பண்டைய காலத்தில் பேரூருக்கு கிழக்கே தோன்றிய புத்தூரை, ‘கோவன்’ என்ற இருளர் குல தலைவன் காடு திருத்தி, நாடு செய்தபோது உண்டானதுதான் கோவன் புதூர். பின்னர் நாளடைவில் இதுவே, ‘கோயமுத்தூர்’ என மருவியது.
இந்த நகருக்கு காவல் தெய்வமாக அமைந்த சக்திதான் கோனியம்மன். இருளர் தலைவனான கோவன் தனது வீட்டிற்கு வடபாகத்தில் சிறு கோயிலொன்று எடுத்து ஒரு கல் நட்டு தானும் தனது மக்களும் குலதெய்வமாக வழிபட்டு விழா எடுத்து கொண்டாடியதே கோனியம்மன் கோயிலாகும். ‘கோனியம்மன்’ என்றால் அரசர்களால் வழிபடப்படும் தெய்வம் எனவும், ‘தெய்வங்களுக்கு எல்லாம் அரசி’எனவும் பொருள்படும்.
மூலஸ்தானத்தில் வடக்கு பார்த்து கோயில் கொண்டுள்ள அம்மனின் தோற்றம் முகத்தில் மூண்ட கோபமும், உக்கிரமான பார்வையும், தன்னுடன் எதிர்த்துச் சண்டையிட வந்த துஷ்டனை தேவி, அவன் பலத்தை ஒடுக்கி வீரவாளால் சிரத்தை வெட்டி வீழ்த்தி வீரவாகை சூடியவளாக விளங்குகிறாள்.
மர்த்தினியின் வலக்கைகள் நான்கிலும் சூலம், உடுக்கை, வாள், சங்கம் ஆகிய ஆயுதங்களும், இடக்கைகள் நான்கில் கபாலம், அக்னி, சக்கரம், மணி ஆகிய ஆயுதங்களோடும் காட்சி தருகிறாள் அன்னை.
மேலும், இடச்செவியில் தோடும், வலச்செவியில் குண்டலமும் தரித்து காணப்படுவதால் கோனியம்மன் அர்த்தநாரீஸ்வரர் தொடர்புடைய வீரசக்தியாகத் திகழ்கிறாள். தன்னை நாடி வரும் பக்தர்களுக்கெல்லாம் வேண்டியதை வேண்டும் வண்ணம் கொடுக்கும் கொங்கு நாட்டின் காவல் தெய்வமாக இவள் திகழ்கிறாள்.
செவ்வாய், வெள்ளி மற்றும் சுபமுகூர்த்த நாட்களில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் அன்னையை நாடி வந்து அருள் பெறுகின்றனர். திருமணச் சடங்குகளில் மிகவும் முக்கியமானது நிச்சயதார்த்தம் ஆகும். கோவை மக்கள் பெரும்பாலும் உப்புக் கூடை மாற்றிக் கொள்வதன் மூலமாகவே திருமணத்தை உறுதிப்படுத்துகின்றனர்.
கோவையை பொறுத்தவரையில் கோனியம்மன் கோயிலில்தான் பெரும்பாலான திருமணங்கள் அம்மனுக்கு அபிஷேகம் செய்து பெண் வீட்டாரும், பிள்ளை வீட்டாரும் உப்புக்கூடை மாற்றிக் கொண்டு திருமணத்தை நிச்சயிக்கின்றனர்.