வாழ்க்கை வாழ்வதற்கே... என்பதை உணர்த்த நமக்கு நிறைய கதைகள் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதுபோல் மரணத்தைப் பற்றியும் நிறைய கதைகள் உள்ளன. பிறப்பு, இறப்பு இரண்டையும் வள்ளுவர் மிக எளிதாக கூறியிருப்பார்.
தூங்குவது போல் தான் மரணம். பின்பு காலை எழுவது போல் தான் ஜனனம். ஆனால் அனைவர்க்கும் மரணம் என்பது புரியாத புதிர். அதைப் பற்றிய பயம் அதிகம்.
பாரதியிடம் ஒருவன், மரணத்தை எப்படி வெல்லவேண்டும் எனக் கேட்டான். அதற்கு பாரதி, 'அச்சத்தையும், வேட்கையையும் விட்டுவிடு; மரணம் மறைந்து விடும்' என்றாராம். ஏனெனில் பயம், ஆசை இது இரண்டும் நம்மை விட்டு போகாத ஒன்று. மரணம் என்பது ஒருநாள் வந்தே தீரும். அதன் ரகசியத்தை யாராலும் அறியமுடியாது. ஆனால் வாழ்க்கையை நாம் வாழலாம் அல்லவா? அதுவும் நமக்குப் பிடித்த மாதிரி யாருக்கும் தீங்கு விளைவிக்காமல், சந்தோஷமாக!
இதை சங்க இலக்கியத்தில் ஒரு பாடல் மூலம் உணர்த்தியிருப்பார்கள். ஒரு அரசன் போர்க்களத்தில் இறந்துவிடுகிறான். உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் அவ்விடத்தில் கூடி, அரசனை புதைப்பதா? எரிப்பதா? என வாதம் செய்கின்றனர். இரண்டு குழுவாக பிரிந்து சண்டையிடுகின்றனர். அப்போது அரசனுக்கு மிகவும் நெருக்கமான நண்பனான புலவர் அங்கு வருகிறார். அவரிடம் இரண்டு குழுவினரும், "புலவரே, நீங்கள் அரசனுக்கு மிகவும் நெருக்கமானவர். அவர் என்றைக்காவது, தன் இறப்பின் பின் தன்னை எரிக்கவேண்டுமா? இல்லை புதைக்கவேண்டுமா? என ஏதாவது சொல்லியிருக்கிறாரா?" எனக் கேட்டனர்.
அதற்கு அந்தப் புலவர், "இந்த அரசன்... தான் விரும்பிய பெண்ணை மணந்தான். நன்றாக ராஜவாழ்க்கை வாழ்ந்தான். தன்னை விட பலம் மிகுந்தவர்கள் கூறியதை வழிமொழியமாட்டான். அதே சமயம் தன்னை விட பலவீனமார்கள் சொல்லை அலட்சியபடுத்தமாட்டான். ஆக அவன் உயிரோடு இருந்த நாட்களில் நல்வாழ்வு வாழ்ந்து விட்டான். இனி மேல் அவனை புதைத்தால் என்ன? எரித்தால் என்ன? ஏதாவது செய்து கொள்ளுங்கள்" என்று கூறி அவ்விடத்தை விட்டு புறப்பட்டு விட்டார்.
இந்த சங்கப் பாடல் நமக்கு மீண்டும் மீண்டும் அறிவுறுத்துவது வாழ்க்கையை அனுபவித்து வாழவேண்டும். மரணத்தைப் பற்றிய சிந்தனைகள் தேவையில்லை.
வாழுங்கள், அச்சத்தை விட்டு ஆசைஆசையாக.