கும்பத்தால் தோன்றிய கோயில் எங்கிருக்கிறது தெரியுமா?

ஆதிகும்பேஸ்வரர்-மங்களாம்பிகை
ஆதிகும்பேஸ்வரர்-மங்களாம்பிகை
Published on

பாப நிவர்த்தித் தலமான காசியிலே செய்யக்கூடிய பாவங்களையும் போக்கக்கூடிய திருத்தலமாகத் திகழ்கிறது பிரசித்த பெற்ற கும்பகோணம். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் அமைந்திருக்கிறது ஆதி கும்பேஸ்வரர் திருக்கோயில். இத்தலத்தில் ஈசன் ஆதி கும்பேஸ்வரராகவும், பார்வதி தேவி மங்களாம்பிகையாகவும் பக்தர்களால் வணங்கப்படுகிறார்கள். இக்கோயில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். கும்பகோணம் திருத்தலத்தில் உள்ள கோயில்களிலேயே இதுவே பெரிய சிவன் கோயிலாகும். கட்டப்படாத கோபுரம் ஒன்று இக்கோயிலில் உள்ளது. அதை மொட்டை கோபுரம் என்று அழைக்கிறார்கள். இதுவே இக்கோயிலின் அடையாளமாக விளங்குகிறது.

கும்பகோணம் என்ற பெயர் காரணத்திற்கும், இக்கோயிலுக்கும் தொடர்புண்டு என்று சொல்லப்படுகிறது. ஒரு சமயம் மகா பிரளயத்துக்கு பிறகு, உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளையும் தன்னுள் அடக்கிய கும்பம் ஒன்று இத்தலத்தில் நின்றதால் இத்தலத்துக்கு கும்பகோணம் என்ற பெயர் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தக் கும்பத்தில் இருந்த அமிர்தம் விழுந்த இடம்தான் மகாமகம் குளம் மற்றும் பொற்றாமரை குளம் என்று நம்பப்படுகிறது. அங்கிருந்த மணலோடு அமிர்தம் சேர்ந்து உருவானதுதான் ஆதி கும்பேஸ்வரர் கோயிலில் உள்ள சிவலிங்கம். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகத்தில் இந்நிகழ்வு நினைவுக்கூறப்படுகிறது. கும்பகோணம் திருத்தலம், ‘குடமுக்கு’ என்ற பெயரிலேயும் அறியப்படுகிறது.

ஆதி கும்பேஸ்வரரை திருகுடமுக்கு என்றும் கூறுவார்கள். இக்கோயிலை 9ம் நூற்றாண்டில் சோழர்கள் காலத்தில் கட்டினார்கள். நாயக்கர்கள் இக்கோயிலை 15 முதல் 17ம் நூற்றாண்டில் விரிவுப்படுத்தினர். இக்கோயிலில் உள்ள சிவலிங்கமானது கூம்பு வடிவத்தில் உள்ளது. தேவாரத்தில் திருகுடமுக்கு என்றே இக்கோயிலை குறிப்பிட்டுள்ளனர். மகா பிரளத்துக்குப் பிறகு இத்தலத்தில் இருந்துதான் உலக உயிர்கள் தோன்றியது என்று நம்பப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
மாதச் சம்பளத்தை வாங்கும் ஆண்களுக்கு பேரானந்தம் தருவது என்ன?
ஆதிகும்பேஸ்வரர்-மங்களாம்பிகை

பன்னிரண்டு வருடத்திற்கு ஒருமுறை கொண்டாடப்படும் மகாமகம் இத்தலத்தில் மிகவும் முக்கியமான திருவிழாவாகக் கருதப்படுகிறது. உலகில் பல இடங்களிலிருந்தும் மக்கள் கூட்டம் மகாமக குளத்தில் நீராடி தங்கள் பாவத்தைத் தீர்க்க வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சித்திரை மாதத்தில் வரும் சபஸ்தான திருவிழா, மே மற்றும் ஜூன் மாதங்களில் கொண்டாடப்படும் திருக்கல்யாணம், ஆடிப்பெருக்கு, ஆடிப்பூரம், பங்குனி உத்திரம் போன்ற விசேஷ தினங்களின்போது சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

இக்கோயிலில் உள்ள விநாயகரை ஆதி விநாயகராக பக்தர்கள் வணங்குகின்றனர். இத்தல முருகப்பெருமான் ஆறு தலையுடனும் ஆறு கைகளுடனும் காட்சி தருகிறார். பன்னிரு கை வேலவன் இத்தலத்தில் ஆறு திருக்கரங்களுடன் காட்சி தருவது விசேஷம். கும்ப முனி சித்தர் சன்னிதி கோயிலுக்கு வெளியே அமைந்துள்ளது. கிரகக் கோளாறுகளால் ஏற்படும் பிரச்னைகளைப் போக்க பக்தர்கள் இங்கே தியானம் செய்வதுண்டு. பல்வேறு அற்புதங்களைக் கொண்ட இக்கோயிலை வாழ்வில் ஒருமுறையாவது தரிசிக்க வேண்டியது அவசியம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com