காஞ்சிக்கு அருகில் அமைந்த ஒரு அற்புதக் குடைவரை கோயில்!

குரங்கணில்முட்டம் குடைவரைக் கோயில்
குரங்கணில்முட்டம் குடைவரைக் கோயில்

ல்லவ மன்னன் மகேந்திர வர்மனே முதன்முதலாகக் குடைவரைக் கோயிலை உருவாக்கினான் என்று மண்டகப்பட்டு கல்வெட்டு மூலமாக அறியப்படுகிறது. மாமண்டூர், மகேந்திரவாடி, தளவானூர் விளாப்பக்கம், பல்லாவரம் மற்றும் திருச்சி குடைவரைக் கோயில்கள் மகேந்திர வர்மன் காலத்தைச் சேர்ந்தவை. குடுமியான்மலை, திருமெய்யம், சித்தன்னவாசல் போன்ற பகுதிகளில் உள்ள குடைவரைக் கோயில்கள் பாண்டியர் காலத்தைச் சேர்ந்தவை என்று ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.

குரங்கணில்முட்டம் கல்வெட்டு
குரங்கணில்முட்டம் கல்வெட்டு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம் குரங்கணில்முட்டம். இக்கிராமத்தில் ஒரே ஒரு குடைவரைக் கோயில் அமைந்துள்ளது. இந்த குடைவரைக்கோயில் அமைந்துள்ள பகுதியானது பல்லவபுரம் என்று அழைக்கப்பட்டுள்ளதாலும் இக்குடைவரை பல்லவர்களின் பாணியில் அமைந்துள்ளதாலும் இக்குடைவரை பல்லவர்களின் காலத்தைச் சேர்ந்தாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆனால், இக்குடைவரையில் பல்லவர்களின் கல்வெட்டுக்கள் காணப்படவில்லை என்பதும், இங்கு ராஷ்டிரகூட மன்னன் கன்னரத்தேன் காலத்தைச் சேர்ந்த சில கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன என்பதும் கூர்ந்து நோக்கத்தக்கது.

குரங்கணில்முட்டம் குடைவரைக் கோயில் மற்ற குடைவரைக் கோயில்களிலிருந்து சற்றே மாறுபட்டது. காரணம், பிற குடைவரைகள் பூமி மட்டத்திற்கு மேற்புறத்திலோ அல்லது குன்றுகளிலோ குடையப்பட்டிருக்கும். ஆனால், இந்த குடைவரை தரைமட்டத்திற்கு கீழே குடையப்பட்டுள்ளது. இக்குடைவரை சுமார் 1500 ஆண்டுகளுக்கு முந்தைய குடைவரையாகும். பின்புறச் சுவரில் மூன்று கருவறைக் குடைவறைகளும், இரண்டு பக்கச் சுவர்களிலும் பக்கத்திற்கு இரண்டாக நான்கு கருவறைக் குடைவுகளும் என மொத்தம் ஏழு கருவறைகள் காணப்படுகின்றன.

குடைவரைக் கோயில்
குடைவரைக் கோயில்

குரங்கணில்முட்டம் குடைவரை பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகிய மும்மூர்த்திகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. நடுவில் உள்ள குடைவரையில் சிவனின் சிற்பமும், தெற்குக் குடைவரையில் மகாவிஷ்ணுவின் சிற்பமும் காணப்படுகிறது. இவை பிற்காலத்தில் வைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. வடக்குக் குடைவரையானது சிற்பம் ஏதுமின்றி காட்சி தருகிறது. இந்த மூன்று குடைவரைகளின் வெளியே ஒவ்வொரு குடைவரையின் முன்பாக பக்கத்திற்கொன்றாக துவாரபாலகர்கள் அமைந்துள்ளார்கள்.

குரங்கணில்முட்டம் குடைவரைக் கோயில்
குரங்கணில்முட்டம் குடைவரைக் கோயில்

கிழக்கு நோக்கிய இக்குடைவரை மண்டபத்தில் அர்த்த மண்டபம் மற்றும் முக மண்டபத்தைக் குறிக்கும் வகையில் இரண்டு வரிசைகளில் தூண்கள் உள்ளன. ஒவ்வொரு வரிசையிலும் இரண்டு முழுத்தூண்களும் சுவர்களை அண்டி இரண்டு அரைத்தூண்களும் காணப்படுகின்றன. இந்த இரட்டை வரிசைத் தூண்கள் அமைப்பானது பொதுவாக, மகேந்திரவர்மனின் குடைவரைகளில் காணப்படும் அம்சமாகும்.

இதையும் படியுங்கள்:
மனம் பக்குவம் பெற இந்த 6 வழிகள் போதும்!
குரங்கணில்முட்டம் குடைவரைக் கோயில்

காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் காஞ்சிபுரத்திலிருந்து சுமார் பத்து கிலோ மீட்டர் தொலைவில் தூசி என்ற ஊர் அமைந்துள்ளது. அங்கிருந்து பிரியும் குரங்கணில்முட்டம் பாதையில் இரண்டு கிலோ மீட்டர் கடந்து சென்றால் பாலாற்றங்கரைக்கு அருகில் இக்குடைவரை அமைந்துள்ளது.

இதே பகுதியில் சில கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள நரசமங்கலம் மாமண்டூரில் பல்லவர் காலத்தைச் சேர்ந்த நான்கு குடைவரைகள் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com