கலியுகக் கவலைகளைத் தீர்க்கும் கந்த சஷ்டி கவசம்!

கலியுகக் கவலைகளைத் தீர்க்கும் கந்த சஷ்டி கவசம்!

‘துதிப்போர்க்கு வல்வினை போம் துன்பம் போம்...’

என்ற விருத்தத்தில் ஆரம்பித்து,

‘சஷ்டியை நோக்க சரவண பவனார்

சிஷ்டருக்கு உதவும் செங்கதிர் வேலோன்

பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை

கீதம் பாடக் கிண்கிணி ஆட…’

என்று தொடரும் கந்த சஷ்டி கவசம் உலகம் முழுவதும் உள்ள தமிழ் அறிந்த இந்து மக்கள் இல்லங்களிலும், திருக்கோயில்களிலும் தினமும் ஒலிக்கும் நம் தமிழ் தெய்வம் திருமுருகனின் தெய்வீகத் தமிழ்ப்பாடல். பாடுவோரையும் கேட்போரையும் பரவசப்படுத்தி மன நிம்மதி தரும். அனைவரை உள்ளத்தையும் உடலையும் அதிரவைக்கும் ஆற்றல் படைத்த அருந்தமிழ்ப் பாமாலை.  இதனைப் பாடியவர் பாலன் தேவராய சுவாமிகள்.

கந்த சஷ்டி கவசம் பாடிய தேவராய சுவாமிகள் காங்கேயத்தை அடுத்த மடவிளாகம் என்னும் ஊரைச் சேர்ந்தவர். அவருடைய தந்தை வீராசாமி பிள்ளைக்கு நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல், பின் முருகன் அருளால் பிறந்தவர் பாலன் தேவராயர். இவர் 19ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவர் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் சிஷ்யராக இருந்து, தனது தமிழ் இலக்கிய அறிவை வளர்த்துக் கொண்டார்.

ஸ்ரீ கந்த சஷ்டி கவசத்தை இயற்றிய ஸ்ரீ தேவராய சுவாமிகள் பெரிய முருக பக்தர். இவர் மிகவும் எளிய முறையில் எல்லோரும் தினந்தோறும் ஓதும்படி கந்த சஷ்டி கவசம் நமக்கு அளித்துள்ளார். கந்த சஷ்டி கவசம் சென்னிமலை என்னும் முருகன் திருத்தலத்தில் அரங்கேற்றம் செய்யப்பட்டது. திதிகளில் முருகனுக்கு உகந்தது சஷ்டி திதி. இது அமாவாசை, பௌர்ணமி கழிந்த ஆறாம் நாள் மாதாமாதம் வருவதாகும். ஜாதகத்தில் ஆறாம் கட்டம் ரோகம், பிணி, விரோதம், பகைவர் ஆகியவற்றைக் குறிக்கும். இந்த எல்லா தோஷங்களையும் போக்கும் விதமாக கந்தசஷ்டி கவசத்தை நாம் மாதாந்திர சஷ்டி தினங்களில் ஓதுவோமானால், ஆறு முகங்கள், சரணவப என்னும் ஆறு அட்சரம், ஆறுபடை வீடுகள், ஆறு கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டவர் என்னும் விசேஷங்களை கொண்ட ஸ்ரீ முருகப்பெருமான் நம் கஷ்டங்களைத் தீர்ப்பார். கந்தனின் திருவடிகளை விடாது பிடித்துக்கொண்டால் எந்த தோஷமோ, கெடுதலோ நம்மை அண்டாது.

ஸ்ரீ பாலன் தேவராயர் இயற்றிய இந்த கந்த சஷ்டி கவசம் நம்மைத் தீமைகளிலிருந்தும் கஷ்டங்களிலிருந்தும் காப்பாற்றுகிறது.  இந்த சஷ்டி கவசத்தை தினமும் காலையிலும் மாலையில் ஓத, முருகனே காட்சி தந்து விடுவான். கவசம் என்றால் நம்மைக் காப்பாற்றக்கூடிய ஒன்று என்று பொருள். போர் செய்யும்போது வீரர்கள் தங்கள் உடலைக் காத்துக்கொள்ள கவசம் அணிந்து கொள்வார்கள். இங்கு கந்த சஷ்டி கவசம் நம்மை இவ்வுலக வாழ்க்கையின் தீமைகளிலிருந்தும் கஷ்டங்களிலிருந்தும் காப்பாற்றுகிறது.

கந்த சஷ்டி கவசம் தொடர்ந்து சொன்னால் நம் மனதில் இருக்கும் பயம் அகலும்.  எதிரிகள் விலகுவர். வெற்றியைத் தேடித் தரும். ‘சஷ்டியை நோக்க’ என்று ஆரம்பித்து பாதம் இரண்டில் பன்மணிச் சலங்கை, கீதம் பாட கிண்கிணியாட, மயில் மேல் அமர்ந்து முருகன் ஆடி ஆடி வரும் அழகை கற்பனை செய்து பார்த்தாலே பரவசமாகுதே!

முருகன் வந்து விட்டான். இப்பொழுது என்னைக் காக்க வேண்டும் என்று தலை முதல் பாதம் வரை நம் உறுப்புகள் ஒவ்வொன்றையும் காக்க  முருகனை அழைக்கும் அழகே அழகு. கண்களுக்கு கதிர்வேல், செப்பிய நாவிற்கு செவ்வேல், நாசிகளுக்கு நல்வேல், இளங்கழுத்திற்கு இனிய வேல், வயிற்றிற்கு வெற்றிவேல் என்று உடல் முழுவதும் ஒரு பகுதி கூட விட்டு விடாமல் முருகனின் வேல் நம்மைக் காக்க அறைகூவல் விடுக்கிறார் தேவராய சுவாமிகள். அது மட்டுமா? பில்லி, சூனியம் அண்டாமல் காக்க, பெரும் பகை, வல்லபூதம், அடங்காமுனி, கொள்ளிவாய்ப் பிசாசு, பிரும்மராட்சசன், இரிசி காட்டேரி இவை அத்தனையும் முருகன் பெயர் சொன்னாலே ஓடி ஒளிந்து விடும் என்கிறார்.

அடுத்தபடியாக, மந்திரவாதிகள் மற்றவருக்கு கெடுதல் செய்ய உபயோகிக்கும் பொருட்களான, பாவை, முடி, மண்டை ஓடு, எலும்பு, நகம் மாயாஜால மந்திரம் எல்லாம் சஷ்டி கவசம் படித்தால் செயல் இழந்து விடும் என்கிறார். புலியும், நரியும் எலியும் கரடியும், தேளும், பாம்பும், செய்யான், பூரான் இவைகளால் ஏற்படும் விஷம் சஷ்டி கவச ஓசையிலேயே இறங்கி விடும் என்று உறுதியாகச் சொல்கிறார்.

இந்த கவசத்தில் முருகன் அருள்பாலிக்கும் எல்லா திருத்தலங்களின் பெயர்களும் சொல்லப்பட்டாலும், 'சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக' என்பது விசேஷமாக சென்னிமலை முருகனைக் குறித்து சொல்லப்பட்டிருக்கிறது. 'சிரம்' என்றால் தலை, 'கிரி' என்றால் மலை. மலைகளில் எல்லாம் தலையாய மலை என்பதால் இதற்கு இப்படிப் பெயர் சூட்டியுள்ளனர்.

இதையும் படியுங்கள்:
அச்சாணியாக மாறிய கைகேயின் கைவிரல்!
கலியுகக் கவலைகளைத் தீர்க்கும் கந்த சஷ்டி கவசம்!

வளர்பிறை சஷ்டி தினத்திலும் ஐப்பசி கந்த சஷ்டியின் ஆறு நாட்களிலும் பக்தர்கள் விரதமிருந்து முருகனை வழிபடுகிறார்கள். இந்த வழிபாடு குழந்தைப் பேறுக்கு மிகவும் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. 'சட்டியில் இருக்க அகப்பையில் வரும்' என்னும் ஒரு பிரபலமான பழமொழி இந்த விரதத்தையே குறிக்கிறது.  அதாவது, சஷ்டியில் முருகனை நோக்கி விரதம் இருந்தால், அகப்பையில் (பெண்களின் கருப்பையில்) கரு உருவாகும் என்னும் உன்னதமான விஷயமே இப்படி கூறப்பட்டிருக்கிறது.

கந்த சஷ்டி கவசத்தை சிந்தை கலங்காது தியானிப்பவர்கள் ஒருநாள் முப்பத்தாறு முறை ஓதி ஜபம் செய்து திருநீறணிய எல்லா நோயும் நீங்கும். நவக்கிரகங்கள் மகிழ்ந்து நன்மை செய்யும். என்றென்றும் இன்பமாக வாழ்வார்கள் என்று அறுதியிட்டு உறுதியாகச் சொல்கிறார் ஸ்ரீ பாலன் தேவராயர். நாமும் இந்த ஐப்பசி மாத கந்த சஷ்டி ஆறு நாளும் கந்தனுக்கு விரதம் இருந்து கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்து முருகக் கடவுளை வழிபட்டு எல்லா நலமும் பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com