கணக்குச் சொன்ன கனக விநாயகர் பற்றி தெரியுமா?

ஸ்ரீ கனக விநாயகர் கோயில்
ஸ்ரீ கனக விநாயகர் கோயில்
Published on

ங்கைகொண்ட சோழபுரம் அருள்மிகு பிரகதீஸ்வரர் ஆலயத்தின் அருகே ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கனக விநாயகர் திருக்கோயில். ராஜேந்திர சோழன் கங்கைகொண்ட சோழபுரத்தை நிர்மாணித்த பிறகு தனது தந்தை ராஜராஜசோழன் கட்டிய மிகப்பெரிய தஞ்சை பெருவுடையார் கோயில் போல தானும் கட்ட வேண்டும் என தீர்மானித்து திருப்பணிகளைத் தொடங்கினான்.

அப்போது அனுதினமும் வழிபட அரண்மனைக்கு முன் இந்த கனக விநாயகர் கோயிலை அமைத்து, இக்கோயிலுக்கு வடகிழக்கே பிரகதீஸ்வரர் கோயிலை அமைக்கும் பணியை தனது அமைச்சரிடம் ஒப்படைத்தான். திருப்பணிகளுக்குத் தேவையான பொன், பொருட்களை அரண்மனை கணக்கர் தினமும் அமைச்சரிடம் தருவார். அவற்றை அமைச்சர் இந்த கனக விநாயகர் திருமுன் வைத்து வணங்கிய பின்பே ஆலய திருப்பணிகளை ஆரம்பிப்பார். இந்த விநாயகருக்கு பால், எண்ணெய் அபிஷேகம் செய்யும்போது இவர் பச்சை நிற மேனியாகக் காட்சி தருவார். இப்படியே இடைவிடாமல் பதினாறு ஆண்டுகள் அமைச்சர் தலைமையில் திருப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன.

ஒரு நாள் ஆலய திருப்பணிகளை பார்வையிட மன்னன் வந்தான். ஆலயம் கம்பீரமாக எழும்பிக் கொண்டிருப்பது கண்டு பரவசமடைந்தான். பின் அமைச்சரிடம், ‘திருப்பணிக்கான செலவுக்குரிய கணக்கை நாளை காலை தெரிவியுங்கள்’ என கட்டளை இட்டு விட்டு சென்றான் மன்னன். அமைச்சருக்கு தூக்கி வாரி போட்டது. திருப்பணி செய்யும் மும்முரத்தில் அவர் கணக்கு ஏதும் எழுதவில்லை. அமைச்சருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. தெய்வம்தான் தம்மைக் காக்க வேண்டும் என்று கனக விநாயகர் சன்னிதிக்கு ஓடோடி வந்தார்.

‘பெருமானே மன்னர் திடீரென கணக்கு கேட்கிறார். நான் என்ன செய்வேன்? தாங்கள்தான் இதற்கு வழி காட்ட வேண்டும்’ என கண்ணீர் மல்கி மனமுருக பிரார்த்தனை செய்துவிட்டு இல்லம் சென்றார். அன்றிரவு அமைச்சர் கனவில் தோன்றிய கனக விநாயகர், ‘அமைச்சரே வருந்தாதீர். இதுவரை எத்து நூல் எட்டு லட்சம் பொன் செலவானது என மன்னரிடம் கூறுங்கள்’ என அருளி மறைந்தார்.

கண் விழித்த அமைச்சர், கனக விநாயகர் சன்ளதி நோக்கி கைகூப்பி வணங்கினார். உடனே ஓலைச்சுவடியை எடுத்து அதில் எத்து நூல் எட்டு லட்சம் பொன் என்று எழுதி வைத்துவிட்டார்.

மர வேலை, சுவர் வேலை செய்யும்போது வளைவு வராமல் இருப்பதற்காக பயன்படுத்தப்படும் நூலை எத்து நூல் என்பர். இதைக் கொண்டு கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும் கல் மரம் மணல் எவ்வளவு வாங்கப்பட்டது என கணக்கிட்டு விடலாம். எத்து நூல்தான் முக்கிய இடம் வகிக்கிறது. மறுநாள் அமைச்சர் மன்னரிடம் விநாயகர் கனவில் சொன்னபடி கூறினார். இவ்வளவு செலவானது என்றால் நாம் நினைத்தபடியே கோயில் சிறந்த முறையில்தான் உருவாகி வருகிறது.

இதையும் படியுங்கள்:
வீட்டின் சுத்தத்தை உறுதி செய்ய 7 குறிப்புகள்!
ஸ்ரீ கனக விநாயகர் கோயில்

‘மகிழ்ச்சி அமைச்சரே. எப்படி நீங்கள் இவ்வளவு துல்லியமாகக் கணக்கிட்டீர்கள்’ என்று கேட்டான் மன்னன்.

நடந்த உண்மைகளை அமைச்சர் அப்படியே மன்னனிடம் கூறி விட்டார். ஆச்சரியம் அடைந்த மன்னன், கனக விநாயகர் சன்னிதி முன் நின்று கண்ணீர் மல்க வணங்கினான். ‘விநாயகப் பெருமானே தெரிவித்த கணக்கானதால் அது சரியாகத்தான் இருக்கும். இதன் மூலம் பிரகதீஸ்வரர் ஆலயம் எழுப்ப விநாயகரே ஆசி வழங்கிவிட்டார். எனவே, இந்த கனக விநாயகர் இனிமேல் நமக்கு கணக்கு பிள்ளையார் ஆகிவிட்டார்’ என பெருமிதத்துடன் கூறினார். இந்த விநாயகரை பிற்காலத்தில் எவரேனும் வேறு இடத்திற்கு மாற்றி விடக்கூடாது என்று எண்ணி நாலடி உயரம் மூன்று அடி அகலம் உடைய இவரின் சன்னிதி மிகச் சிறிய நுழைவாயிலை கட்டி விட்டான். அன்னியர் படையெடுப்பு வந்தபோது பிரகதீஸ்வரர் ஆலயத்திற்கும் இந்த கனக விநாயகர் ஆலயத்திற்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதற்கு இந்த கனக விநாயகர் அருள்தான் காரணம்.

சங்கடஹர சதுர்த்தி நன்னாளான இன்று இந்த கனக விநாயகரை வழிபட்டு வாழ்வில் வளம் பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com