதுர்த்தியை எப்படிக் கொண்டாடுவது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்: கோதுமை மாவு – 1 கப், மஞ்சள் – முக்கால் கப், பால் – முக்கால் கப், ஒயிட் சுகர் (பொடியாக்கியது) – 2 ஸ்பூன், தண்ணீர் – ஒரு குவளை, மிளகு – சிறிதளவு, குங்குமம் குச்சி – 1, நூல் – தேவைக்கு.

செய்முறை: கோதுமை மாவு, மஞ்சள், பால், சுகர், தண்ணீர் என அனைத்தையும் ஒண்ணா சேர்த்து பிசைந்து 10 நிமிடம் ஊற வைத்து விடுங்கள். ஒரு சிறிய பலகையில் பச்சரிசி மாவில் கோலம் போட வேண்டும். அதன் மேல் ஒரு பிள்ளையார் அமர ஒரு ஆசனம் செய்ய வேண்டும். இல்லையென்றால், பச்சரிசியை பலகையில் கொட்டி பரப்பி, அதன் மீது கூட பிள்ளையாரை அமர வைக்கலாம். விநாயகர் செய்யும்போதே சின்னதாக ஒரு தட்டு போன்று செய்தால் கூட நல்லதுதான். அதிலேயே பிள்ளையாரை அமர வைத்து விடலாம்.

பிறகு ஒரு உருண்டையை எடுத்து அதை நீளமாக உருட்டி வளைத்து கால் போல் செய்யுங்கள். ஒரு கால் மேல் இன்னொரு கால் போட்டு அமர்ந்திருப்பது போன்றும் செய்யலாம். அடுத்து, பிள்ளையாருக்கு முக்கியமான அடையாளம் பெரிய வயிறு. பெரிய உருண்டையாக எடுத்து வயிறு போல செய்து அதை கால்களுக்கு நடுவில் வைத்துவிடுங்கள். அதையடுத்து, அதை விட சிறிய உருண்டை ஒன்றைப் பிடித்து, அதை தலையாகச் செய்யுங்கள். ஒரு சிறிய உருண்டையை கை போல் செய்து அதை விரித்து வைத்திருப்பது போல் ஒட்டி விடுங்கள். அப்படியே இன்னொரு கையை செய்து இடது புறமும் ஒட்டி விடுங்கள்.

பின்னர் துதிக்கையை படத்தில் உள்ளது போல் செய்து அதையும் ஒட்டி விடுங்கள். அதன் பிறகு இடுப்பில் ஒரு அரைஞான் கயிறு செய்து போடுங்கள். பிறகு முப்புரி நூல் தோளில் வலமிடமாக படத்தில் காட்டியது போல போடுங்கள். முக்கியமாக நாம் செய்ய வேண்டியது பிள்ளையார் காது. அவரது காது முறம் போன்று இருக்கும். படத்தில் உள்ளது போல் இருபுறமும் காது செய்து வையுங்கள். தலைக்கு சிறியதாக ஒரு உருண்டை செய்து தலையில் கிரீடம் போல அழகாக செய்து வையுங்கள். இப்போது பிள்ளையாருக்குக் கண் வைக்க வேண்டும். அதற்குத் தண்ணீர் தொட்டு கண் உள்ள இடத்தில் கொஞ்சம் அழுத்த வேண்டும். பிறகு 2 மிளகால் கண் வையுங்கள். பிறகு, பட்டை இட்டு எப்படி வேண்டுமோ அப்படி விநாயகரை டெகரேட் செய்துகொள்ளுங்கள். அவ்வளவுதான் அழகான மஞ்சள் பிள்ளையார் தயார். நமது கையாலேயே விநாயகரை செய்த மகிழ்ச்சியும் நமக்குக் கிடைக்கும். இதன் மூலம் விநாயகரின் அருளும் நமக்குக் கிடைக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com