தெப்பத் திருவிழா என்பது இந்து சமய கோயில்களின் குளங்களில் நடத்தப்படும் ஒரு திருவிழாவாகும். திருவிழா நாளில் இறைவனை தெப்பத்தில் வைத்து குளத்தில் மிதக்க விடுகிறார்கள். தெப்பக்குளத்தின் நடுவே இருக்கும் நீராழி மண்டபத்தை சுற்றி தெப்பத்தில் இறைவனை வைத்து வலம் வந்து விழா கொண்டாடப்படுகிறது. ஆண்டுக்கு ஒரு முறை கோயில்களில் தெப்பத் திருவிழாவை கொண்டாடுகிறார்கள். தெப்போத்ஸவம், தெப்ப உத்ஸவம், மிதவை திருவிழா என்ற வேறு பெயர்களாலும் இந்தத் திருவிழா அழைக்கப்படுகிறது.
தமிழ்நாட்டின் பல கோயில்களில் தெப்போத்ஸவம் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. விழாவின் ஒரு பகுதியாக கோயில்களின் பிரதான இறைவன் அலங்கரிக்கப்பட்டு கோயில் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது.
தெப்பத்தின் அடிப்பகுதியில் காலி பீப்பாய்களை வரிசையாக இணைத்து அவற்றின் மீது மூங்கில்களையும் மரங்களையும் கட்டி தெப்பத்தினை உருவாக்குகிறார்கள். இதன் மீது சித்திரத் தட்டிகள் மற்றும் அலங்காரப் பொருட்களை இணைக்கிறார்கள். பெரும்பாலும் இரவு வேளைகளில் தெப்பத் திருவிழா நடைபெறுவதால் வண்ண மின்விளக்குகளால் அலங்காரமும் செய்யப்படுகிறது. சித்திர தட்டிகளால் மண்டபம் போல உருவாக்கப்பட்ட அமைப்பின் நடுவே இறைவனை வைத்து குளத்தில் வலம் வருகிறார்கள்.
அதில் திருவாரூர் தியாகராஜர் கோயிலில் நடைபெறும் தெப்பத் திருவிழா மிகவும் சிறப்பு பெற்றது. அந்தத் திருவிழா அங்கு மூன்று நாட்கள் நடைபெறுகிறது. திருவாரூர் தியாகராஜர் கோயிலின் தெப்பத்தின் நீளம், அகலம் 50 அடியாகும். உயரம் சுமார் 42 அடி. பிரம்மாண்டமாக இந்தத் தெப்பம் அமைக்கப்படும்.
சிறப்பு வாய்ந்த திருக்குளத்தில் தெப்பமானது வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட இரவு நேரத்தில் நீரில் மிதந்து வரும்போது காண்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். ஒரு திருக்கோயிலே குளத்தில் மிதந்து வருவது போன்ற காட்சியைக் கொடுக்கும்.
தமிழகத்திலேயே மிகப்பெரிய தெப்பம் இந்தத் திருவாரூர் தியாகராஜர் தெப்பம்தான். தமிழகத்தில் எந்த ஒரு தெப்பத்திலும் மக்களை ஏற்றும் நடைமுறை கிடையாது. ஆனால், திருவாரூர் தெப்பத்தில் மட்டும்தான் மக்களை ஏற்றும் நடைமுறை உள்ளது. அந்த அளவுக்கு பரப்பளவில் மிகப்பெரியதாக இருக்கும் . இந்தத் தெப்பத் திருவிழாவின்போது சுமார் 500 பேர் வரை தெப்பத்தின் மீது அமர்ந்து பயணிப்பார்கள். இந்தத் தெப்பத்தினை கட்டும் பணியில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இரவு, பகல் பாராமல் ஈடுபடுவார்கள். 432 தகர பேரல்களை இரண்டு அடுக்குகளாக வைத்து 36 அடி உயரத்தில் 16 தூண்களுடன் மூன்றடுக்கு மாளிகை போல அமைக்கப்படும். இதில் தியாகராஜர், கமலாம்பாள், நீலோற்பல அம்பாள், விநாயகர், முருகன், கடவுளின் திருவுருவங்களுடன் தெப்பத்தின் மண்டபமானது அலங்கரிக்கப்படும்.
இந்தத் தெப்பத்தில் பார்வதி, கல்யாண சுந்தரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். தெப்ப உத்ஸவம் கமலாலயம் குளத்தில் நடைபெறும். மூன்று நாட்களும் இரவு எட்டு மணிக்கு தொடங்கி, விடிய விடிய குளத்தை தெப்பம் வலம் வரும்.
தெப்பத் திருவிழா பல கோயில்களில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. திருப்பதி வேங்கடேஸ்வரர் கோயில் ,மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், திருவாரூர் தியாகராஜர் கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் என பல கோயில்களில் தெப்ப உத்ஸவம் மிகச்சிறப்பாக நடைபெறுகிறது . தெப்பம் இறைவனுடன் சேர்ந்து மூன்று முறை வலம் வரும். திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் போன்ற பெருமைமிகு தலங்களில் 11 முறை தெப்ப ம் நீராழி மண்டபத்தை சுற்றி வரும். நெல்லையப்பர் கோயிலில் உள்தெப்பம் வெளி தெப்பம் என இரண்டு தெப்பங்கள் மிகவும் விமரிசையாக நடைபெறும். தை மாதம் நெல்லையப்பரும் காந்திமதியம்மையும் சந்திர புஷ்கரணி என்ற தெப்பக்குளத்தில் நெல்லையப்பர் நெடுஞ்சாலையில் உள்ள தெப்பக்குளத்தில் வலம் வருகிறார். மாசி மாதம் அப்பர் தெப்பம் என கோயிலின் உள்ளே உள்ள பொற்றாமரை குளத்தில் நடைபெறும்.
பிறவி எனும் கடலில் விழுந்தவர்களை இறைவனின் கருணையே தெப்பமாக இருந்து கரை சேர்ப்பதை அறியத் தருவதே இவ்விழாவின் பின்னணியாகும். கோயில்களில் நடைபெறும் தெப்பத் திருவிழாவை கண்டு களித்து இறைவனை தரிசித்து பிறவிப் பயனை அடைவோம்.