கடவுளை நெருங்க இவை இரண்டையும் விலக்கினாலே போதும்!

It is enough to get rid of these two to get closer to God
It is enough to get rid of these two to get closer to Godhttps://chinnuadhithya.wordpress.com
Published on

ம் அனைவருக்குமே கடவுளை என்றாவது ஒரு நாளாவது காண வேண்டும் என்கிற ஆவலும் ஆசையும் உண்டு. கடவுள் என்பவர் யார்? இதை அறிந்துகொள்ள ஒரு இளைஞனுக்கு ஆசை வந்தது. அவரை எப்படி சந்திப்பது? என்று நிறைய பேரை கேட்டான். அனைவரும் சொன்ன ஒரே பதில், ‘கோயிலுக்கு போ… அங்கு இறைவன் இருப்பார்’ என்பதே. அவனும் ஊருக்கு அருகில் இருக்கும் கோயிலுக்கு புறப்பட்டான்.

வழியில் அவன் ஒரு ஞானியை சந்தித்தான். அந்த ஞானியிடம் கேட்போமே என்று அவர் அருகில் சென்றான். அவனை ஏறிட்டுப் பார்த்த ஞானி, "இளைஞனே, உனக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டார்.

"ஐயா, நான் கடவுளைக் காண வேண்டும்" என்றான்.

"சரி, அதற்காக எங்கே போகிறாய்?"என்றார் ஞானி.

"இதோ அருகில் இருக்கும் கோயிலுக்கு போகப்போகிறேன்" என்றான்.

"சரி அங்கே போய் என்ன செய்வாய்?"

"கடவுளை வழிபடப் போகிறேன்."

"அப்படி என்றால் கடவுளை உனக்கு ஏற்கெனவே தெரியுமோ?"

"நிச்சயமாக தெரியாது ஐயா."

"அது சரி, எந்த வகையிலும் நீ கடவுளை பார்த்ததில்லை. அப்படி இருக்கும்போது எப்படி நீ அவரை வழிபட முடியும்?" என்றார் ஞானி.

அந்த இளைஞன் குழம்பிப் போய்விட்டான். ‘என்ன இது… முற்றும் அறிந்த ஞானி இப்படி சொல்கிறாரே’ என நினைத்தான்.

ஞானி இப்போது தெளிவுபடுத்தினார், "இளைஞனே நீ செய்யப்போவது உண்மையான வழிபாடு அல்ல. இன்றைக்கு மனிதர்கள் வழிபாடு என்கிற பெயரில் ஆண்டவனிடம் தங்கள் ஆசைகளை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். தங்களது கோரிக்கைகளை பட்டியலிட்டு கருவறையில் இருக்கும் கடவுள் சிலைகளிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தங்களது புகார்களை வெளிப்படுத்தி கொண்டிருக்கிறார்கள் அவ்வளவுதான்" என்றார்.

உடனே அந்த இளைஞன், “ஐயா நான் அவர்களைப் போல் அல்ல. கடவுளிடம் உண்மையான அன்பு செலுத்த விரும்புகிறேன்” என்றான்.

"அது சரி… நீ பார்க்காத, நீ அறியாத கடவுளிடம் உன்னால் எப்படி உண்மையான அன்பை செலுத்த முடியும்?"

"அப்படியானால் நான் கடவுளை சந்திக்க என்னதான் வழி?"

"அவரை நீ சந்திக்க முடியாது. ஆனால், நீ மனது வைத்தால் உணர முடியும்!"

"சரி ஐயா, அது என்ன வழி?”

"தியானம் செய்.”

"தியானத்திற்கும், கடவுளுக்கும் சம்பந்தம் உண்டா?"

"இல்லை" என்றார் ஞானி.

இளைஞன் வியப்போடு நிமிர்ந்தான். இது என்ன இவர் என்னிடம் விளையாடுகிறாரா?

உடனே ஞானி அவனை தெளிவாக்கினார், "தியானம் உன் மனதோடு சம்பந்தப்பட்டது. அது உனக்குள் ஓர் ஆழ்ந்த மௌனத்தை உண்டுபண்ணும். அப்படிப்பட்ட ஒரு மௌன நிலையில் கடவுள் இருப்பதை நீ உணர தொடங்குவாய். உண்மையான தியானத்தின் பின்விளைவே வழிபடுதல் ஆகும். தியானம் செய்பவனால் மட்டுமே கடவுளை உணர முடியும்" என்றார்.

அந்த இளைஞனும் ஞானியும் பேசிக்கொண்டு இருக்கும்போதே மற்றொரு நடுத்தர வயதுடைய படித்த நபர் அங்கே வந்தார். ஞானியின் முன்பு பணிவோடு வணங்கி தன்னுடைய தேவையை ஆங்கிலத்தில், "I WANT PEACE" என்று கேட்டார்.

இதையும் படியுங்கள்:
சொத்தை பல்லுக்கான காரணமும் நிவாரணமும்!
It is enough to get rid of these two to get closer to God

அதைக் கேட்ட ஞானி, "முதல் இரண்டு வார்த்தைகளை விட்டு விலகு, மூன்றாவது வார்த்தையை நீ நெருங்கலாம்" எனக் கூற, வந்தவருடன் அந்த இளைஞனும் சிந்தித்தான்.

I மற்றும் WANT எனும் இரண்டையும் விட்டு விலகினால் PEACE நெருங்கி வருகிறது!

‘நான்' என்ற அகங்காரத்தை விலக்குங்கள். 'என்னுடையது' என்கிற ஆசைகளை விலக்குங்கள். 'அமைதி' என்கிற இறைநிலையை நீங்கள் நெருங்கிவிடுவீர்கள். தெளிவான விளக்கம் கிடைத்து அங்கிருந்த இருவருக்கும்.

ஆன்மிகம் என்பது விலகுவதில் அல்லது விலக்குவதில்தான் உள்ளது. எவ்வளவுக்கெவ்வளவு நான் மற்றும் எனது என்ற அகந்தையில் இருந்து விலகுகிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு கடவுளை நெருங்குகிறோம் எனப் பொருள். நாமும் இந்த இரண்டையும் விலக்கி, கடவுளை நெருங்கும் அற்புத உணர்வைப் பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com