பசுவை, ‘ஆ’ எனவும் அழைப்பர். எனவே, பசுக்கள் சிவபெருமானை வழிபட்ட தலங்கள், ‘ஆவூர்’ எனவும், அத்தலங்களில் உறையும் இறைவன் பெயர் பசுபதீசர் எனவும் வழங்கப்படுகின்றன.
‘தேனு’ என்பது பசுவின் வடமொழி பெயர்களில் ஒன்றாகும். எனவே பசுக்களால் வழிபடப்பட்ட இறைவன், ‘தேனீஸ்வரர்’ என அழைக்கப்படுகிறார்.
‘கொண்டி’ என்பது காமதேனுவின் மகளுக்கும் பார்வதிக்கும் உள்ள பெயராகும். இவ்விருவராலும் வழிபடப்பட்டதால் ஈசன் கொண்டீஸ்வரர் எனவும் அழைக்கப்படுகிறார்.
‘கோ’ எனவும் பசுக்கள் அழைக்கப்படுகின்றன. ஆதலால், பசுக்கள் சிவ வழிபாடு செய்த தலங்கள் கோவூர், கோமங்கலம், கோவந்தபுத்தூர் எனப் பெயர் பெற்றன.
‘பட்டி’ என்பது பசு கூட்டத்திற்கும், காமதேனுவின் மகள் ஒருத்தியின் பெயருமாகும். எனவே, பட்டியால் பூஜிக்கப்பெற்ற இறைவனுக்கும், பசு பட்டியின் இடையில் அமைந்த ஈசன் பட்டீஸ்வரர் எனப்படுகிறார்.
பசுக்களை நிலையாகக் கட்டுமிடத்தை, ‘ஆநிலை’ என்பர். இத்தகைய இடத்தில் அமையப்பெற்ற கருவூர் கோயில், ஆநிலை எனப்பட்டது. இத்தலத்தில் அமைந்த இறைவன், ‘ஆநிலையப்பர்’ என்றழைக்கப்படுகிறார்.
பார்வதி தேவி பசு வடிவம் கொண்டு ஈசனை வழிபட்ட திருத்தலம் திருவாவடுதுறையாகும். இத்தலத்தில் அன்னை பார்வதி தேவியின் கோ வடிவம் கழிந்ததால் இத்தலம், ‘கோகழி’ எனப்படுகிறது. இத்தலத்தில் பசு வடிவில் விளங்கிய தேவர்களுக்கு இறைவன் முக்தி அளித்ததால், இத்தல ஈசன் கோமுக்தீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
பசுக்கள் தம் உடலில் இருந்து பாலை சுரந்து உலக உயிர்களைக் காப்பதால் அவற்றுக்கு, ‘சுரபி’ என்றும் பெயர். அமுதமாகிய பாலை மக்களுக்கு சுரந்தளிப்பதால் பசுக்களுக்கு அமுதசுரபி எனப் பெயராயிற்று.
கரு நீல நிறம் அல்லது மயில் கழுத்து நிறம் கொண்ட பசுக்கள், ‘கபிலை’ எனப்படும். இத்தகைய கபிலை பசு வழிபட்டதால் இறைவன், ‘கபிலேஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார். திருமலை திருப்பதியின் அடிவாரத்தில் ஆழ்வார் தீர்த்தத்தின், (நந்தி சர்க்கிள்) அருகில் கபிலேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.
இவ்வாறு பல வடிவங்களில், பெயர்களில் பசுக்களால் இறைவன் பூஜிக்கப்பட்ட இடங்கள் சிறப்புப் பெறுகின்றன.