தவம் என்றால் மூச்சு அடக்கி நீரில் நின்று, தலைகீழாகக் காட்டில் இருந்துகொண்டு செய்வது மட்டுமே அல்ல. அதைவிட எளிமையான தவம் ஒன்று இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு தவத்தைச் செய்தவன்தான் கர்ணன். தவம் ஒரு மனிதனுக்கு என்னவெல்லாம் பெற்றுத் தருமோ, அவற்றை எல்லாம் கர்ணனின் கொடைக் குணமே அவனுக்குப் பெற்று தந்தது.
‘மாதா, பிதா, குரு, தெய்வம் இந்த நான்கு பேரும்தான் இவ்வுலகில் பிறப்பவர்களுக்குத் துணை’ என்று சொல்வார்கள். ‘இந்த நான்கு பேருமே துணை நிற்காவிட்டாலும் என் கொடை குணத்தாலும், செய்நன்றி அறியும் குணத்தாலும், தன்னம்பிக்கையாலும் நான் நிமிர்ந்து நிற்பேன்’ என்று நமக்கு வாழ்ந்து நிமிர்ந்து காட்டியவன் கர்ணன். தன் தாய் யார்? தந்தை யார்? என்று அவனுக்குத் தெரியாது. தந்தையான கதிரவனும் அவனுக்குச் சரியான ஞானத்தைத் தரவில்லை. பரசுராமர்தான் கர்ணனின் குரு. அவரிடம் சென்று வில் வித்தை கற்றுக்கொள்ள செல்கிறான். தனுர் வேதத்தில் சிறந்தவர் பரசுராமர். ‘எந்த க்ஷத்ரியனுக்கும் தனுர் வேதத்தைக் கற்றுத் தர மாட்டேன்’ என்று சபதத்தோடு இருந்தவர் பரசுராமர். தான் ஒரு அந்தணன் என்று பொய் சொல்லிக்கொண்டு பரசுராமர் முன் நின்றான் கர்ணன்.
கர்ணனின் தோற்றத்தைப் பார்த்து, அவன் சொன்னதை நம்பி அவனுக்கு முழு வில் வித்தையையும் கற்றுத் தருகிறார் பரசுராமர். ஒரு நாள் மதியம் கர்ணன் மரத்தடியில் அமந்திருக்க, அவன் மடியில் தலைவைத்து பரசுராமர் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது இந்திரன், ‘அர்ஜுனனோ தன் பிள்ளை, தனது அம்சம். இந்தக் கர்ணன் தனுர் வேதம் முழுவதையும் கற்றுக்கொண்டுவிட்டால் தம் பிள்ளைக்கு எமனாகி விடுவான்’ என நினைத்து, வண்டு ரூபம் எடுத்து கர்ணனின் தொடையில் ஒரு பக்கம் துளைத்து மறு பக்கமாக வெளியேறுகிறான். தனது குருவின் நித்திரை கெடக்கூடாது என நினைத்து அதைப் பொறுத்துக்கொண்டு அமர்ந்திருக்கிறான் கர்ணன். ரத்தம் கொட்டி, அது பரசுராமர் முகத்தில் பட்டவுடன்தான் அவர் கண் விழிக்கிறார்.
அங்கு நிகழ்ந்ததை அறிந்த பரசுராமர், ‘இவ்வளவு துன்பத்தைப் பொறுத்துக்கொண்ட நீ நிச்சயம் ஒரு பிராமணனாக இருக்க முடியாது. உண்மையைச் சொல்’ என்று பரசுராமர் கேட்கிறார். உடனே கர்ணன், ‘ஸ்வாமி நான் யார் என்றோ, என் தாய், தந்தை யார் என்றோ, என் சாதி, குலம், பிறப்பு எதுவுமே எனக்குத் தெரியாது’ என்று கூறுகிறான் கர்ணன். ஆனாலும், ‘என்னை ஏமாற்றி நீ வில் வித்தையைக் கற்றுக்கொண்டு விட்டாய். உரிய காலத்தில் உனக்கு வில் வித்தை மறந்து போய்விடும்’ என்று சாபம் தருகிறார் பரசுராமர்.
பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே நடைபெற்ற குருக்ஷேத்ர போரில் அர்ஜுனனின் வில் துளைத்து தரையில் வீழ்ந்து கிடந்தான் கர்ணன். அப்போது, ‘கொடையில் அறக்கடவுளைத் தன் பக்கம் கொண்ட கர்ணனை நீ போரில் வெல்ல முடியாது’ என அர்ஜுனனுக்குச் சொன்ன கண்ணன், கர்ணனின் புண்ணியம் அனைத்தையும் தானமாகப் பெற்று வந்த கதை நம் எல்லோருக்குமே தெரிந்ததே. ஆக, தானமே தனது வாழ்வாகக் கொண்ட கர்ணனின் வாழ்க்கையும் ஒரு தவம்தான். ‘கடவுளுக்கும் கொடுத்தவன் கர்ணன்’ என்ற பெருமை அவனுக்கு வர வேண்டும் என்பதற்காகத்தான் அந்த பரமாத்மாவே அவனிடம் சென்று புண்ணியத்தை யாசகமாகப் பெற்று வந்ததோ என்னவோ?