

அழகா என்றால் முருகா. தமிழா என்றால் முருகா. ஆம். நான் முருகனை பற்றி எழுத கொடுத்து வைத்து இருக்க வேண்டும். முருகனின் (Lord muruga) வாழ்வில் நடந்த அனைத்து விஷயங்களும் தமிழ் நாட்டில் தான் நடந்து உள்ளது. ஞான கனி கிடைக்காததால் தவ கோலம் பூண்டு பழனியில் குன்று ஏறி தெய்வம் ஆனார். குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருப்பான்.
முருகனுக்கு வேலன், வடிவேலன், ஸகந்தன், கார்த்திகேயன், சேனாதிபதி என்று 16 பெயர்கள் உண்டு. காந்தர்வ (காதல்) கல்யாணம் வள்ளியோடு செய்தார். தெய்வானையை மணம் முடித்தார். சூரனை சம்ஹாரம் செய்து அவனை சேவல் கொடியாக மாற்றி அவனுக்கும் அருள் புரிந்தார். அந்த இடம் தான் திருச்செந்தூர். எல்லாவற்றையும் விட தனது தகப்பன் சிவனுக்கு பிரவண மந்திரம் போதித்தார். இது தான் சுவாமி மலை.
1. பழனி
2. திருச்செந்தூர்
3. திருப்பரங்குன்றம்
4. பழமுதிர்சோலை
5. சுவாமி மலை
6. திருத்தணிகை
என்று முருகன் வாழ்வில் நடந்த சம்பவங்கள் தமிழ்நாட்டில் உள்ள அவனது அறுபடை வீடு ஆனது. பொதுவாகவே தமிழ் மக்களுக்கு கடவுள் பக்தி அதிகம். முருகன் என்று சொன்னால் கேட்க வேண்டுமா?
பால் காவடி, பனீர் காவடி, சேவல் காவடி, மயில் காவடி என்று முருக பக்தர்கள் தங்கள் நேர்த்தி கடனை செலுத்துவார்கள். பக்தியின் உச்சம்... வாயில், நாக்கில் சிறு வேலை நுழைத்து வழிப்பட்டு வருகிறார்கள்.
பழனி பஞ்சாமிர்தம் உலக பிரசித்தி பெற்றது. பால முருகன் ஔவை பாட்டியிடம், "சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?" என்று கேட்டது அவர் தமிழ் புலமையை நன்கு விளக்கும் மிகவும் முக்கியமான விஷயம்.
லெமூரியா கண்டம் என்று ஒன்று இருந்தது. அதாவது கண்டம் தாவுதல் (Continental Shift) நடைபெறும் முன் இலங்கை இல்லை; கடலாக தான் இருந்ததாக கருதப்படுகிறது. அப்போது யூக வரலாறு மிகப் பழைய தமிழ்நாட்டில் தென் மதுரையில் முதல் தமிழ் சங்கம் இருந்ததாக கருதப்படுகிறது. அந்த தமிழ் சங்கம் தென் மதுரையில் இருந்திருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். அந்த முதல் சங்கத்தில் சிவன், முருகன், அகத்தியர் இருந்ததாக கருதப்படுகிறது.
பின்னர் கண்ட தாவலின் போது தென்மதுரை அடித்து செல்ல பட்டதாகவும், மேலும் இலங்கை உருவானதாகவும் சொல்லப் படுகிறது.
யூக சங்க காலத்தில் எழுதப்பட்ட செய்யுள்களை தேடி கண்டுபிடித்து எம். ஜி. ஆர் உதவியுடன் பிரசுரித்தவர் ஸ்தபதி கணபதி. இவர் தான் வள்ளுவர் கோட்டம் கட்டியது. மேலும் கன்னியாகுமரியில் 133 அடி திருவள்ளுவர் சிலையை செதுக்கிய சிற்பி. அவர் சங்க கால புத்தகங்கள் சில கொடுத்தார். அதை என்னால் படித்து பொருள் அறிய முடியவில்லை. எல்லாம் சங்க தமிழ் செய்யுள் வடிவில் உள்ளது. ஆனால், அவற்றை பொக்கிஷமாக வைத்து இருக்கிறேன். சமயம் வரும் போது படிப்பேன். சரி. முடிக்கிறேன்.
முருகனை பற்றி எழுதும் போது மனம் சற்றே வருந்துவது உண்மை. ஆம். ஸ்ரீ ராமர், ஸ்ரீ கிருஷ்ணர், பிள்ளையார் பிறந்த தினங்கள் எல்லாம் அரசு விடுமுறை. முருகனின் தை பூசம் மற்றும் கார்த்திகையை கொண்டாடும் கோடி கணக்கான மக்கள் முருகனின் பிறந்த நாளையும் கொண்டாடவே விரும்புகிறார்கள். ஸ்ரீ கிருஷ்ணர் கீதையில் 'சேனாதிபதிகளில் நான் ஸ்கந்தனாக இருக்கிறேன்' என்று சொல்லுகிறார். இதற்கு மேல் வேறு என்ன பெருமை வேண்டும்? அவர் பிறந்த நாள் கொண்டாட இது ஒன்று போதாதா?
ஆனால்… வைகாசி விசாகம் விடுமுறை அல்ல. இது கோடி கணக்கான பக்தர்களுக்கு வருத்தம் தரும் விஷயம்.
பி. கு: 30-05-2026 முருகன் பிறந்த நாள்! விடுமுறை கிடைக்குமா?