இறைவன் தங்கும் இடம்!

இறைவன் தங்கும் இடம்!
Published on

கவான் ஸ்ரீ கிருஷ்ணன் அஸ்தினாபுரிக்கு வருகை தருகிறான். வீதியெங்கும் அலங்கார வளைவுகள், பூரண கும்ப வரவேற்பு. பீஷ்மர், துரோணர் என பலரும் ஸ்ரீ கிருஷ்ணனை வரவேற்க, கண்ண பரமாத்மா தேரை விட்டு இறங்குகிறான். கண்ணுக்கு எட்டிய தொலைவு வரையில் பெரிய பெரிய மாட மாளிகைகள்! பீஷ்மர், துரோணர், கிருபர், விதுரர் என பலரும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை தங்கள் இல்லத்தில் தங்கும்படி அழைக்கின்றனர்.

அப்போது கண்ணன், "அதோ பச்சை வர்ணம் பூசப்பட்டு பிரளய காலத்தில் ஆலிலை மிதந்தது போல நிற்கிறதே, அது யாருடைய வீடு?” எனக் கேட்கிறான்.

உடனே, "அச்சுதா… அது என்னுடைய வீடு" என்கிறார் துரோணர்.

“சரி, அதோ சிவப்பு காவி நிறம் பூசப்பட்டு செம்மாந்த கோலத்தோடு கம்பீரமாய் நிற்கிறதே, அது யாருடைய வீடு?" எனக் கேட்கிறார்.

அதைக்கேட்டு கிருபர், ''மாதவா, அது என்னுடைய வீடுதான்'' என்கிறார்.

அதைத் தொடர்ந்து கண்ணன், "அதோ மஞ்சள் வர்ணம் பூசப்பட்டு மாமேரு குன்று போல் நிற்பது யாருடைய வீடு?" என்று கேட்கிறார்.

உடனே பீஷ்மர், "வாசுதேவா, அது என்னுடைய வீடு" என்று கூறுகிறார்.

அதையடுத்து, "அடடா… நீல வர்ணம் பூசப்பட்டு தன்னேரில்லாக் கருங்கடல் போல பரிமளிக்கும் அந்த வீடு யாருடையது?" எனக் கேட்கிறார்.

சற்றும் தாமதிக்காமல் அஸ்வத்தாமன்,  "ரிஷிகேசா, அது என்னுடைய வீடுதான்'' என்கிறான்.

இறுதியாக கண்ணன், "சிறிதாக வெள்ளை நிறத்தோடு சத்வ குணமாகப் பாற்கடலைப் போலவும், கயிலையைப் போலவும் பரம சாத்வீகம் பொருந்தி நிற்கிறதே, அது யாருடைய வீடு?" என்று கேட்கிறார்.

அதைக்கேட்டு மிகவும் பணிவாக, "கண்ணா, அது உன்னுடைய வீடு!" என்கிறார் விதுரர்.

"என்னுடைய வீடா? இந்த அஸ்தினாபுரத்தில் எனக்கென்று அரையடி மண்கூட இல்லை என்று எண்ணியிருந்தேன். இத்தனை பெரிய வீடு எனக்கு இருக்கிறபோது நான் பிறர் வீட்டில் தங்குவதா? நான் என் வீட்டுக்குப் போகிறேன்'' என்று சொல்லிவிட்டு, விதுரர் வீட்டுக்குள் நுழைந்தான் அந்த மாயக்கண்ணன்.

‘எதுவும் தமக்கு சொந்தமில்லை, எல்லாமே இறைவனுடையது’ என்கிற அர்ப்பண உணர்வுடையவர்களையே கடவுள் விரும்புகிறார். ‘நான்… எனது’ எனும் செருக்கை அறுப்பவனின் உள்ளத்தில்தான் ஆண்டவன் நிறைந்திருப்பான்!"

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com