
தமிழ் புத்தாண்டு பிறந்த நிலையில், மதுரை சித்திரை திருவிழா எப்போது தொடங்கும் என்று பார்க்கலாம் வாங்க..
சித்திரை மாதம் என்றாலே மதுரை திருவிழா தான். உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை பெருவிழா ஏப்ரல் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கோலாகலமாக நடைபெற உள்ளது.
மதுரை மாநகருக்கு கோவில் நகரம், தூங்கா நகரம், கூடல் நகரம் என பல்வேறு பாரம்பரிய பெயர்கள் உள்ளது. தென் மாவட்டங்களில் மிக முக்கியமான மாவட்டமான மதுரையின் மிகப்பெரிய அடையாளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலாகும். அதிலும் தென்மாவட்டங்களில் திருவிழா என்றாலே மதுரையில் நடைபெறும் சித்திரைத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்த நிகழ்வில் மதுரை மட்டுமல்லாது தென் மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் சித்திரை திருவிழாவில் பங்கேற்று சாமி தரிசனம் செய்வார்கள்.
தற்போது 2025ஆம் ஆண்டு சித்திரை மாதம் பிறந்த நிலையில், சித்திரைத் திருவிழா ஏப்ரல் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மே 17 ஆம் தேதி வரை கோலாகலமாக நடைபெற உள்ளது.
கொடியேற்ற நிகழ்வு சித்திரை மாதம் 16 -ஏப்ரல் 29 ஆம் தேதி செவ்வாய்கிழமை அன்று காலை 9:55 மணிக்கு மேல் 10.19 மணிக்குள் மீனாட்சி அம்மன் கோவில் தங்க கொடி மரத்தில் விமர்சையாக நடைபெற உள்ளது.
மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் சித்திரை 23ம் நாள்-மே 6 ம் தேதி செவ்வாய் கிழமை அன்று வெகு விமர்சையாக நடைபெறும்.
திக்கு விஜயம் சித்திரை மாதம் 24ம் நாள் மே 07 ஆம் தேதி புதன்கிழமை காலை 7:00 மணிக்கு நடைபெறும்.
சித்திரை 25 ம் நாள்- மே 09 ஆம் தேதி வியாழக்கிழமை காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் ரிஷப லக்னத்தில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது.
திருத்தேரோட்டம் சித்திரை 26ஆம் நாள் - மே 09 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் உள்ள தேர்முட்டி பகுதியில் அதிகாலை 5.15 மணிமுதல் 5.40 மணிக்கு மேஷ லக்னத்தில் நடைபெறும்.
சித்திரை மாதம் 28ஆம் தேதி மே 11ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கி ,மே 29ஆம் தேதி காலை வரை கள்ளழகர் எதிர்சேவை நடைபெறும்.
மே 12ஆம் தேதி சித்திரை திருவிழாவின் உச்சநிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.