தீபம் ஏற்றுவதில் இத்தனை விஷயங்களா?

தீபம் ஏற்றுவதில் இத்தனை விஷயங்களா?

பிரார்த்தனைக்காகவும் வரங்கள் வேண்டியும் விளக்குகளை ஏற்றும் முறையை நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். விளக்கு ஏற்றுவதற்கான நேரம், காரணம், திசைகள், முறைகள் போன்ற பல விஷயங்கள் தீப வழிபாட்டில் அடங்கியுள்ளன. திருவிளக்குகள் இறைவனின் வடிவமாகவே பார்க்கப்படுவதால் அவற்றுக்கு இறைவனுக்கு உகந்த மரியாதையை கொடுக்க வேண்டும். பூஜைக்கு ஏற்றப்படும் திருவிளக்குக்கு பால், சர்க்கரை, கற்கண்டு போன்றவற்றை நைவேத்தியமாக வைக்கலாம்.

விளக்குகளை வெறும் தரையில் வைக்காமல், பித்தளை தட்டுகளில் வைப்பது நல்லது. பஞ்சலோகம், வெள்ளி விளக்கு, பித்தளை விளக்கு, அகல் விளக்கு என பல வகைகள் இருந்தாலும், அவரவர் வசதிக்கேற்ப மனத்தூய்மையுடன் சிறு மண் விளக்கையாவது வீடுகளில் ஏற்றி வைத்து இறைவனை வழிபடுவது நல்லது. எக்காரணம் கொண்டும் எவர்சில்வர் விளக்குகளை பூஜையறையில் பயன்படுத்தக் கூடாது.

தீபத்தை வடக்கு திசை நோக்கி ஏற்றுவது அறிவு வளர்ச்சியும் செல்வ வளமும்  தரும். கிழக்கு திசை நோக்கி ஏற்றுவது துன்பங்களை நீக்கும். மேற்கு திசை பார்த்து ஏற்றுவது கடன் தொல்லைகளையும் தோஷங்களையும் போக்கும். தெற்கு திசை நோக்கி தீபங்களை ஏற்றுவதைத் தவிர்க்க வேண்டும்.

குத்து விளக்குகளில் ஐந்து முகங்கள் கொண்ட விளக்குகளை அனைத்து நேரங்களிலும் ஏற்றி வைப்பது நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத விஷயம் என்பதால், ஒரு முகத்திலாவது திரி பொருத்தி தினமும் விளக்குகளை ஏற்ற வேண்டும். பொதுவாக, தூய வெண்ணிற பஞ்சில் திரியை இட்டு விளக்கேற்றுவோம். ஆனால், விசேஷ பலன்களைப் பெற சிறப்பு திரி வகைகளும் உண்டு. மஞ்சள் நிறம் கொண்ட திரியை ஏற்றினால் துணிச்சல் கூடும். சிவப்பு நிற திரி கொண்டு தீபம் ஏற்றினால் திருமணத் தடை நீங்கும். வெள்ளெருக்குப் பட்டையை திரியாக்கி விளக்கேற்றினால் செல்வ வளம் பெருகும்.

பொதுவாக, நல்லெண்ணெய் கொண்டு விளக்கேற்றலாம். தற்சமயம் ஐந்து வகையான எண்ணெய்களை கொண்டு தீபங்கள் ஏற்றப்படுகின்றன. வேப்ப எண்ணெய், இலுப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய், நெய், விளக்கெண்ணைய் ஆகியவற்றை கலந்து பஞ்ச முகங்கள் கொண்ட விளக்குகளை ஏற்றி பூஜைகள் செய்யும்போது சகல செல்வங்களும் பெருகும். இறையருள் கிட்டும்.

ஏற்றிய தீபத்தை அணைப்பதற்கும் சில விதிகள் உண்டு. வெறும் வாயினால் விளக்கை ஊதியோ, கையால் விசிறியோ அணைப்பது கூடாது. பூவால் அமிழ்த்தியோ, எரிந்த தீக்குச்சி அல்லது ஊதுபத்தி குச்சியால் எண்ணெயில் திரியை இழுத்து விட்டோ  விளக்கினை அமர்த்த வேண்டும். விளக்குகளை அமர்த்தும்போது, 'சாந்த ஸ்வரூபியே நமஹ' என்று மனதில் தியானிப்பது நலம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com