குரங்கு, அணில், காகம் வழிபட்ட அபூர்வ சிவஸ்தலம்!

இறையார்வளையம்மை சமேத வாலீஸ்வரர் உத்ஸவர்
இறையார்வளையம்மை சமேத வாலீஸ்வரர் உத்ஸவர்

சிவபெருமானை குரங்கு வடிவில் வாலியும், அணில் வடிவில் இந்திரனும், காகம் வடிவில் எமனும் வழிபட்ட அபூர்வமான திருத்தலம், திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டத்தில் காஞ்சிபுரத்திற்கு அருகில் குரங்கணில்முட்டம் என்ற பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயிலாகும். இத்தலம் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் தொண்டைநாட்டில் அமைந்த ஆறாவது தலமாகும். திருமாகறலில் இருந்து கச்சிக்குச் செல்லும் வழியில் இத்தலத்திற்கு வந்த திருஞானசம்பந்தர் இத்தலத்தின் பெருமைகளை பதிகமாகப் பாடி பெருமை சேர்த்துள்ளார்.

வாலி, இந்திரன் மற்றும் எமன் ஆகியோர் தங்கள் முன்வினைப்பயனால் விலங்கு மற்றும் பறவையாக பிறக்க நேரிட்டது. அதன்படி வாலி குரங்காகவும், இந்திரன் அணிலாகவும், எமன் முட்டம் அதாவது காகமாகவும் பூலோகத்தில் பிறந்தனர். தங்களுடைய வினைப்பயன் நீங்க ஈசனிடம் வேண்டி நின்றபோது அவர், ‘காஞ்சிக்குத் தெற்கே சென்று வழிபட்டால் உங்களுடைய வினைப்பயன் அகன்று சாபம் நீங்கப் பெறுவீர்கள்’ என்றார். அவ்வாறே மூவரும் இப்பகுதிக்கு வந்து சிவ பூஜை செய்து வழிபட்டு தங்கள் சாபம் நீங்கப் பெற்றனர் என்பது தலபுராணம்.

காகத்தின் வடிவில் இருந்த எமன் ஈசனை வழிபட, தனது அலகினால் நிலத்தைக் கீற அங்கே ஒரு தீர்த்தம் உருவானது. இதனால் இத்தீர்த்தம், ‘காக்கைமடு தீர்த்தம்’ என்று வழங்கப்படுகிறது. எமன் இத்தீர்த்தத்தில் நீராடி ஈசனை வழிபட்டார்.

சிவ பூஜை செய்யும் வாலி
சிவ பூஜை செய்யும் வாலி

ஈசன் இத்தலத்தில் வாலீஸ்வரர் என்றும், ‘கொய்யா மலர் நாதர்’ என்றும் அழைக்கப்படுகிறார். ஈசன் சுயம்புலிங்கமாக மேற்கு திசை நோக்கி அமைந்து அருளுகிறார். குரங்கின் வடிவில் வந்த வாலி இத்தலத்தில் ஈசனை பூஜிக்க மலர்களைக் கைகளால் பறிக்காமல் மரத்தினை உலுக்கி பூஜை செய்த காரணத்தினால் இத்தலத்து ஈசனுக்கு கொய்யா மலர் நாதர் என்ற பெயரும் ஏற்பட்டது. இத்தலத்தில் ஈசனுக்கு வேறெங்கும் இல்லாத விதமாக கரும்புச்சாறால் அபிஷேகம் செய்யப்படுகிறது. சித்திரை மாதத்தில் சில நாட்கள் சூரிய பகவான் ஈசனை தனது கதிரொளி வீசி வழிபடுவதும் இத்தலத்தின் மற்றுமொரு சிறப்பாகும்.

குரங்கணில்முட்டம் வாலீஸ்வரர் கோயில்
குரங்கணில்முட்டம் வாலீஸ்வரர் கோயில்

அம்பாள் இறையார்வளையம்மை என்ற திருப்பெயரால் தெற்கு திசை நோக்கி அமைந்து அருளுகிறார். அம்பாள் கைகளில் வளையல் அணிந்த வண்ணம் இன்முகத்துடன் அருளுவது சிறப்பாகும். திருமணமான பெண்கள் இத்தலத்திற்கு வந்து அம்பாளுக்கு வளையல்களை சமர்ப்பித்து பின்பு அதனை அணிந்து கொள்ளுகின்றனர். இதனால் புத்திரப்பேறும் சுகப்பிரசவமும் நடைபெறும் என்பது ஐதீகம்.

உள்சுற்றுப் பிராகாரத்தில் விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர், சூரியன், பைரவர், நவகிரகங்கள், நால்வர், சப்தமாதர் சன்னிதிகள் அமைந்துள்ளன.

இதையும் படியுங்கள்:
நமது உடலில் கெரட்டின் அளவு அதிகமானால் என்னவாகும் தெரியுமா?
இறையார்வளையம்மை சமேத வாலீஸ்வரர் உத்ஸவர்

திருக்கார்த்திகையில் லட்ச தீபம், மாதப் பிரதோஷம், மகாசிவராத்திரி மற்றும் அன்னாபிஷேகம் முதலான விழாக்கள் இத்தலத்தில் நடைபெறுகின்றன. இலந்தை இத்தலத்தின் தல விருட்சமாகும். காக்கைமடு இத்தலத்தின் தீர்த்தமாகும்.

காலை ஏழு முதல் பத்து மணி வரையிலும், மாலை ஐந்து முதல் இரவு ஏழு மணி வரையிலும் இத்தலம் பக்தர்களின் வழிபாட்டிற்காகத் திறந்திருக்கும். காஞ்சிபுரம் செய்யாறு சாலையில் காஞ்சிபுரத்திலிருந்து தெற்கு திசையில் சுமார் பத்து கிலோ மீட்டர் தொலைவில் குரங்கணில்முட்டம் அமைந்தள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com