தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு தனிச் சிறப்பு இருப்பது போல, மாசி மாதத்திற்கும் இருக்கிறது. மாசி மாதத்தை கடலாடும் மாதம் என்றும் தீர்த்தமாடும் மாதம் என்றும் சொல்வதுண்டு. மாசி மாதம் இறை வழிபாட்டிற்கும், தான தர்மங்கள் செய்வதற்கும் ஏற்ற மாதமாகச் சொல்லப்படுகிறது. மகத்துவம் வாய்ந்த மாசி மாதத்தில்தான் சிவராத்திரி, மாசி மகம் போன்ற சிறப்பான விசேஷங்கள் வருகின்றன.
பௌர்ணமியும் மகம் நட்சத்திரமும் இணைந்து வரும் நாளை மாசி மகம் என்று போற்றிக் கொண்டாடுகிறோம். இது மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாகக் கருதப்படுகிறது. இந்த மாசி மகம் 12 ஆண்டுகளுக்கொரு முறை கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இதைப் பேச்சு வழக்கில் மாமாங்கம் என்று கூறுவார்கள். கடந்த 2016 அன்று மாசி மகத்தன்று இந்த மாமாங்கம் திருவிழா கொண்டாடப்பட்டது. இத்தினத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, நர்மதா, சிந்து, காவேரி, பிரம்மபுத்ரா போன்ற 12 புனித நதிகள் தங்கள் பாவங்களைத் தீர்த்துக்கொள்ள பிரம்மதேவர் அறிவுரைப்படி கும்பேஸ்வரர் கோயில் மகாமகக் குளத்திற்கு வருவதாகச் சொல்லப்படுகிறது. அதனால் இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் இப்புனிதக் குளத்தில் நீராடுவதற்கென்றே கும்பகோணம் வருகிறார்கள். அன்று இந்தக் குளத்தில் நீராடுபவர்களின் பாவங்கள் ஒழிந்து விடும் என்று சொல்லப்படுகிறது.
இதை சேக்கிழார் பெருமான் தனது பெரிய புராணத்தில்,
‘பூமருவும் கங்கை முதல் புனிதமாம் பெருந்தீர்த்தம்
மாமகந்தான் ஆடுவதற்கு வந்து வழிபடுங்கோவில்’
என்று பாடியிருக்கிறார்.
அப்பர் பெருமான் தனது திருத்தாண்டகத்தில்,
‘தாவி முதற் காவிரிநல் யமுனை கங்கை
சரஸ்வதி பொற்றாமரை புட்கரணி தெண்ணீர்க்
கோவியோடு குமரிவரு தீர்த்தஞ் சூழ்ந்த
குடந்தைக் கீழ் கோட்டத்தெங்கூத்தனாரே’
என்று இந்தப் புனித நதிகளின் மகாமக குள வருகையைப் பற்றிப் பாடியுள்ளார்.
இந்நாளில் சிவபெருமான், பார்வதி தேவியை மட்டுமின்றி, முருகப்பெருமானையும் வழிபடுவது சிறப்பு வாய்ந்தது. ஆண் குழந்தை வேண்டும் என்று நினைப்பவர்கள் மாசி மக நாளில் முருகப்பெருமானை வேண்டி விரதம் இருப்பார்கள்.
அதேபோல மக நட்சத்திரத்தை, 'பித்ருதேவ நட்சத்திரம்' என்றும் அழைப்பார்கள். எந்த நல்ல காரியம் நடந்தாலும் பித்ருக்களை வணங்கி விட்டு தொடங்கினால் அந்த காரியம் தங்கு தடையில்லாமல் நடக்கும். முன்னோர்களுக்கு மாசி மகத்தன்று நீர் நிலைகளுக்கருகில் வைத்து தர்ப்பணம் கொடுப்பதால் ஏழு தலைமுறையில் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி, நம்முடைய முன்னோர்களுக்கு நற்கதி கிடைப்பதுடன், நமக்கும் நன்மைகளும் ஆரோக்கியமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
மாசி மக தினத்தன்று புனித நதிகளில் நீராடுவதை, 'பிதுர் மகா ஸ்நானம்' என்கிறது சாஸ்திரம். இந்த மாசி மகம் நாளன்று அனைத்து நீர்நிலைகளிலும் அமிர்தம் கலந்திருப்பதாக ஐதீகம். அதனால் குளம், ஆறு, கடல் போன்ற நீர்நிலைகளில் நீராடுவது அனைத்து பாவங்களையும், தோஷங்களையும் நீக்கி விடும் என்று கருதப்படுகிறது.
மாசி மகம் என்பது தீர்த்த நீராடலுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. ஆகவே, நாம் அனைவருமே இந்தப் புனித தினத்தில் அருகிலுள்ள ஏதாவது தீர்த்தத்தில் நீராடி நமது பாவங்களைப் போக்கி தெய்வத்தின் அருளைப் பெறுவோம்.