கண்ணன், சுதாமா, பலராமன் ஆகியோர் குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒருநாள் மாலை வேளையில் அவர்கள் மூவரும் அருகிலிருந்த அடர்ந்த காட்டிற்குள் சென்றார்கள். பேசிக்கொண்டே வெகு தொலைவு காட்டிற்குள் சென்ற அவர்களால் திரும்பி குருகுலம் செல்லும் வழியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இரவு வேளை. அடர்ந்த மரங்களால் நிலா வெளிச்சமும் தெரியவில்லை. ஆகவே, இரவைக் காட்டிலேயே கழிக்க முடிவு செய்தார்கள். வனவிலங்குகளிருந்து பாதுகாத்துக்கொள்ள இருவர் தூங்கும்போது ஒருவர் காவலுக்கு இருப்பது என்று முடிவானது. முதலில் சுதாமா, பின்பு பலராமன், கடைசியில் கண்ணன் காவல் செய்வது என்று தீர்மானித்தார்கள்.
பலராமனும், கண்ணனும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, சுதாமா காவலில் இருந்தான். ஒரு சில மணித்துளிகளுக்குப் பிறகு பெரிய பேரிரைச்சல் கேட்டது. கரிய, பயங்கரமான ராட்சத உருவமொன்று தன்னை நோக்கி ஒடி வருவதைக் கண்டான் சுதாமா. பயத்தினால் நடுநடுங்க ஆரம்பித்தான். அவனுடைய பயம் அதிகரிக்க அதிகரிக்க ராட்சத உருவத்தின் அளவும் அதிகரிக்க ஆரம்பித்தது. அதனுடைய சத்தமும் அதிகரித்தது. ‘பலராமா’ என்று அலறியபடி மயங்கி விழுந்தான் சுதாமா. சுதாமா மயங்கி விழுந்தவுடன் அந்த ராட்சத உருவம் மறைந்து போயிற்று.
சுதாமாவின் குரல் கேட்டு எழுந்த பலராமன், தன்னுடைய முறை வந்துவிட்டது என்று காவலில் ஈடுபட்டான். சிறிது நேரம் கழித்து அவனும் பயங்கர சத்தத்துடன் மலை போன்ற சரீரம் கொண்ட ராட்சதன் ஓடி வருவதைப் பார்த்தான். மூவரையும் இந்த ராட்சதன் விழுங்கி விடுவான் என்ற பயத்தில் நடுங்க ஆரம்பித்தான். பலராமன் அச்சத்திற்கேற்றவாறு ராட்சத உருவத்தின் அளவும், அதன் இரைச்சலும் அதிகரிக்க ஆரம்பித்தது. ‘கண்ணா’ என்று கத்திக்கொண்டே மயங்கி விழுந்தான் பலராமன். ராட்சத உருவமும் மறைந்தது.
விழித்தெழுந்த கண்ணன் காவல் செய்ய ஆரம்பித்தான். சற்று நேரத்தில் பலத்த சத்தத்துடன் ராட்சத உருவம் ஓடி வருவதைப் பார்த்தான். ‘யார் நீ? என்ன வேண்டும் உனக்கு? ஏன் இப்படிச் சத்தமிடுகிறாய்?’ என்று அதட்டுகின்ற தோரணையில் கேட்டான் கண்ணன். கண்ணன் கேள்வி கேட்க கேட்க அந்த உருவத்தின் அளவு குறைய ஆரம்பித்தது. அதனுடைய சத்தமும் குறைந்துப் பின் நின்று விட்டது. அந்த உருவம் ஒரு சிறிய பொம்மையாக மாறிற்று. அதை எடுத்துத் தன் சட்டைப் பையில் வைத்துக் கொண்டான் மாயக் கண்ணன்.
காலையில் கண்விழித்த சுதாமாவும், பலராமனும் கண்ணனிடம் இரவு நடந்ததைக் கூறினார்கள். ‘நீங்கள் பார்த்த உருவம் இதுவா?’ என்று அந்த பொம்மையை எடுத்துக் காண்பித்தான் கண்ணன். ‘ஏன் அந்த உருவம் எங்களுக்குப் பெரிதாக வளர்ந்தது, எப்படி உன்னெதிரில் அந்த உருவம் சிறிய தோற்றத்தை அடைந்து பொம்மை ஆயிற்று?’ என்று வினவினான் பலராமன்.
கண்ணன் கூறினான், “ஒரு பொருளைப் பற்றியோ, செயலைப் பற்றியோ நாம் பயப்படும்போது, நமது பயம் அதிகரிக்கிறது. அதனால், அந்த பயம் பூதாகாரமாகப் பெரிதாகத் தோற்றமளிக்கிறது. ஆனால், அதைப் பற்றி பயப்படாமல் அது என்ன? ஏன் பயப்பட வேண்டும் என்று ஆராயும்போதும், நம்மை நாமே கேள்வி கேட்டுக் கொள்ளும்போதும், நமது பயம் குறைகிறது” என்றான்.
இந்தக் கதையில் வரும் ராட்சதன்தான் பயம். ஏன், எதற்கு என்று தெரியாமல் பயப்படும்போது, அந்த உருவம் பெரியதாகி அச்சுறுத்தியது. நான் ஏன் பயப்படுகிறேன் என்று அலசி, ஆராய்ந்தபோது, பயம் ஒன்றுமில்லாமல் போய் விடுகிறது.
நாமும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியது இதுதான். பயம் என்பது மனம் சம்பந்தப்பட்டது. அந்தப் பயத்தை பூதமாக மாற்றுவதோ அல்லது விளையாட்டுப் பொம்மையாக மாற்றுவதோ நம் கையில்தான் உள்ளது.