
இந்து மத நம்பிக்கையின் படி அனைத்து மாதங்களும் சிறப்பு வாய்ந்தவை தான். அப்படி ஒரு மாதம் தான் கார்த்திகை மாதம். இந்த மாதத்தில் தான் ஐயப்ப சீசனும் வரும். அதாவது இந்த மாதம் கடும் குளிர், மழை என இருந்தாலும் பக்தர்கள் மண்டல விரதம் இருந்து, மாலையணிந்து கேரளாவிற்கு சென்று ஐயப்பனை தரிசனம் செய்வார்கள். அப்படிப்பட்ட விஷேசம் நிறைந்த இந்த மாதத்தின் மற்றொரு சிறப்பு தான் கார்த்திகை தீபம்.
இந்த தீபத்திற்கு பிரசித்தி பெற்ற தலம் திருவண்ணாமலை ஆகும். சபரிமலையிலும் மகர ஜோதி ஏற்றப்பட்டாலும், அண்ணாமலையாரின் மலை உச்சியில் ஏற்றப்படும் தீபம் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த தீபம் அணையாமல் 1 வாரம் ஒளிர்வதே அதிசயமானதாகும்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் பஞ்சபூத தலங்களில் அக்னித்தலமாக திகழ்ந்து வருகிறது. நினைத்தாலே முக்தி தரும் தலங்களில் ஒன்றாக திருவண்ணாமலை இருந்து வருகிறது. கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரமும், பௌர்ணமியும் இணைந்து வரக்கூடிய நாளில் தான் தீபம் ஏற்றுவது வழக்கம் ஆகும். அப்படி இந்த நாளில் தான் மக்களும் வீடுகள் முழுவதிலும் விளக்கேற்றி ஒளிர செய்வார்கள்.
கார்த்திகை தீபம் 2024:
2024ஆம் ஆண்டுக்கான கார்த்திகை தீபத்திருநாள் வரும் டிசம்பர் 13ஆம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அண்ணாமலையார் கோயில் மலை உச்சியில் தீபம் ஏற்றப்படும்.
விளக்கேற்றும் நேரம் என்ன?
டிசம்பர் 13ஆம் தேதி சரியாக மாலை 6 மணிக்கு நல்ல நேரமாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் தீபம் ஏற்றுவது சிறப்பாகும்.
தீபத்திருநாளில் என்ன செய்ய வேண்டும்?
வீட்டில் பயன்படுத்தும் காமாட்சி விளக்கு உள்ளிட்டவற்றை முதல் நாளே சுத்தம் செய்து வைத்து கொள்ள வேண்டும்.
வாசலின் இரு முனையில் வைக்கப்படும் இரு விளக்குகள் மட்டும் புதிதாக இருப்பதே கட்டாயம். மீதம் உள்ள இடங்களில் பழைய விளக்குகள் உபயோகப்படுத்தலாம். ஆனால் விளக்குகளை முதல் நாளே சுத்தம் செய்து வைத்து கொள்ள வேண்டும். தீபத்திருநாள் அன்று விளக்குகளை கழுவுவது சரியானது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. சிலர் வாசலில் குத்து விளக்கு ஏற்றுவது ஐதீகம். அப்படி இருக்கையில் குத்துவிளக்கு வைக்கும் இடத்தில் கோலமிட்டு வைப்பதே சிறந்ததாகும்.
இதை தொடர்ந்து ஒவ்வொரு ஊர்களிலும் சொக்கப்பண் கொளுத்தும் நிகழ்ச்சியும் நடைபெறும். சிலர் தீபாவளி நாளை தொடர்ந்து கார்த்திகையிலும் வெடி வெடிப்பார்கள். அன்று வீடுகளில் மட்டுமின்றி வான வேடிக்கைகளால் ஊரே மின்னொளியில் மிண்ணும்.