கர்ணன் கடைபிடித்த மகாளயபட்ச வழிபாடு!

கர்ணன் கடைபிடித்த மகாளயபட்ச வழிபாடு!

ஹாளய பட்சம் என்பது புரட்டாசி மாதம் பௌர்ணமிக்கு அடுத்த நாள் முதல் மஹாளய அமாவாசை வரை உள்ள பதினைந்து நாட்கள். சிலர் பௌர்ணமியையும் சேர்த்து பதினாறு நாட்கள் என்பர். இந்தப் பதினைந்து நாட்கள் முன்னோர்களை நினைத்து வழிபடுவதற்கு மிகவும் உகந்தவையாகும். பொதுவாக, முன்னோர்கள் எந்த மாதத்தில், எந்தத் திதியில் மறைந்தார்களோ, அந்தக் குறிப்பிட்ட மாதத்தில், அந்தத் திதியன்று திவசம் என்ற சடங்கு செய்வது வழக்கம். ஆனால், வருடாந்திர சிராத்தம் செய்ய முடியாதவர்கள், மஹாளய பட்சத்தில், அந்தத் திதியில் சிராத்தம் செய்வதால், அவர்கள் செய்ய வேண்டிய முன்னோர் வழிபாடு பூர்த்தி அடைகிறது. மஹாளய பட்சத்தின் பதினைந்து நாட்களும் நம்மை விட்டுச் சென்ற முன்னோர்களுக்காக தர்ப்பணம் செய்வது நல்லது. தர்ப்பணத்தில் முன்னோர்களுக்கு எள்ளும், தண்ணீரும் அளிக்கிறோம். இந்த தர்ப்பணம் அவர்களுக்கு செலுத்தும் நன்றிக்கடன் என்கிறது மனுஸ்மிருதி.

இறந்துபோன முன்னோர்களில் கடைசி மூன்று தலைமுறையினர் பித்ருலோகம் என்றழைக்கப்படும் உலகத்தில் இருப்பதாக நம்பிக்கை. இவர்களை, ‘தென்புலத்தார்’ என்கிறார் வள்ளுவர். இதற்கும் முந்தைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் தேவ லோகம் மற்றும் பிரம்ம லோகம் சென்று விடுகின்றனர். இந்தப் பதினைந்து நாட்களில், பித்ரு லோகத்தில் வசிக்கும் முன்னோர்கள், நம்மைத் தேடி வருவதாக நம்பிக்கை. ஆகவேதான், இந்தப் பதினைந்து நாட்கள் முன்னோர் வழிபாட்டுக்கு உகந்த நாட்களாகக் கருதப்படுகிறது.

இந்த நாளின் முக்கியத்துவம் குறித்து புராணக் கதை ஒன்று உண்டு. மகாபாரதப் போரில் உயிர்நீத்த கர்ணன், அவன் செய்த தான தர்மங்களினால் சொர்க்கம் அடைந்தான். ஆனால், அவன் சாப்பிட அமர்ந்தபோது அவனுடைய தங்கத்தட்டில், உணவுக்கு பதிலாக வெள்ளிக்காசுகள், தங்கக்காசுகள் இருந்தன. காரணம் கேட்ட போது, “நீ உன்னுடைய முன்னோர்களுக்கான வழிபாட்டைச் செய்யவில்லை” என்றான் இந்திரன். இந்திரன் அனுமதியுடன் கர்ணன் பூமிக்கு வந்து மகாளயபட்சத்தில் முன்னோர் வழிபாட்டைச் செய்து பித்ருக்கடனை முடித்துக் கொண்டு பிறகு சொர்க்கம் திரும்பினான். அதன் பிறகு அவனுக்கு ராஜ விருந்து அளிக்கப்பட்டதாக ஐதீகம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com