காஞ்சி திவ்ய தேசங்களின் தனிச்சிறப்புகளை அறிந்து கொள்ளுவோமா?

Kanchipuram Ulagalantha perumal Temple
Kanchipuram Ulagalantha perumal Templehttps://www.youtube.com

யிரம் கோயில் நகரமான காஞ்சி மாநகரில் பதினான்கு திவ்ய தேசங்கள் அமைந்துள்ளன. ஒரே நகரத்தில் பதினான்கு திவ்ய தேசங்கள் அமைந்துள்ளது காஞ்சி மாநகரத்தில் மட்டுமே. இதில் பல திவ்ய தேசக் கோயில்கள் தனிச்சிறப்புகளைப் பெற்றுள்ளன. இந்தப் பதிவில் அவற்றைப் பற்றி அறிந்து கொள்ளுவோம்.

ஒரே தலத்தில் நான்கு திவ்ய தேசங்கள் அமைந்த பெருமை வாய்ந்த திருத்தலம் காஞ்சி உலகளந்த பெருமாள் கோயிலாகும். திருஊரகம், திருநீரகம், திருக்காரகம், திருக்கார்வானம் என நான்கு திவ்ய தேசங்கள் ஸ்ரீ உலகளந்த பெருமாள் கோயிலுக்குள் தனித்தனி சன்னிதிகளில் அமைந்துள்ளது தனிப்பெரும் சிறப்பு. இவ்வாறு நான்கு திவ்ய தேசங்கள் அமையப்பெற்ற ஒரே தலமாகத் திகழ்கிறது.

நூற்றி எட்டு திவ்யதேசங்களில் மிகச்சிறிய வடிவிலான மூலவராக மகாவிஷ்ணு காஞ்சி காமாட்சி அம்மன் திருக்கோயிலுக்குள் திருக்கள்வப் பெருமாள் என்ற திருநாமம் கொண்டு எழுந்தருளியுள்ளார். இந்த திவ்யதேசத்தின் மூலவர் கள்வப்பெருமாள் காமாட்சியம்மன் கருவறைக்கு பின்புறத்தில் காயத்ரி மண்டபத்தின் வலது புறத்தில் தென்கிழக்கு திசைநோக்கி அமைந்து காட்சி தருகிறார். மேலும், இந்த திவ்யதேசம் சைவத் திருத்தலத்தில் அமைந்துள்ள அபூர்வமான வைணவ திவ்யதேசமாகும்.

காஞ்சியில் சைவத் திருத்தலத்தில் மற்றொரு திவ்யதேசமும் அமைந்துள்ளது. காஞ்சி ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலுக்குள் வடகிழக்குப் பகுதியில் ஒரு தனிச் சன்னிதியில் புருஷ சூக்த விமானத்தின் கீழ் நிலாத்திங்கள் துண்டப் பெருமாள் என்ற திருநாமத்தோடு மேற்கு திசை நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறார். இத்தலம் 49வது திவ்ய தேசமாகும். சைவத் திருத்தலத்தினுள் அமைந்த மற்றொரு வைணவத் திருத்தலம் திருநிலாத்திங்கள் துண்டம்.

நூற்றியெட்டு திவ்யதேசங்களில் 55வது திவ்ய தேசம் காஞ்சி பவளவண்ணர் திருக்கோயில். பெருமாளின் நிறத்தைக் கொண்டு மங்களாசாசனம் செய்யப்பட்ட ஒரே தலம் காஞ்சி பவளவண்ணர் திருத்தலமாகும்.

காஞ்சிபுரத்தில் திருப்பாடகம் என்ற இடத்தில் அமைந்த ஸ்ரீ பாண்டவதூதப் பெருமாள் திருக்கோயில் 48வது திவ்ய தேசமாகும். இத்திருக்கோயிலில் மூலவர் பாண்டவதூதப் பெருமாள் என்ற திருநாமம் தாங்கி கிழக்கு திசை நோக்கி வீற்றிருந்த கோலத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஸ்ரீ கிருஷ்ணர் இத்தலத்தில் கருவறையில் இருபத்தி ஐந்து அடி உயரத்தில் அமர்ந்திருப்பது வேறு எங்கும் காணக்கிடைக்காத அரிய காட்சியாகும். கண்ணப்பெருமாள் பாண்டவர்களுக்காக தூது சென்ற காரணத்தினால் பாண்டவ தூதப் பெருமாள் என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இதையும் படியுங்கள்:
உடற்பயிற்சிக்குப் பின் உட்கொள்ள வேண்டிய உணவுகள் என்னென்ன தெரியுமா?
Kanchipuram Ulagalantha perumal Temple

பொதுவாக, பெருமாளுக்கு வலப்பக்கத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீதேவி காஞ்சிக்கு அருகில் அமைந்துள்ள திருப்புட்குழி தலத்தில் இடப்பக்கத்தில் எழுந்தருளியுள்ளார்.

பன்னிரு ஆழ்வார்களில் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகியோர் முதலாழ்வார்கள் என அழைக்கப்படுகிறார்கள். ஆழ்வார்களில் காஞ்சிபுரத்தில் அமைந்த திருவெஃகாவில் அவதரித்தவர் பொய்கையாழ்வார்.

நூற்றி எட்டு திவ்ய தேசங்களில் மகாவிஷ்ணு காஞ்சி மாநகரில் அமைந்துள்ள அட்டபுயக்கரத் தலத்தில் மட்டுமே எட்டு திருக்கரங்களுடன் அஷ்டபுஜப் பெருமாள் என்ற திருநாமம் தாங்கி சேவை சாதிக்கிறார். கருவறையில் நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கும் அஷ்டபுஜப் பெருமாள் தனது வலது திருக்கரங்களில் சக்கரம், கத்தி, புஷ்பம், அம்பு போன்றவையும் இடது திருக்கரங்களில் சங்கு, வில், கேடயம், கதை போன்றவையும் தாங்கி அருள்பாலிக்கிறார்.

காஞ்சிக்குச் செல்லும்போது அங்கு அமைந்துள்ள பதினான்கு திவ்ய தேசங்களையும் தரிசித்து எம்பெருமானின் அருளைப் பெற்று வாழ்வாங்கு வாழ்வீர்களாக.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com