அனுமனாக அவதரித்த சிவபெருமான்!

ஸ்ரீ அனுமன்
ஸ்ரீ அனுமன்
Published on

ஸ்ரீ ராமபிரானுக்கு சேவை செய்வதற்காக அவதரித்தவர் ஸ்ரீ ஆஞ்சனேயர். அந்த ஆஞ்சனேயர் சாட்சாத் பரமேஸ்வரரின் சொரூபம் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதுதானே! ஒருநாள் கயிலாயத்தில் சிவபெருமான் இந்த ரகசியத்தை தெரிவித்தார். “இன்னும் சிறிது காலத்தில் ஸ்ரீ மகாவிஷ்ணு பூலோகத்தில் ராமனாக அவதாரம் செய்யவிருக்கிறார். அப்போது தேவர்களும் அவருடன் அவதரித்து சேவை செய்யப் போகிறார்கள். இந்த சந்தர்ப்பத்தை நானும் நழுவ விட விரும்பவில்லை. ராவணனை சம்ஹாரம் செய்வதற்காக அவதரிக்கப் போகிறேன்” என்று பார்வதி தேவியிடம் கூறினார் சிவபெருமான்.

“உங்களுடைய பரம பக்தனின் தலையை வெட்டுவது தர்மமா?” எனக் கேட்டார் பார்வதி. “மகாவிஷ்ணுவும் நானும் வேறல்ல. அவரது அம்சமே நான். ராவணன் என்னை ஆராதனை செய்தான். அதே நேரத்தில் என்னுடைய ஒரு அம்சத்தை அவமதித்து இருக்கிறான். நான் 11 ருத்திரர்களாக இருப்பதை நீ அறிவாய் . ராவணன் 10 தலைகளை அரிந்து பத்து ருத்ர மூர்த்திகளுக்கு காணிக்கையாக்கினான். பதினோராவது அம்சத்தை அலட்சியப்படுத்தி இருக்கிறான். இப்போது நான் அதே அம்ச உருவத்தில் அவனை எதிர்த்துப் போர் புரிவேன். எனது தெய்வமான மகாவிஷ்ணுவுக்கும் சேவை செய்யும் பாக்கியம் பெறுவேன். அவர் விருப்பப்படியே எல்லாம் நடக்கிறது. நான் வாயு தேவன் மூலமாக அஞ்சனையின் வயிற்றில் பிறப்பதாக தீர்மானித்திருக்கிறேன்” என்றார் சிவபெருமான்.

இந்திரனின் தலைநகரான அமராவதியில் புஞ்சி கஸ்தலா என்ற அழகான பெண் ஒருத்தி இருந்தாள். அந்த அப்சரஸ் ஒரு தவ முனிவரை கேலி செய்ததால் பூலோகத்தில் குரங்காகப் பிறக்கும் சாபத்தை பெற்றாள். சாப விமோசனம் வேண்டவே, நீ எல்லா நேரமும் குரங்காக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. விரும்பும் போது மானுடப் பெண்ணாக வடிவம் எடுத்துக் கொள்ளலாம் என்று சாபத்தை முனிவர் கொஞ்சம் தளர்த்தினார்.

அவளது அழகில் மயங்கிய கேசரீ என்ற மன்னன் அவளை தனது மனைவியாக்கி மணந்து கொண்டார். ஒரு நாள் காற்று தென்றலாக வீசியது. திடீரென்று அவளது மேலாடையை யாரோ இழுப்பதைப் போல தோன்றியது. தனது கணவன்தான் என பார்த்த அஞ்சனைக்கு ஆச்சரியம் காத்திருந்தது. கேசரீ சற்று தொலைவில் மரத்தடியில் நின்றிருந்தார். அஞ்சனைக்கு சந்தேகம் வந்துவிட்டது. யாரோ தன்னை உருவமில்லாமல் வந்து தீண்டுகிறார்கள் என்பதை அறிந்து கொண்டாள். “எனது கற்பின் கனலால் உனக்கு சாபம் கொடுக்கிறேன்” என்று அஞ்சனை கோபத்தோடு பேச ஆரம்பித்தபோது ஒரு குரல், “கொஞ்சம் பொறு. தவறு நடக்கவில்லை” என்றது.

இதையும் படியுங்கள்:
வறட்சியான கண்களுக்கு வரப்பிரசாதமாகும் வீட்டு வைத்தியக் குறிப்புகள்!
ஸ்ரீ அனுமன்

“நான் வாயு தேவன். நான் உன்னுடைய கற்பை மாசு படுத்தவில்லை. எனக்கு நிகரான வலிமை உடைய அதி பலசாலியான புத்திரன் உனக்கு பிறப்பான். அவன் ஸ்ரீராமபிரானுக்கு சேவை செய்வான்” எனக் கூறியதும் அஞ்சனை சம்மதம் தெரிவிக்க சிவபெருமான் வாயுவின் மூலமாக தனது அம்சமாய் அஞ்சனையின் காது வழியாக அவளது கருவுக்குள் புகுந்தார்.

எந்த சரீரத்திற்கு பகவான் ஸ்ரீ ராமபிரானின், அன்பும் சேவையும் கிடைக்கிறதோ, அதையே சான்றோர்கள் மதிக்கிறார்கள். இதனை ஆலோசித்து சிவபெருமான் தனது ருத்ர ரூபத்தை மறைத்துக் கொண்டு வானர ரூபம் தாங்கி அஞ்சனையின் வயிற்றில் பிரவேசித்தார் என்று இந்த நிகழ்ச்சியை, ‘அனுமன் சாலீசா’ வருணிக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com