Lord Murugan
Lord Murugan

தென் மாவட்டங்களில் புகழ்பெற்ற இந்த முருகனின் பிரசாதம் பற்றித் தெரியுமா?

Published on

முருகன் குறிஞ்சிநிலக் கடவுள். முருகன் என்றால் அழகு என்று பொருள். மயில், சேவற்கொடி, பாம்பு இவற்றோடு காட்சி தருபவர் முருகப்பெருமான். முருகனை வழிபடும் சமயமானது “கௌமாரம்” என்று அழைக்கப்படுகிறது. ‘யாமிருக்க பயமேன்’ என்றுரைத்து பக்தர்களின் மனதில் நம்பிக்கையை விதைப்பவன் அழகன் முருகன்.

முருகப்பெருமானுக்கு தேனும் தினைமாவும், பஞ்சாமிர்தமும், புட்டமுதும், திருப்பாகமும் நைவேத்யங்களாக படைக்கப்பட்டு வழிபடுவது மரபு. இதைத் தவிர முருகப்பெருமானுக்கு உகந்த ஒரு பிரசாதம் “கந்தரப்பம்”. முருகனின் மற்றொரு பெயர் கந்தன். அவருடைய பெயராலேயே இந்த அப்பமானது “கந்தரப்பம்” என அழைக்கப்படுகிறது. தென் மாவட்டங்களில் கந்தரப்பம் படைத்து முருகப்பெருமானை வழிபடுவது மரபாக உள்ளது.

கந்தரப்பத்தை முருகப்பெருமானுக்கு தைப்பூசத் திருநாளன்றும், வைகாசி விசாகத்தன்றும், ஆடி மாதத்தில் வரும் ஆடிக்கிருத்திகை அன்றும், கந்தசஷ்டி விழாவின் போதும் நைவேத்தியம் செய்து வழிபட்டால் நமது மனோ விருப்பங்களை முருகன் நிறைவேற்றுவார் என்பது ஐதீகம்.

முருகப்பெருமான் வழிபாட்டில் கந்த சஷ்டி விரதம் மிக முக்கியமான ஒரு விரதமாகும். திருச்செந்தூரில் ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டி திதியில் சூரனை அழித்து தன் அவதார காரணத்தை முருகப்பெருமான் முற்றுப்பெற செய்தார். இதுவே கந்த சஷ்டி விழாவாகக் கொண்டாடப்படுகிறது. கந்த சஷ்டியின் போது முருகப்பெருமானுக்கு மிகவும் பிடித்தமான கந்தரப்பத்தை நைவேத்யம் செய்து வழிபடுவது சிறப்பானதாகக் கருதப்படுகிறது.

இனி கந்தரப்பத்தை எவ்வாறு செய்வது என்பதைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.

கந்தரப்பம்
கந்தரப்பம்

கந்தரப்பம் செய்யத் தேவையானப் பொருட்கள்:

பச்சரிசி – ஒரு கப்

உளுத்தம் பருப்பு – கால் கப்

கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன்

தேங்காய் துருவல் – கால் கப்

ஏலக்காய் – 3

வெல்லம் – ஒரு கப்

எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:

பச்சரிசி, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு மூன்றையும் நன்கு கழுவி ஒன்றாகச் சேர்த்து சுமார் இரண்டு மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும்.

அனைத்தையும் மிக்சியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் நன்றாக அரைத்துக் கொள்ளவும். மாவை அரைக்கும்போது இடையில் தேங்காய்த் துருவலையும் பொடித்த ஏலக்காயையும் சேர்த்துக் கொள்ளவும்.

பாதி அரைந்ததும் வெல்லத்தை நன்றாகத்துருவி மாவில் சேர்த்து அரைக்கவும். அரைத்த மாவானது கெட்டியாக இருக்கக்கூடாது. தளர்வாகவும் இருக்கக்கூடாது. மிகவும் கெட்டியாக இருப்பது போலத் தோன்றினால் மிகவும் கொஞ்சமாக தண்ணீரைச் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும்.

அரைத்த கந்தரப்ப மாவை சிறிது நேரம் வைக்கவும். பின்னர் கடாயில் எண்ணெயை ஊற்றி எண்ணெய் நன்கு காய்ந்ததும் ஒரு குழி கரண்டியில் மாவை எடுத்து காய்ந்த எண்ணெயில் ஊற்றவேண்டும். சிறிது நேரத்தில் அப்பம் உப்பும். பின்னர் திருப்பிப் போட்டு இருபுறமும் நன்கு சிவந்ததும் கந்தரப்பத்தை கடாயில் இருந்து எடுத்து ஒரு தட்டில் வைத்துக்கொள்ளவும்.

இதையும் படியுங்கள்:
மகா சிவராத்திரி: சிவனின் அருள் கிடைக்க இப்படி விரதம் இருங்க..!
Lord Murugan

கந்தபெருமானுக்கு உகந்த கந்தரப்பம் தயாராகிவிட்டது. இதை முருகனுக்கு நைவேத்யம் செய்து உங்கள் மனதில் உள்ள விருப்பங்களை அவரிடம் பிரார்த்தித்துக் கொள்ளுங்கள். வெகுவிரையில் உங்கள் மனவிருப்பங்கள் அனைத்தையும் முருகப்பெருமான் நிறைவேற்றி வைப்பார்.

logo
Kalki Online
kalkionline.com