முருகா: மும்மூர்த்திகளும் முப்பெரும் தேவியரும் இணைந்த மகா மந்திரம்!

Lord Murugan
Lord Murugan
Published on

முருகா என்ற நாமத்தில் மும்மூர்த்திகளும், முப்பெரும் தேவியர்களும் உடன் அமர்ந்து அருள்கிறார்கள். எனவே முருகனை வணங்கினால் முப்பத்து முக்கோடி தேவர்களையும் வணங்கியதற்கு சமம் என்று கூறுகிறார் அருணகிரிநாத சுவாமிகள். மு என்றால் முகுந்தன் (விஷ்ணு), ரு என்றால் ருத்ரன் (சிவன்), க என்றால் கமலன் (பிரம்மா) என மூவரது பெயரும் இதில் அடங்கியுள்ளது.

முருகா என்ற பெயருக்கு அழகு, இளமை, மகிழ்ச்சி, தெய்வத்தன்மை என பொருள் உண்டு. முருகன், குமரன், குகன் ஆகிய மூன்று பெயர்களுமே சிறப்பானவை. இதை அருணகிரிநாதர், "முருகன், குமரன், குகன் என்று மொழிந்து உருகும் செயல் தந்து உணர்வென்று  அருள்வாய்" என்று கந்தரனுபூதி பாடலில் குறிப்பிட்டுள்ளார்.

முருகப்பெருமானுடைய பிறப்பிற்கு சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றிய தீப்பொறிகள் கருவாக அமைந்தது. அதனால் இவர் 'அக்னி கர்ப்பன்' எனப்படுகிறார். அப்பொறிகள் கங்கையில் தவழ்ந்ததால் 'காங்கேயன்' என்றும், சரவணப் பொய்கையில் வளர்ந்ததால் 'சரவணபவன்' என்றும் அழைக்கப்படுகிறார்.

கார்த்திகைப் பெண்கள் இவரை வளர்த்ததால் 'கார்த்திகேயன்' என்று பெயர் பெற்றார். பார்வதிதேவி அன்புடன் ஆறு குழந்தைகளையும் ஒன்று சேர்த்து அணைக்க 'ஆறுமுகன்' என்றும், கந்தன் என்றும் அழைக்க பெற்றார். கந்தன் என்றால் ஒன்று சேர்ந்தவர் என்று பொருள். 

இதையும் படியுங்கள்:
மிஸ் பண்ணிடாதீங்க! வருஷத்துல ஒரு நாள் மட்டும் திறக்கப்படும் அபூர்வக் கோயில்!
Lord Murugan

தை மாதத்தில் வரும் பௌர்ணமியும், பூச நட்சத்திரமும் ஒன்று சேரும் நன்னாளில் தைப்பூச தினமாக முருகனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. தைப்பூசத்தன்று முருகன் தாருகாசுரனை வதம் செய்த நிகழ்வு ஒரு விழாவாக பழனியில் அனுஷ்டிக்கப்படுகிறது. ஆண்டி கோலத்தில் பழனி மலை மீது வீற்றிருக்கும் முருகனுக்கு, அன்னை பராசக்தி தன் சக்தி முழுவதையும் திரட்டி ஞானவேல் வழங்கியது இந்த தைப்பூச நன்னாளில்தான் என்று புராணங்கள் கூறுகின்றன.

திருவையாறில் உள்ள முருகப்பெருமான் தனுசு சுப்பிரமணியம், வில்வேள் நாயனார் என்னும் பெயருக்கு ஏற்றார் போல வில் மற்றும் படைக்கலங்கள் அனைத்தையும் ஏந்தியவராக காட்சி தருகிறார். இந்தியாவில் மட்டுமின்றி இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரீசியஸ் நாடுகளிலும் தைப்பூச திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூருக்கு அருகில் இருக்கும் பத்து மலை எனும் பட்டு குகைகளில் தைப்பூச விழா மிகச்சிறப்பாக நடைபெறும். லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் இந்த விழாவை காண்பதற்காக பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
"ஹே! பாபா! உங்களுக்கு உண்மையிலேயே சக்தி இருந்தால்..." அம்மாவின் வேண்டுகோள்!
Lord Murugan

பக்தர்கள் பலவகையான காவடிகளை ஏந்தி  கோலாலம்பூரில் இருக்கும் மகா மாரியம்மன் கோவிலில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு 15 கிலோமீட்டர் நடந்து பட்டு குகையை அடைகிறார்கள். அங்கு நடப்பட்டிருக்கும் வேல்தான் முக்கியமான வழிபாட்டுச் சின்னம். பக்தர்கள் 272 படிகள் ஏறி வந்து கந்தனை தரிசித்து அருள் பெற்று செல்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com