பூஜையறையில் எதுபோன்ற கடவுள் சிலையை வழிபட்டால் பலன் கிடைக்கும்?

பூஜையறையில் எதுபோன்ற கடவுள் சிலையை வழிபட்டால் பலன் கிடைக்கும்?

ன்மிக அன்பர்கள் சிலரது வீடுகளில் சிறியதும் பெரியதுமாக பல்வேறு பொருட்களால் செய்யப்பட்ட கடவுள் சிலைகளை வைத்து வழிபாடுவார்கள். இதுபோன்ற கடவுள் சிலைகளுக்கு தெய்வ சான்னித்யம் உண்டா என்றால் கேள்விக்குறிதான். மின்காந்த அலைகளைக் கடத்திச் செல்ல செப்பு போன்ற சில உலோகங்களுக்கு மட்டுமே திறன் உண்டு. அதைப் போலத்தான், தங்கம், வெள்ளி, பித்தனை, வெண்கலம், செப்பு போன்ற பஞ்சலோகங்களுக்கு மட்டும்தான் தெய்வ சக்திகளைக் கடத்திச் செல்லும் திறன் உண்டு என்கின்றன ஆகமங்கள். இதனால்தான் ஆலய வழிபாடுகளில் பஞ்சலோக சிலைகளை வைத்து நமது முன்னோர்கள் வழிபட்டனர்.

தற்காலத்தில், பலரது பூஜை அறைகளிலும் கெமிக்கலால் ஆன பிளாஸ்டர் ஆஃப் பாரீஸ் போன்ற பொருட்களால் ஆன கடவுள் சிலைகளை வைத்து வழிபடுகின்றனர். இதுபோன்ற சிலைகள் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் மனதைக் கவரும் வண்ணமாகவும் அமைந்திருப்பதால், இறைவனின் நினைவை ஏற்படுத்த இதுபோன்ற சிலைகள் உதவுமே தவிர, இவற்றால் தெய்வஅனுக்ரஹம் உண்டா என்றால் கிடையாது என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், இதுபோன்ற இறை உருவங்களை வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ காட்சிப் பொருளாக வைத்துக்கொள்வதில் எந்தத் தவறுமில்லை.

இதைப் போலவே, ஆன்மிக அன்பர்கள் பலரும் தங்கள் விருப்பம் போல, வெவ்வேறு அளவு உயரமுள்ள கடவுள் சிலைகளை தங்கள் வீட்டு பூஜை அறைகளில் வைத்து வழிபடுகின்றனர். இப்படி கடவுள் சிலைகளை தங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபடுவோர், தமது வலது கைவிரல்களை மூடி முஷ்டியாக்கிக்கொண்டு நிமிர்த்திப் பிடித்தால் எந்த அளவோ, அந்த அளவுக்கு உட்பட்ட உயரமுடைய தெய்வ சிலைகளை மட்டுமே வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ வைத்து வழிபடலாம். இந்த அளவுக்கு மேற்பட்ட உயரமுடைய சிலைகளை கோயில் போன்ற பொது இடங்களில் வைத்தே வழிபட வேண்டும்.

இதில் முக்கியம் என்னவென்றால், கடவுள் சிலைகளுக்கு தினசரி வெறும் பூஜை மட்டும் போதாது; தினமும் நிவேதனமும் செய்யப்படுவதும் மிகவும் அவசியம். தெய்வ சிலைகளுக்கு தக்க நிவேதனம் செய்ய சக்தி உள்ளவர்கள் மட்டுமே இதுபோன்று கடவுள் சிலைகளை வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ வைத்து வழிபடலாம். அப்போதுதான் அந்த தெய்வ மூர்த்தங்களுக்கு சான்னித்யம் ஏற்படும். மாறாக, திருச்சிலைகளுக்கு தக்க நிவேதனம் செய்யவில்லை எனில், அந்த தெய்வச் சிலையின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். ஆகவே, எந்த அளவு நிவேதனம் செய்ய நமக்கு சக்தி இருக்கிறதோ, அதற்குத் தக்க தெய்வ சிலைகளை வைத்து பூஜை செய்வதே சிறந்தது.

தனி ஒருவரால் தினமும் தெய்வ மூர்த்தங்களுக்கு போதிய அளவு நிவேதனம் செய்ய இயலாது என்பதால், ஒரு குடும்பத்தில் வசிக்கும் மனிதனால் எந்த அளவுக்கு நிவேதனம் செய்ய முடியுமோ, அந்த அளவைக் கருத்தில்கொண்டே நமது சாஸ்திரங்கள், தனி மனிதன் பூஜிக்க வேண்டிய திருச்சிலைகளின் அளவை நிர்ணயித்துள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com