கங்கைகொண்டசோழபுரம் என்றாலே அனைவர் நினைவிற்கும் வருவது ராஜேந்திர சோழன்தான். ராஜேந்திர சோழன் இங்கே கட்டிய கோயில் உலகப் பிரசித்திப் பெற்றதாகும். ஆனால், அதற்கு முன்பு ராஜேந்திர சோழன் இங்கே கட்டிய விநாயகர் கோயிலைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? அதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தின் தென்திசையில் அமைந்திருக்கும் கனக விநாயகர் கோயிலைத்தான் ராஜேந்திர சோழன் முதலில் கட்டி வழிபட்டார் என்று சொல்லப்படுகிறது. கலிங்கத்துப் போரின் முடிவில் அங்கிருந்து எடுத்து வரப்பட்ட சிலைகளுள் இந்த விநாயகர் சிலையும் ஒன்று என்று சொல்லப்படுகிறது.
ஒரு நாள் மன்னர் ராஜேந்திர சோழன் தனது கணக்கரை அழைத்து, “கங்கைகொண்ட சோழபுரம் கோயில் கட்டுமானத்துக்கு அதுவரையான செலவு மொத்தம் எவ்வளவு?” என்று கேட்டார். இதைக்கேட்ட கணக்கருக்கு தூக்கி வாரிப்போட்டது. ஏனெனில், நாள் முழுவதும் ஆலயப் பணியிலேயே இருந்ததால், அவருக்குக் கணக்கு எழுத நேரமில்லாமல் போனது. உடனே, மறுநாள் கணக்கு தருவதாகக் கூறிவிட்டு வந்த கண்க்கர், ‘கடவுளே என்னைக் காப்பாற்று’ என்று கனக விநாயகர் கோயிலுக்குச் சென்று வழிபட்டார்.
அன்று இரவு கணக்கரின் கனவில் வந்த கனக விநாயகர், கங்கைகொண்ட சோழபுரம் கோயில் கட்டுமானத்துக்கு அதுவரையான மொத்த செலவையும் சரியாகச் சொல்லி மறைகிறார்.
அடுத்த நாள் மன்னரிடம் வந்த கணக்கர், கோயில் கட்ட இதுவரை எவ்வளவு செலவானது என்பதை துல்லியமாகச் சொல்கிறார். இதைக் கேட்டு ஆச்சர்யம் அடைந்த மன்னன், “எப்படி இந்தக் கணக்கை இவ்வளவு துல்லியமாக நினைவில் வைத்திருக்கிறீர்கள்?” என்று கேட்டார்.
மன்னரிடம் எதையும் மறைக்க விரும்பாத கணக்கர், நடந்த உண்மைகளை அப்படியே மன்னரிடம் கூறுகிறார். இதைக்கேட்ட மன்னர் மிகவும் ஆச்சர்யமடைகிறார். கோயில் கட்டுவதற்கு கனக விநாயகரே ஆசிர்வாதம் வழங்கியுள்ளார் என்று எண்ணி விநாயகப்பெருமானை கண்ணீர் மல்க வணங்குகிறார். இப்படித்தான் கனக விநாயகர் காலப்போக்கில் கணக்கு விநாயகரானார்.
புதிதாக வீடு கட்ட நினைப்பவர்கள், தொழில் ஆரம்பிக்க நினைப்பவர்கள், தொழிலில் முன்னேற்றம் வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த கணக்கு விநாயகரை வணங்கினால் வாழ்வில் அதிசயம் நிகழும் என்பது பக்தர்களிள் நம்பிக்கையாக உள்ளது. எனவே, இக்கோயிலுக்கு வாழ்வில் ஒருமுறையாவது சென்று தரிசித்துவிட்டு வருவது சிறப்பாகும்.