மாவிளக்கு ஏற்றி மனதார வேண்டினால் மகிமைகள் புரியும் மாகாளி!

மாவிளக்கு ஏற்றி மனதார வேண்டினால் மகிமைகள் புரியும் மாகாளி!
Published on

பெரம்பலூர் மாவட்டம், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூருக்கு 8 கி.மீ. முன்னதாகவே உள்ளது சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் திருக்கோயில். வடக்கு நோக்கி அருள்பாலிக்கும் இந்த அம்பிகையின் கோயிலில் விநாயகரைத் தவிர வேறு தெய்வங்கள் இல்லை. இந்தக் கோயிலில் மாவிளக்கு ஏற்றி வழிபட, வேண்டிய வேண்டுதல்கள் எல்லாம் ஈடேறும் என்பது நம்பிக்கை. ஆனால், மற்ற ஆலயங்களைப் போல, வீட்டில் இருந்து மாவு கொண்டு சென்று இந்த அம்மனுக்கு மாவிளக்கு போட அனுமதியில்லை. மாறாக, அரிசியாகக் கொண்டு சென்று கோயிலில் இருக்கும் உரலில் இடித்து அங்கேயே மாவு தயார் செய்து மாவிளக்கிடவேண்டும். பூஜையின்போது நடைபெறும் முதல் தீபாராதனை, இக்கோயில் அருகில் மலை மீது உறைந்திருக்கும் செல்லியம்மனை நோக்கியே காட்டப்படும். பின்பே மதுரகாளியம்மனுக்குக் காட்டப்படும்.

அன்னை மதுரகாளி, இக்கோயிலில் நான்கு அடி உயரத்தில் வடக்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். உடுக்கை, பாசம், சூலம், அட்சய பாத்திரம் ஆகியவற்றை தனது திருக்கரங்களில் ஏந்தியிருக்கிறாள். இடது திருவடியை மடித்து அமர்ந்து வலது திருவடியை சிம்மத்தின் மீது ஊன்றியிருக்கிறாள். ஆதிசங்கரர் இப்பகுதி வழியாக வந்தபோது தாகம் ஏற்பட்டதாகவும் அப்போது மதுரகாளியம்மன் இந்தத் திருவடிவத்தோடு தோற்றமளித்து அங்கே ஒரு தீர்த்தத்தை ஏற்படுத்தியதாகவும் சொல்லப்படுகிறது. அந்த வடிவத்தோடே அன்னை சிலையானாள் என்றும் அந்தச் சிலையையே ஆதிசங்கரர் இங்குப் பிரதிஷ்டை செய்தார் என்றும் சொல்வதுண்டு. மேலும், சதாசிவ பிரம்மேந்திராள் ஶ்ரீசக்கரம் ஒன்றினை இந்தத் தலத்தில் பிரதிஷ்டை செய்ததாகவும் சொல்லப்படுகிறது.

மற்ற கோயில்களைப் போன்று அனைத்து நாட்களிலும் இந்த ஆலயம் திறந்திருக்காது. வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே இக்கோயில் திறக்கப்படும் அதேபோல், கோயிலில் உச்சிகால பூஜை மட்டுமே நடைபெறும். மதுரகாளியம்மன் கோயிலுக்கு நேர் வடக்காகச் சோலை முத்தையா ஆலயம் அமைந்துள்ளது. இவரே செல்லியம்மன் மற்றும் மதுரகாளியம்மனின் காவல் தெய்வமாக விளங்குபவர். இவர் அருகிலேயே அகோர வீரபத்திரர் நிற்கிறார். ஆண்டுதோறும் சித்திரை மாத அமாவாசையன்று மதுரகாளிக்குப் பூச்சொரிதல் விழாவும் பின்னர் அம்மனுக்குக் காப்புக் கட்டி திருவிழாவும் விசேஷமாக நடைபெறும்.

இக்கோயிலில் மாவிளக்கு ஏற்றி அம்மனை வேண்டிக்கொள்ள, தீராத நோய்கள் தீரும் என்கின்றனர் பக்தர்கள். மேலும், திருமணத் தடை, குழந்தையின்மை உள்ளவர்கள் அம்மனை தரிசித்து வழிபட, விரைவில் வேண்டுதல்கள் நிறைவேறும். இக்கோயிலில் அங்கப் பிரதட்சிணம் செய்து வேண்டிக்கொள்ள, காணாமல் போன பொருட்கள் திரும்பக் கிடைக்கும் என்றும், வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டங்கள் மாறி லாபம் ஏற்படும் என்றும் பக்தர்கள் நம்புகின்றனர்.

திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே திறக்கப்படும் இக்கோயில், காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். காலை 11 மணிக்கு அம்மனுக்கு தங்க ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com