

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் திருப்பதியில் இருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் திருச்சானூர் (அலர்மேலுமங்காபுரம்) ஸ்ரீ பத்மாவதி தாயார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில், திருமலை வேங்கடவனின் மனைவியான பத்மாவதி தேவிக்கு (அலர்மேல்மங்கை) அர்ப்பணிக்கப்பட்ட மிக முக்கியமான வைணவத் தலமாகும். திருப்பதி செல்லும் பக்தர்கள் முதலில் இத்தாயாரை தரிசிப்பதே முழுமையான பலன் தரும் என்பது ஐதீகம்.
கருவறையில் தாயார் பத்மாசன கோலத்தில், அமர்ந்த நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மேல் கைகளில் தாமரை மலர்களையும், கீழ் கைகளில் அபய மற்றும் வரத முத்திரைகளையும் கொண்டுள்ளார். இத்தலத்தில் உள்ள பத்ம சரோவரம் என்ற புஷ்கரணி (தெப்பக்குளம்) தீர்த்தத்தில் நீராடினால் சகல பாவங்களும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ஆண்டு தோறும் பத்ம சரோவர குளத்தில் ஐந்த நாட்கள் தெப்ப உற்சவம் மற்றும் வரலட்சுமி விரதம் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) நிர்வாகத்தால் நிர்வகிக்கப்படும் இக்கோவிலில் இருந்துதான், திருமலை ஸ்ரீ வெங்கடாசலபதிக்குரிய பிரசாதங்களும் சீதனப் பொருட்களும் பிரம்மோற்சவத்தின்போது சீர்வரிசையாக அனுப்பப்படுகின்றன.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ஆண்டு தோறும் வரலட்சுமி விரதம் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 21-ம் தேதி (வெள்ளிக்கிழமை) கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் கலச பூஜைகள் நடைபெறவுள்ளன.
அன்றைய தினம் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை ஆஸ்தான மண்டபத்தில் விமரிசையாக விரத பூஜை நடைபெறுகிறது. அன்றைய தினம் மாலை 6.45 மணிக்கு தாயார் தங்கத்தேரில் (ஸ்வர்ண ரதம்) எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.
வரலட்சுமி விரதத்தையொட்டி, அன்றைய தினம் அபிஷேகம், அபிஷேகத்திற்குப் பிந்தைய தரிசனம், லட்சுமி பூஜை, கல்யாணோத்ஸவம், பிரேக் தரிசனம் மற்றும் ஊஞ்சல் சேவை ஆகியவை ரத்து செய்யப் பட்டுள்ளன. அன்றைய தினம் சுமங்கலிப் பெண்களுக்கு குங்குமம், வளையல் மற்றும் புனித கயிறு வழங்கப்படுகிறது.
இதற்கான விரிவான ஏற்பாடுகளைத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் மும்முரமாக மேற்கொண்டு வருகிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை பெருவிழா, ஆடி முளைக்கொட்டு விழா, ஆவணி மூலத்திருவிழா, ஐப்பசி நவராத்திரி விழா போன்றவை சிறப்பு வாய்ந்தவை.
சித்திரை திருவிழாவில் மீனாட்சி அம்மனுக்கும், ஆவணி திருவிழாவில் சுந்தரேசுவரருக்கும் பட்டாபிஷேகம் சூட்டப்படும். அதிலும் சிவபெருமான் நடத்தி 64 திருவிளையாடல்களில் 12 திருவிளையாடல்கள் குறித்த சிறப்பு அலங்காரங்கள் ஆவணி மூலத்திருவிழாவில் நடைபெறுவது சிறப்பாகும்.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த ஆவணி மூலத்திருவிழா கடந்த ஆகஸ்ட் 10-ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், வருகிற 27-ம்தேதி வரை இந்திருவிழா நடக்கிறது.
இதில் ஒவ்வொரு நாளும் சிவபெருமானின் திருவிளையாடல்களை உணர்த்தும் வகையில் சிறப்பு அலங்காரங்கள் நடத்தப்படுகிறது. 21-ம்தேதி பாணனுக்காக சென்று அங்கம் வெட்டுதல், இரவு திருஞான சம்பந்தர் சைவ சமய ஸ்தாபித வரலாற்றும், 22-ம்தேதி காலையில் வளையல் விற்ற லீலையும், 23-ம்தேதி நரியை பரியாக்கிய லீலையும், 24-ம்தேதி பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடலும், 25-ம்தேதி விறகு விற்ற திருவிளையாடல் அலங்காரமும் நடைபெற உள்ளது.
மூலத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 22-ம்தேதி இரவு 7.35 மணிக்கு மேல் சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேகம் சூட்டும் வைபவம் நடைபெற உள்ளது. இந்த விழாவில் மீனாட்சியம்மனிடம் இருந்து செங்கோல் சுந்தரேசுவரருக்கு மாற்றப்பட்டு, இறைவன் மீண்டும் மதுரையின் மன்னராகப் பொறுப்பேற்கும் ஐதீகம் நடக்கிறது.
சித்திரை திருவிழாவின்போது மீனாட்சி அம்மனுக்கு அதிகாரம் செல்வது போல், ஆவணி மாதத்தில் மீனாட்சியிடமிருந்து சுந்தரேசுவரர் செங்கோலைப் பெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் ஐதீகமாக இப்பட்டாபிஷேகம் கோலாகலமாக நிறைவேற்றப் படுகிறது.
சித்திரை திருவிழாவின்போது மீனாட்சியம்மனுக்குப் பட்டாபிஷேகம் நடந்து, அவரே நாட்டை ஆட்சி செய்கிறார்.
ஆவணி மாதம் வந்ததும் சுந்தரேசுவரர் மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்கிறார். எட்டு மாதத்துக்கு சுந்தரேசுவரரின் ஆட்சி நடக்கும் என்பது ஐதீகம். இதைக் குறிக்கும் வகையில்தான் சுந்தரேசுவரருக்குப் பட்டாபிஷேகம் நடத்தப்படுகிறது. மீனாட்சியிடமிருந்து மதுரை நகரின் ஆட்சி அதிகாரத்தைச் சுந்தரேசுவரர் மீண்டும் ஏற்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மிக நிகழ்வு இதுவாகும்.
ஆவணி மூலத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பட்டாபிஷேகத்தை காண பக்தர்கள் திரளாக வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
26-ம் தேதி சட்டத்தேர் வீதி உலாவில் சப்தாவர்ண சப்பரத்தில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்க உள்ளனர். 27-ம்தேதி தீர்த்தவாரியுடன் ஆவணி மூலத்திருவிழா நிறைவு பெறுகிறது.