காடு மல்லேஸ்வரர் கோயில் நந்தி அதிசயம்!

காடு மல்லேஸ்வரர் கோயில் நந்தி அதிசயம்!
https://www.youtube.com
Published on

பெங்களூரு போன்ற ஒரு பெரும் நகரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் அழகுடன் இன்றும் பாரம்பரியம் மாறாமல் இருப்பதுதான், காடு மல்லேஸ்வரர் திருக்கோயில். இக்கோயில் மிகவும் பழைமையானது என்பது குறிப்பிடத்தக்கதாகும். காடு மல்லேஸ்வரர் கோயில் கர்நாடக மாநிலம், மல்லேஸ்வரம் என்னும் இடத்தில் உள்ளது. இது சிவபெருமானுக்குரிய கோயிலாகும்.

இக்கோயில் 17ம் நூற்றாண்டில் வெங்கோஜி மன்னனால் கட்டப்பட்டது. இவர் மராத்திய மன்னன் வீரசிவாஜியின் உடன் பிறந்தவராவார். இக்கோயில் திராவிட கட்டடக்கலையில்படி கட்டப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமின்றி, இது ஒரு சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது.

இக்கோயிலுக்குச் செல்கையில் நிறைய பாம்பு சிலைகளும், மரம், செடி, கொடிகள் என்று இயற்கை அழகுடன் சேர்ந்து பக்திமயமாகக் காட்சி அளிக்கிறது. பெங்களூருவில் இப்படியொரு அமைதி மிகுந்த இடத்தை காண்பது அதிசயமாகவே உள்ளது. காடு மல்லேஸ்வரர் கோயிலுக்கு வருகை தருபவர்கள் அதற்கு எதிரிலே அமைந்துள்ள தக்ஷிணமுக நந்தீஸ்வரர் தீர்த்த கோயிலையும் பார்த்துவிட்டு செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கோயிலை கண்டுபிடித்தது ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு. ஒரு சமயம் இங்கே கட்டுமான பணிகள் நடந்து கொண்டிருக்கும்போது இக்கோயில் தரையில் ஏதோ ஒன்ற தட்டுப்பட்டிருக்கிறது. மண்ணைத் தோண்டத் தோண்ட கோபுங்களும், சிவலிங்கமும், நந்தியும் வெளிப்பட்டிருக்கிறது. இக்கோயிலில் இருக்கும் நந்தி சிலை எப்போதும் சிவலிங்கத்தின் எதிரே அமர்ந்து லிங்கத்தை பார்த்தவாறு போல அல்லாமல், சிவலிங்கத்தின் மேல்புறம் அமைந்திருக்கிறது.

இதையும் படியுங்கள்:
நீங்கள் எந்த கிரேக்கக் கடவுள் போல உள்ளீர்கள்?
காடு மல்லேஸ்வரர் கோயில் நந்தி அதிசயம்!

அது மட்டுமின்றி, நந்தியின் வாயிலிருந்து நீரூற்று ஒன்று வந்து கொண்டிருக்கிறது. அந்த நீரூற்று சிவலிங்கத்தை அபிஷேகம் செய்வது போல அமைந்திருப்பது அதிசயமான விஷயம். பிறகு அந்த அபிஷேக நீர் தானாகவே எதிரிலே அமைந்திருக்கும் குளத்தில் சென்று கலக்கிறது. இன்று வரை அந்த நந்தியின் வாயிலிருந்து வரும் நீரூற்று எங்கிருந்து வருகிறது என்பது யாருக்குமே புலப்படாத விஷயமாக உள்ளது. எனினும், சிலர் இது விருஷபாவதி ஆற்றிலிருந்து வருகிறது என்று கூறுகின்றனர்.

சிவராத்திரி போன்ற விசேஷ நாட்களில் இக்கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டுச் செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, நீங்களும் இக்கோயிலின் அதிசயத்தை ஒருமுறை சென்று கண்டு களித்து விட்டு வாருங்கள்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com