

நெல்லை மாவட்டத்தில் களக்காடு என்ற ஊர் இருக்கிறது. அங்கே தான் 12 ஆம் நூற்றாண்டில் வீர மார்த்தாண்ட மன்னன் கட்டிய பிரம்மாண்டமான சிவன் கோவிலான சத்தியவாதீஸ்வரர் கோவில் இருக்கிறது. இப்பகுதியில் உள்ள மக்கள் இக்கோவிலை பெரிய கோவில் என்று அழைக்கிறார்கள். இந்த கோவிலில் உள்ள 156 அடி உயரமான ராஜ கோபுரம் ஒன்பது நிலைகளுடன் காட்சியளிக்கிறது. ராமாயணம், மகாபாரதம், சிவபுராணம், அந்த நிலைகளில் உயிரோடு நிற்கின்றன. இந்த கோபுரத்திற்கு ஒரு மர்மம் உண்டு. இதன் நிழல் தரையில் விழாது.
கோவிலுக்குள் சென்றால் மூன்று பிரகாரங்கள், அழகிய மணிமண்டபம் இருக்கிறது. மேலும் அங்கே 21 இசைத்தூண்கள் இருக்கின்றன. இவற்றை ஒவ்வொன்றை தொட்டாலும் ஒவ்வொரு இசை அதிலிருந்து ஒலிக்கிறது.
வருடத்தில் மார்ச் மாதம் 20 முதல் 22 வரைக்கும் மற்றும் செப்டம்பர் மாதம் 20 முதல் 22 வரைக்கும் சூரிய கதிர்கள் நேராக சிவனின் மீது படும் அதிசயமும் இங்கு நிகழ்கிறது. இத்திருக்கோவில் அப்பர் வாக்கினால் பாடப்பட்ட தேவார வைப்புத் தலமாக திகழ்கின்றது.
அசுரர்களால் துன்புறுத்தபட்ட தேவர்கள் இங்கே சிவனை வணங்கினர். அவர் சத்திய வாக்கு கொடுத்து அசுரர்களை அழித்தார். அதனால் இங்குள்ள சிவன் சத்தியவாகீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். அதுமட்டுமில்லாமல் ராமாயணத்தில் ராவணன் சீதையை இங்கிருந்து கடத்தியாக கூறப்படுகிறது.
அப்போது ராமர், லக்ஷ்மணன் மனம் உருகி இங்கிருந்த சிவனை வேண்டினர். சிவபெருமான் உதவுவேன் என்று சத்தியம் செய்து ராமருக்கு துணையாக நின்றார். பின்னர் தீக்குளித்த சீதா இங்கிருக்கும் குளத்தில் நீராடி சிவனை வழிப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதனால் அக்குளம் சீதா குளம் அல்லது சத்திய தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.
இக்கோவிலின் வெளிப்பிரஹாரத்தில் 27 நட்சத்திரங்களுக்கு ஏற்ற 27 மரங்களும், கோமதி அம்மாளுக்கும், முருகனுக்கும் தனிதனி சன்னதிகள் உள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் வைகாசி தேரோட்டம், ஐப்பசி கந்தசஷ்டி, திருகல்யாணம், திருகார்த்திகை போன்ற பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலுக்கு நீங்களும் ஒருமுறை சென்று தரிசித்து சிவப்பெருமானின் அருளைப் பெற்று வாருங்கள்.
